சத்குரு ஆராதனை விழா
இன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை குருபூஜை விழா. அவரது தாள் பணிந்து உயர்வோம்.
மகானின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்…
ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார். ‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் சுவாமிகள் கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார். அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது.
’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.
’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.
மகான் பற்றி மேலும் விரிவாக அறிய : சத்குரு சேஷாத்ரி
சுவாமிகளின் ஆராதனை விழா இன்றும் நாளையும் அண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஊஞ்சலூர் அதிஷ்டானம், மதுரை குழந்தையான்ந்த சுவாமிகள் அதிஷ்டானம், மாடம்பாக்கம் பதினென் சித்தர் ஆலயம் போன்ற இடங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்
சுவாமி விவேகானந்தர்
இன்று சுவாமி விவேகானந்தரின் 148வது பிறந்த நாள். பாரதத்தின் புதிய எழுச்சிக்கு வித்திட்ட மகா புருடரை இன்று நினைவு கூர்வோம்.
விஸ்வநாத் ததா – புவனேசுவரி தேவி தம்பதியினருக்கு கல்கத்தாவில், 1863 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் நாள் மகவாகத் தோன்றினார் சுவாமி விவேகானந்தர். இளம் வயதிலேயே அவருக்கு தேடலும், ஞான வேட்கையும் இருந்தது. அது குருதேவரின் ராமகிருஷ்ணர் பால் அவரைச் செலுத்தியது. குருவைப் பலமுறை ஆய்ந்து பின்னர் தனது குருவாக ஏற்றுக் கொண்ட சுவாமி விவேகானந்தர் அகிலம் முழுவதும் அவரது பெருமையைப் பரப்பினார்.
ஒரு பரிவ்ராஜகராக இந்தியா முழுதும் பயணம் செய்து மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் வாடினார். அவர்கள் தம் குறையைப் போக்குவதே தமது முதற் கடமை என்று முடிவு செய்து அதற்காகவே உழைத்தார். அந்தப் பயணத்தில் அவருக்கு பல்வேறு அனுபவங்கள் வாய்த்தன.
ஒருமுறை சுவாமிகள், ஆல்வார் சமஸ்தானத்தை அடைந்தார். அங்கு இருந்த மகாராஜா மங்கள் சிங் சுவாமிகளை அன்புடன் வரவேற்றார். அவருக்கு இறைவழிபாட்டைப் பொறுத்தவரை பல சந்தேகங்கள் இருந்தன. குறிப்பாக அவர் விக்ரக வழிபாட்டை ஏற்கவில்லை. எனவே சுவாமிகளிடம், “”கல்லாலும், உலோகத்தாலும் ஆன இந்த விக்ரகங்களில் என்ன சக்தி இருக்கிறது என்று இவற்றை நாம் வணங்க வேண்டும்?, அறியாமல் இவற்றை வணங்குவது முட்டாள்தனம் அல்லவா!?”" என்று கிண்டலாகக் கேட்டார். “”விக்ரக வழிபாடு செய்வபர்கள் முட்டாள்கள்”" என்று தனது கருத்தை அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.
சுவாமிகள் அதற்கு பதிலேதும் கூறவில்லை. திவானை அழைத்தார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த மகாராஜாவின் உருவப் படத்தை கழற்றிக் கொண்டு வருமாறு பணித்தார். திவானும் அவ்வாறே கழற்றிக் கொண்டு வந்தார். பின் திவானைப் பார்த்து, “”இதன் மீது துப்புங்கள்!”" என்றார். திகைத்துப் போனார் திவான். “”அய்யோ! இது மகாராஜாவின் உருவப்படம் ஆயிற்றே! எப்படி இதில் துப்புவது”" என்றார் அச்சத்துடன்.
“”சரி உங்களுக்கு அச்சமாக இருந்தால் வேண்டாம், வேறு யாராவது வந்து துப்புங்கள்”" என்றார் சுவாமிகள். அனைவரும் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனரே அன்றி அதைச் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை.
உடனே சுவாமிகள், “” நான் என்ன உங்கள் மகாராஜாவின் முகத்தின் மீதா எச்சில் துப்பச் சொன்னேன். இந்த சாதாரண படத்தின் மீது தானே துப்பச் சொன்னேன். அதற்கு ஏன் இத்தனை தயக்கம்!”" என்றார். யாரும் பதில் பேச முடியாமல் திகைத்துப் போய் விவேகானந்தர் முகத்தையும், மன்னரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.
