விக்கிரமசோழன் மீது ஒட்டக் கூத்தர் பாடியது விக்கிரமசோழன் உலா ஆகும்.
நூல்
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக் கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த | 1 |
ஆதிக் கடவுட் டிசைமுகனு மாங்கவன்றன் காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க | 2 |
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ் செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர் | 3 |
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் | 4 |
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும் கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய | 5 |
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும் போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக் | 6 |
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத் தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழிந் | 7 |
தோடி மறலி யொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் | 8 |
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில் வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்குப் | 9 |
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர் குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக் | 10 |
காக்குஞ் சிறபுறவுக் காகக் களிகூர்ந்து தூக்குந் துலைபுக்க தூயோனும் - மேக்குயரக் | 11 |
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியக் தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் | 12 |
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும் -இன்னருளின் | 13 |
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் | 14 |
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட | 15 |
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றம் காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப் | 16 |
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவிக் | 17 |
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை | 18 |
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் - பற்றலரை | 19 |
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல | 20 |
பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால் ஆடவரப் பாய லமைத்தோனும் - கூடல | 21 |
சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் | 22 |
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள் பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் | 23 |
சேலைத் துரந்துசிலையைத் தடிந்திருகால் சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக் | 24 |
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண் டடல்கொண்ட மாராட் ரானை - உடலை | 25 |
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி | 26 |
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும் ஆரிற் பொலிதோ ளபயற்குப் - பார்விளங்கத் | 27 |
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய | 28 |
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச் செம்மைத் தனிக்கோ றிசையளப்பத் - தம்மை | 29 |
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக் கடவுட் களிறு கவிப்பச் - சுடர்சேர் | 30 |
இணைத்தார் மகுட மிறக்கி யரசர் துணைத்தா ளபிடேகஞ் சூடப் - பணைத்தேறு | 31 |
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன் போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராரும் | 32 |
மேய் திகிரி விரிமே கலையல்குற் றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் | 33 |
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் | 34 |
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும் உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் | 35 |
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர் | 36 |
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண் பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட | 37 |
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயலின்மேல் தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைந்தடங் | 38 |
கண்ணு முலையும் பெரிய களியன்னம் எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு | 39 |
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன் எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத | 40 |
பொன்னித் திருமஞ் சனமாடிப் பூசுரர்கைக் கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை | 41 |
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலிப் பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச் | 42 |
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த | 43 |
அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்
தானத் துறைமுடித்துச் சாத்துந் தகைமையன மானக் கலன்கள் வரவருளித் - தேன்மொய்த்துச் | 44 |
சூழு மலர்முகத்துச் சொன்மா மகளுடனே தாழு மகரக் குழைதயங்க - வாழும் | 45 |
தடமுலைப் பார்மடந்தை தன்னுடனே தோளிற் சுடர்மணிக் கேயூரஞ் சூழப் - படரும் | 46 |
தணிப்பில் பெருங்கீர்த்தித் தைய லுடனே மணிக்கடகங் கையில் வயங்கப் - பிணிப்பின் | 47 |
முயங்குந் திருவுடனே முந்நீர் கொடுத்த வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா | 48 |
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்பப் - பொருந்திய | 49 |
அண்ணற் படிவத் தரும்பே ரணியணிந்து வண்ணத் தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் | 50 |
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு தாம முடிவணங்கத் தந்தனைய - காமருபூங் | 51 |
பட்டத்து யானை
கோலத் தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று காலத் ததிருங் கடாக்களிறு - ஞாலத்துத் | 52 |
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர் வானே முழங்கினுமவ் வான்றடவி - வானுக் | 53 |
கணியு மருப்பு மடற்கையு மின்மை தணியும் யமராச தண்டம் - தணியாப் | 54 |
பரிய பொருங்கோ டிணைத்துப் பணைத்தற் கரிய தொருதானே யாகிக் - கரிய | 55 |
மலைக்கோ டனைத்து மடித்திடியக் குத்தும் கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட | 56 |
ஊறு மதந்தனதே யாக வுலகத்து வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்றத் | 57 |
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும் வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய | 58 |
கொற்றப் புயமிரண்டாற் கோமா னகளங்கன் முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற | 59 |
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம் பருத்த கடாந்திறந்து பாயப் - பெருக்கத் | 60 |
துவற்று மதுரச் சுவடிபிடித் தோடி அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை | 61 |
அளித்தன னெங்கோமா னாதலா லின்று களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய | 62 |
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில் ஏற்றுப் பொருமன்ன ரின்னுயிரைக் - கூற்றுக் | 63 |
கருத்து மயிரா பதநின் றதனை இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தக்க | 64 |
கொற்றக் கவிகை நிழற்றக் குளிர்ந்திரட்டைக் கற்றைக் கவரியிளங் காலசைப்ப - ஒற்றை | 65 |
வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து | 66 |
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங்கக் கோட்புலிக் கொற்றக் கொடியோங்கச் -சேட்புலத்துத் | 67 |
உடன் வருவோர்
தென்னரு மாளுவருஞ் சிங்களருந் தேற்றுதகை மன்னருந் தோற்க மலைநாடு - முன்னம் | 68 |
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் | 69 |
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள் பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத் | 70 |
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் | 71 |
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் | 72 |
முனியும் பொழுது முரிபுருவத் தோடு குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் | 73 |
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர் வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா | 74 |
மஞ்சைக் கிழித்து வளரும் பொழிற்புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்துப் | 75 |
புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம் | 76 |
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் | 77 |
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா | 78 |
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரணச் | 79 |
செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - வெம்பிக் | 80 |
கலக்கிய வஞ்சக் கலியதனைப் பாரில் விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் | 81 |
வாரிக் குமரிமுதன் மந்தா கினியளவும் பாரித் தவனனந்த பாலனும் -பேரமரில் | 82 |
முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலும் மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழக் | 83 |
காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து | 84 |
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய | 85 |
மான வரச ரிரிய வடகலிங்கத் தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் | 86 |
கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன் வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரணக் | 87 |
கொங்கை குலைத்துக் குடகக் குவடிடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும் - அங்கத்து | 88 |
வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும் வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் | 89 |
என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்டப் - பன்மணிசேர் | 90 |
குழாங்கள்
சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார் வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் | 91 |
சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த பூந்துவரை யந்தப் புரம்போன்றும் - ஏந்திப் | 92 |
பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை புரக்குந் திருநாடு போன்றும் - வரக்கருதா | 93 |
ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன் சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் | 94 |
கண்டன் மணற்குன்றத் தன்னக் கணம்போன்றும் கொண்டலின் மின்னுக் குழாம்போன்றும் - மண்டும் | 95 |
திரைதொறுந் தோன்றுந் திருக்குழாம் போன்றும் வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் | 96 |
இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பிச் சிந்தை பரப்பித் தெருவெங்கும் - வந்தீண்டி | 97 |
உத்தி சுடர வொளிமணிச் சூட்டெறிப்பப் பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் | 98 |
இணங்கு மமுத கலசங்க ளேந்தி வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு | 99 |
பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்பக் கிஞ்சுகவாய் கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க | 100 |
வரைகொ ணெடுமாடக் கீணிலையின் மல்கி உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் | 101 |
வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும் பாணி பெயர்ப்பப் பதம்பெயர்த்துச் -சேணுயர் | 102 |
மஞ்சிவரும் வெண்பளிக்கு மாடத் திடைநிலையில் விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சனக் | 103 |
கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும் மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற | 104 |
வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி | 105 |
உருவி னொளியி னுணர்வி னுரையிற் பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து | 106 |
குழாங்களின் கூற்று
சீரள வில்லாத் திருத்தோ ளயன்படைத்த பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் | 107 |
செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே | 108 |
ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன் வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் | 109 |
எண்ணுக் கிசைய வருமே யிவனென்பார் கண்ணிற் கருணைக் கடலென்பார் - மண்ணளிக்கும் | 110 |
ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த | 111 |
கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல் செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி | 112 |
பேதை
வந்து பிறந்து வளரு மிளந்திங்கள் கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத் | 113 |
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல் வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் | 114 |
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் | 115 |
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப் பிரியாப் பருவத்துப் பேதை - பரிவோடு | 116 |
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும் பூவையு மன்னமும் பின்போதக் - காவலன் | 117 |
பொன்னிப் புகார்முத்தி னம்மனையுந் தென்னாகை நன்னித் திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் | 118 |
கொற்றைக் குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றிப் - பொற்கொடியார் | 119 |
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண் ஆதி யுகம்வந் தடிக்கொள்ள - மேதினிமேல் | 120 |
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன் மூன்று முரச முகின்முழங்க - வான்றுணைத் | 121 |
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் | 122 |
படியின் மதியும் பகலவனுந் தோற்கும் முடியி லொருகாலு மூளா - வடிவில் | 123 |
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும் நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து | 124 |
சிரிக்குந் திருப்பவளச் சேயொளியூ டாடா விரிக்குந் திருநிலவின் வீழா - பரிக்கும் | 125 |
உலகம் பரவுந் திருப்புருவத் தோரா திலக முகாம்புயத்துச் சேரா - பலவும் | 126 |
திசையை நெருக்குந் திருத்தோளிற் செல்லா இசையுந் திருமார்பத் தெய்தா - வசையிலாக் | 127 |
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா மெய்ம்மலர்ப் பேரொளியின் மீதுறா - அம்மகள் | 128 |
கண்ணு மனமுங் கழுநீர்க் குலமுழுதும் நண்ணுந் தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா | 129 |
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கித் தம்மின்க ளென்றுரைப்பத் தாயரும் - அம்மே | 130 |
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே திருமாலை தாவென்று செல்வேம் - திருமாலை | 131 |
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்னத் தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் | 132 |
மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும் ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள் - சேர | 133 |
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும் அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி | 134 |
பெதும்பை
மழலை தனது கிளிக்களித்து வாய்த்த குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு | 135 |
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின் பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி | 136 |
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் | 137 |
தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் | 138 |
பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும் பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் | 139 |
மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப் பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக் | 140 |
கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின் முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் | 141 |
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல் மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த | 142 |
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற் பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் | 143 |
கனாக் கூறுதல்
தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே | 144 |
தளரு மிடையொதுங்கத் தாழுங் குழைத்தாய் வளரு மொருகுமரி வல்லி - கிளரும் | 145 |
கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி எழுந்து கிளைகலிப்ப வேறித் - தொழுந்தகைய | 146 |
கொங்குடைய பொன்னடருஞ் சென்னிக் கொழுங்கோங்கின் பங்குடைய மூரிப் பணையணைந்து - தங்குடைய | 147 |
வண்டு முரல மணநாற வைகுவது கண்டு மகிழ்ந்தேன் கனவிலெனக் - கொண்டு | 148 |
வருக வருக மடக்கிள்ளை முத்தம் தருக தருகவெனத் தாயர் - பெருக | 149 |
விரும்பினர் புல்லி விரைய முலைவந் தரும்பின வாகத் தணங்கே - பெரும்புயங்கள் | 150 |
புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன் வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை | 151 |
அரச னபய னகளங்க னெங்கோன் புரசை மதவரைமேற் போத - முரசம் | 152 |
தழங்கு மறுகிற் றமரோடு மோடி முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்கட் | 153 |
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் | 154 |
உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கைச் செண்டாற் கிரிதிரத்த சேவகனைத் - தண்டாத | 155 |
வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளைச் சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்துக் | 156 |
கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக மங்கை பிரியாத மார்பானை - அங்கமலக் | 157 |
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலைத் - தையலும் | 158 |
கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான் மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியாக் | 159 |
காமங் கலக்கக் கலங்கிக் குழல்சரியத் தாமஞ் சரியத் தனிநின்றாள் - நாமவேற் | 160 |
சேரனு மீனவனுஞ் சேவிப்பச் செம்பியரில் வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் | 161 |
தக்குத் தகாதாளை யெய்து தரைப்படுத்தப் புக்குத் தொடைமடக்கிப் போயினான் - மைக்குழல் | 162 |
மங்கைப் பருவத் தொருத்தி மலர்பொதுளுங் கங்கைப் புளினக் களியன்னம் - எங்கோனை | 163 |
மன்னனை மன்னர் பிரானை வரோதயனை தென்னனை வானவனைச் செம்பியனை- முன்னொருநாள் | 164 |
கண்ட பெதும்பைப் பருவத்தே தன்கருத்தாற் கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிகச் | 165 |
செய்ய வடிமுதலாச் செம்பொன் முடியளவும் மைய லகல மனத்திழைத்துக் - கையினால் | 166 |
தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம் காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் | 167 |
டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத் தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி | 168 |
வருகின்றா னென்று மணியணிகள் யாவும் தருகென்றாள் வாங்கித் தரித்தாள் - விரிகோதை | 169 |
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் | 170 |
மங்கை தன்னையே ஐயுறுதல்
காட்டும் படிமக் கமலத்துக் கமலத்தை ஓட்டும் வதனத் தொளிமலர்ந்து - கேட்டு | 171 |
விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும் படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் | 172 |
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் | 173 |
அளக முதலாக வைம்பாற் படுத்த வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர | 174 |
அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள் பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் | 175 |
சுவடு படுகளபத் தொய்யில்சூழ் கொங்கை குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர | 176 |
முந்துங் கலையல்குன் மூரித் தடமகன்றும் நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து | 177 |
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ அடையுந் தனதுருக்கண் டஞ்சிக் - கொடையனகன் | 178 |
பண்டறியு முன்னைப் பருவத் துருவத்துக் கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் | 179 |
முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை | 180 |
வணங்கி வருவ தறிவ னெனவந் திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் | 181 |
இறைவ னகளங்க னெங்கோன் குமரித் துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் | 182 |
காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர் பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் | 183 |
திருக்கொள்ளு மார்பமுந் தெவ்வேந்த ரெல்லாம் வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் | 184 |
மகரக் குழைக்காது மாதரார் மாமை நுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை | 185 |
வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும் செவ்வி யழியாத் திருமுகமும் - எவ்வுருவும் | 186 |
மாறுபடா வண்ணமுந்தன் வண்ணப் படிவத்து வேறு படுவனப்பு மெய்விரும்பித் -தேறிப் | 187 |
பிறையாம் பருவத்துப் பேருவகை யாம்பல் நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனைக் | 188 |
கண்டு மனமு முயிருங் களிப்பளவிற் கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு | 189 |
நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் | 190 |
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும் நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டுப் | 191 |
பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ்ந் தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய | 192 |
மடந்தை
வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் | 193 |
ஓலக் கடலேழு மொன்றா யுலகொடுக்கும் காலக் கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை | 194 |
வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள் கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட | 195 |
வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர் முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடிப் | 196 |
போகா தொழியா திடையென்று போய்முடியல் ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய | 197 |
பந்தாடுதல்
சொல்லி யொருமடந்தை தோழியைத் தோள்வருந்தப் புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் | 198 |
சேடிய ரொப்ப வகுத்துத் திரள்பந்து கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - ஓடினால் | 199 |
என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான் தன்மாலை வாங்கித் தருகென்று - மின்னனையான் | 200 |
வட்டித் தளகமுங் கொங்கையும் வார்தயங்கக் கட்டிக் கனபந்து கைப்பற்றி - ஒட்டிப் | 201 |
பொருதிறத்துச் சேடியர்தம் போர்தொலையத் தானே இருதிறத்துக் கந்துகமு மேந்திப் - பெரிதும் | 202 |
அழுந்து தரளத் தவைதன்னைச் சூழ விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி | 203 |
சிந்த விசிறு திரையி னுரையூடு வந்த வனச மகளேய்ப்ப - முந்திய | 204 |
செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென் றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்பத் - தங்கள் | 205 |
நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென் றடங்குங் கலாப மரற்றத் - தொடங்கி | 206 |
அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்குப் பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் | 207 |
கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை | 208 |
பந்தாடி வென்று பருதி யகளங்கன் சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் | 209 |
றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ் யானைமேல் வெண்சா மரையிரட்டச் - சேனை | 210 |
மிடையப் பவளமு நித்திலமு மின்ன அடையப் பணிலங்க ளார்ப்ப - புடைபெயர | 211 |
வார்ந்து மகர வயமீன் குலமுழுதும் போந்து மறுகு புடைபிறழச் - சேர்ந்து | 212 |
பதலை முழங்கப் பகட்டேற்றி விட்ட மதலைகண் முன்னர் மலிய - விதலையராய்த் | 213 |
தாழுந் தொழிலிற் கிளைபுரக்கத் தன்னடைந்து வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்திக் | 214 |
கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும் பொன்னியுந் தோயும் புகார்விளங்க - மன்னிய | 215 |
செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும் தங்கோ மறுகிற் றலைப்பட்டுத் - தங்களில் | 216 |
ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும் கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டித் | 217 |
தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள் அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலாக் | 218 |
காக்குந் துகிலு மிலங்கு பொலன்கலையும் போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் | 219 |
மணிக்கச்சுந் தம்முடைய வான்றூசுங் கொங்கை பணிக்கக் கடைக்கண் பாரா - அணிக்கமைந்த | 220 |
குன்றாத நித்திலக் கோவையும் பொன்னிறத்த பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று | 221 |
கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்துக் | 222 |
கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித் தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும் | 223 |
கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் | 224 |
இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ | 225 |
பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல் உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் | 226 |
ஓதை மறுகி லுடன்போன போக்காலிப் பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் | 227 |
அரிவை
வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ் வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர்த் | 228 |
தட்டுஞ் சிறுகப் பெருகி மரகதத்தாற் கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் | 229 |
துகிலுங் கரப்பச் சுடர்பரப்பக் கைபோய் அகில்கின்ற வல்கு லரிவை - இகலி | 230 |
ஒருக்கி மருங்குகடிந் தொன்றினைவந் தொன்று நெருக்கிய மாமை நிரம்பித் - தருக்கி | 231 |
இடங்கொண்டு மின்னுக் கொடியொன் றிரண்டு குடங்கொண்டு நின்றதெனக் கூறத் - தடங்கொண் | 232 |
டிணைத்துத் ததும்பி யிளையோர்க ணெஞ்சம் பிணைத்துத் தடமுகட்டிற் பெய்து - பணைத்துப் | 233 |
பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞாலத் தருமை படைத்ததனத் தன்னம் - கருமை | 234 |
எறித்துக் கடைபோ யிருபுடையு மெல்லை குறித்துக் குழையளவுங் கொண்டு -மறித்து | 235 |
மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள் பதைத்து விழநிறத்திற் பட்டுத் - ததைத்த | 236 |
கழுநீர் மலரின் கவினழித்து மானின் விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் | 237 |
நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் | 238 |
வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர் சோர்ந்து மிசையசைந்த சோலையாய்ச் - சேர்ந்து | 239 |
திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் | 240 |
வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன் தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ்க் | 241 |
கோனே கவர்ந்தெம்மைக் கொண்டனன் வந்தெமக்குத் தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் | 242 |
இணைக்கையுந் தோளு மிடுதொடிக ளேந்தா துணைக்கண் டுயிற்றத் துயிலா - மணிக்கூந்தல் | 243 |
போது மறந்தும் புனையா பொலங்கச்சு மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி | 244 |
அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல் கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் | 245 |
கருப்புச் சிலையனங்கன் கையம்பால் வீழும் நெருப்புக் குருகி நிறைபோய் - இருப்புழிப் | 246 |
பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய | 247 |
கிள்ளைக்குந் தம்மிற் கிளரு மிளவன்னப் பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோய்க் - கொள்ளை | 248 |
பயக்கு மலர்க்குரவப் பந்தர்ப் படப்பை நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று | 249 |
மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால் அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி | 250 |
பெருகும் புகாரடையப் பெற்றீரான் மற்றைக் குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய | 251 |
நீலக் குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டுச் சோலைப் பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய | 252 |
பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும் நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் | 253 |
தண்டுணர்ப்பே ராரம் பலகாலுந் தைவந்து வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் | 254 |
மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் | 255 |
மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள் முன்னர்ப் பணில முழங்குதலும் - மின்னிற்போய் | 256 |
பேணுந் திருமடனு மென்றும் பிரியாத நாணும் பெருவிருப்பா னல்கூரக் - காணுங்கால் | 257 |
ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் | 258 |
மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும் போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி | 259 |
குழைய நடுவொடுக்குங் கொங்கையுந் தோளும் பழைய படியே பணைத்தான் - பிழையாத | 260 |
பொன்னித் துறைவன் பொலந்தார் பெறத்தகுவார் தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்குப் | 261 |
பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும் வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு | 262 |
தெரிவை
கோது விரவாக் கொழும்பாகு கொய்தளிரீன் போது புலராப் பொலங்கொம்பு - மீது | 263 |
முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற் புயலா லழுங்காப் புதுமின் - இயல்கொண் | 264 |
டெழுதாத வோவிய மேழிசைய வண்டு கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் | 265 |
இருளாக் கலாபத் திளந்தோகை யென்றும் தெருளாக் களியளிக்குந் தேறல் - பொருளால் | 266 |
வருந்தக் கிடையாத மாணிக்கம் யார்க்கும் அருந்தத் தெவிட்டா வமுதம் - திருந்திய | 267 |
சோலைப் பசுந்தென்ற றூதுவர வந்தி மாலைப் பொழுதுமணி மண்டபத்து - வேலை | 268 |
விரிந்த நிலாமுன்றில் வீழ்மகரப் பேழ்வாய் சொரிந்த பனிக்கற்றை தூங்கப் - பரிந்துழையோர் | 269 |
பூசிய சாந்தங் கமழப் பொறிவண்டு மூசிய மௌவன் முருகுயிர்ப்பத் - தேசிகப் | 270 |
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும் சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் | 271 |
தசாங்கம்
கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும் பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் | .272 |
சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும் காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென | 273 |
கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் | 274 |
தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான் றைவந்தான் வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த | 275 |
நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன் திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் | 276 |
பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான் தூணி தொலையச் சுளிந்துவேள் - மாண | 277 |
இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த | 278 |
வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம் | 279 |
வாடை யனைய மலயா நிலந்தனையும் கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய | 280 |
வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் | 281 |
காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன் தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் | 282 |
வாழு முலகத் தெவரு மனங்களிப்ப வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் | 283 |
எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் | 284 |
புலருந் தனையும் புலம்பினா ளாங்குப் பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் | 285 |
ஆழிப் புவன மடைய வுடையபிரான் சூழிக் கடாயானை தோன்றுதலும் -யாழின் | 286 |
யானையை நோக்கிக் கூறுதல்
இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா துழைக்கு முயிர்தழைப்ப வோடிப் - பிழைத்னளாய் | 287 |
முட்டுந் திகிரி கிரியின் முதுமுதுகிற் கட்டுங் கடவுட் கடாயானை - யெட்டும் | 288 |
தரிக்கு முலகந் தனிதரித்த கோனைப் பரிக்கு மயிரா பதமே - செருக்கிப் | 289 |
பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா | 290 |
விதையம் பொருதழிந்த விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே - சிதையாாத | 291 |
திங்கட் குலத்திற்குந் தெய்வப் பொதியிற்கும் அங்கட் பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் | 292 |
படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ இடிக்குந் தனியசனி யேறே - கடிப்பமைந்த | 293 |
யாம முரசா லிழந்த நிறைநினது தாம முரசு தரப்பெற்றேன் - நாம | 294 |
விடைமணி யோசை விளைத்தசெவிப் புண்ணின் புடைமணி யோசைப் புலர்ந்தேன் - தடைமுலைமேல் | 295 |
ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில் மாறாப் பெருங்காற்றான் மாற்றினேன் - வேறாகக் | 296 |
கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய | 297 |
காருலா மோதக் கடல்முழங்க வந்ததுயர் நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் | 298 |
என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம் நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் | 299 |
கடைபோல வென்னுயிரைக் காத்தியேல் வண்டு புடைபோகப் போதும் பொருப்பே - விடைபோய்நீ | 300 |
ராட்டுந் தடங்கலக்கின் மாரற் கயில்வாளி காட்டுந் தடமே கலக்குவாய் - கேட்டருளாய் | 301 |
கார்நாணு நின்கடத்து வண்டொழியக் காமனார் போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் | 302 |
செங்கைக் கரும்பொழியத் தின்கைக் கனங்கனார் வெங்கைக் கரும்பே விரும்புவாய் - எங்கட் | 303 |
குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய் அயிரா பதமேநீ யன்றே - பெயராது | 304 |
நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் | 305 |
பேரிளம் பெண்
மல்லற் புயத்தினகன் மால்யானைக் கைபோலக் கொல்லத் திரண்ட குறங்கினாள் - எல்லையில் | 306 |
கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவேய்ந் தாடும் படமனைய வல்குலான் - சேடியாய்த் | 307 |
தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்குக் கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை | 308 |
நிறையு மழகா னிகரழித்துச் செய்யாள் உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் | 309 |
மாலை பலபுனைந்து மான்மதச் சாந்தெழுதி வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் | 310 |
மானு மயிலு மனைய மடந்தையரும் தானு மழகு தரவிருப்பத் - தேனிமிர் | 311 |
ஊற விளம்பாளை யுச்சிப் படுகடுந் தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக | 312 |
வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும் போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி | 313 |
வருந்திச் சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி அருந்தித் தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் | 314 |
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன் நயக்கத் தகுங்கனவு நல்கும் - முயக்கத்து | 315 |
மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும் ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து | 316 |
வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில் தந்த தனதுநிழ றானோக்கிப் - பைந்துகிர்க் | 317 |
காசுசூ ழல்குற் கலையே கலையாகத் தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் | 318 |
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல் ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய | 319 |
செவ்வாய் விளர்ப்பக் கருங்கண் சிவப்பூர வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு | 320 |
கண்டு மகிழ்ந்த கனவை நனவாகக் கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் | 321 |
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற் பூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த | 322 |
தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் | 323 |
கண்டதுங் கெட்டேன் கனவை நனவாகக் கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் | 324 |
செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற் கெய்த வருமோ விவையென்று - கைதொழுது | 325 |
தேறி யொருகாலுந் தேறாப் பெருமையல் ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலாத் | 326 |
தோழியர் தோண்மே லயர்ந்தாளத் தோழியரும் ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் | 327 |
மாடப் புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும் கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் | 328 |
சாருந் திகிரி தனையுருட்டி யோரேழு பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றிக் | 329 |
காத்துக் குடையொன்றா லெட்டுத் திசைகவித்த வேத்துக் குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் | 330 |
ஏனைக் கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமே - மானப்போர் | 331 |
இம்ப ரெழுபொழில் வட்டத் திகல்வேந்தர் செம்பொன் மவுலிச் சிகாமணியே - நம்பநின் | 332 |
பாரிற் படுவன பன்மணியு நின்கடல் நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் | 333 |
வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டுப் பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணியக் | 334 |
கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும் தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத் | 335 |
துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர் பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ | 336 |
மன்னிய தொண்டை வளநாடு வாளியும் பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னித் | 337 |
திருநாடு தேருங் குறையறுப்பச் செய்தால் திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் | 338 |
வேனற் கரசன் விடுமே யவன்சினமிப் பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் | 339 |
குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி ஒன்றே யுலகுக் கொழியுமே - என்றினைய | 340 |
கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற் சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழியக் | 341 |
குத்துங் கடாக்களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி உத்துங்க துங்க னுலா. | 342 |
வெண்பா
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும் செய்ய கரிய திருமாலே - வையம் அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான். |
விக்கிரமசோழன் உலா முற்றிற்று.
No comments:
Post a Comment