திவான் மட்டும் தயக்கத்துடன், “”சுவாமி, மன்னிக்க வேண்டும். இது இந்த நாட்டைக் காக்கின்ற மகாராஜாவின் உருவப்படம். இதில் துப்புவது என்பது, அவர் மேலேயே துப்பி அவமானம் செய்வது போலாகும். அதை எப்படி எங்களால் செய்ய முடியும்? ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும், எங்களால் முடியாது!”" என்று கூறினார். மன்னரோ, சுவாமிகள் வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துகிறாரோ என்று எண்ணி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனே சுவாமிகள் அவர்களை நோக்கி, “”இந்த உருவப்படம் மகாராஜாவைப் போல இருக்கிறது. ஆனால் இது மகாராஜாவாகி விட முடியாது. ஆனாலும் இதை நீங்கள் மகாராஜாவாகவே தான் கருதுகிறீர்கள். அது போலத் தான் இறைவனும். இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும், விக்ரகங்களிலும் கற்களிலும் அவரது தெய்வீக அம்சம் இருப்பதாகவே கருதி மக்கள் வழிபடுகிறார்கள். ஆராதனை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?”" என்று கூறி விளக்கினார்.
உடனே மன்னர் விக்ரக வழிபாட்டின் பெருமையையும், அதன் உண்மையையும் உணர்ந்து கொண்டார். சுவாமிகளின் மேன்மையையும் புரிந்து கொண்டார். தனது தவறான கேள்விக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டி, சுவாமிகளின் ஆசியைப் பெற்றார்.
வியக்க வைக்கும் சுவாமிகளின் அறிவாற்றல்
விவேகானந்தர் அப்போது மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் லுப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவற்றை நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வருமாறு சக துறவியான அகண்டானந்தரிடம் கூறினார். உடனே அகண்டானந்தரும் அந்த நூல்களைத் தேடிக் கொணர்ந்து தந்தார். அவை பெரிய தலையணை அளவில் இருந்தன. மறுநாளே அந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறி, அகண்டானந்தரிடம் கொடுத்து விட்டார் நரேந்திரர். நூல் நிலையத்தைப் பராமரிப்பவருக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய் விட்டது. படிக்கவில்லையா, உடனே ஏன் திருப்பிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார் அகண்டானந்தரிடம்.
அதற்கு அகண்டானந்தரோ, இல்லை சுவாமிகள் படித்து முடித்து விட்டார், அதனால் தான் திருப்பிக் கொண்டு வந்தேன் என்றார். ஆனால் அதனை நூலகப் பராமரிப்பாளர் ஏற்கவில்லை. அது சாத்தியமே இல்லை என்றும், இவ்வளவு பெரிய புத்தகங்களை ஒரே நாளில் யாராலும் படிக்கவே முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். இந்த விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு அந்த நூலகத்தை அடைந்தார். அதன் பராமரிப்பாளரிடம் பேசினார். தான் அந்தப் புத்தகத்தை படித்து முடித்து விட்டதாகவும், அது உண்மைதான் என்றும், வேண்டுமானால் தன்னிடம் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறினார்.
அந்த நூலகரும் அதற்கு ஒப்புக் கொண்டு, அந்தப் பெரிய புத்தகங்களில் இருந்து பலவாறான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சளைக்காமல் ஒவ்வொன்றிற்கும் தெள்ளத் தெளிவாக பதில் கூறினார் சுவாமி விவேகானந்தர். நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிகள் ஒரு மிகப் பெரிய மேதை என்பதை ஒப்புக் கொண்டார். அதே சமயம் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு நரேந்திரர், “”ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்தால், அவனால் எதுவும் சாத்தியமாகும். பிரம்மச்சரிய வலிமைக்கு முன் இதெல்லாம் உண்மையில் வெகு சாதாரணம்“” என்று விளக்கினார். சுவாமிகளின் விளக்கத்தைக் கேட்ட நூலகர் வியப்படைந்ததுடன், சுவாமிகளின் பெருமையை அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment