Thursday 22 March 2012

வான்கோழி வளர்ப்பு


வான்கோழி வளர்ப்பு

இந்தியாவில் வளர்க்கப்படும் குறிப்பிடத்தக்க வான்கோழியினங்கள்
1. அகன்ற மார்புடைய வெண்கல இனம்
இந்த இனத்தை சேர்ந்த வான்கோழிகளின் இறகுகள் வெண்கல நிறத்தில் இல்லாமல், கறுப்பு நிறத்தில் இருக்கும். பெட்டை வான்கோழிகளின் மார்பில் இறகுகள் கறுப்பு நிறத்தில் வெள்ளைநிற நுனியுடன் காணப்படும். இதனைக் கொண்டு சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை சீக்கிரமாக, அதாவது 12 வார வயதிலேயே கண்டுபிடிக்கமுடியும்
2. அகன்ற மார்புடைய வெள்ளை இனம்
இந்த இனம், அகன்ற மார்புடைய வெண்கலம் மற்றும் வெள்ளை இறகுகளையுடைய வெள்ளை ஹாலந்து வான்கோழிகளின் கலப்பு ஆகும். அதிக வெப்பத்தினைத் தாங்கக்கூடியதாகவும்  மற்றும் இறைச்சி சுத்தமாக இருப்பதாலும் வெள்ளை நிற இறகுகளுடைய வான்கோழிகள் இந்தியாவின் வேளாண்-சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.
3. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம்
இவ்வினம் அகன்ற மார்புடைய வெள்ளையின வான்கோழிகளின் நிறம் மற்றும் வடிவத்தை ஒத்ததாகவும், உருவத்தில்  அதை விட சிறியதாகவும்  இருக்கும். இவற்றின் முட்டை உற்பத்தித்திறன், முட்டை பொரிக்கும் மற்றும் கருவுறும் திறன் மற்ற இனங்களை விட அதிகம். இவற்றின் அடைகாக்கும் காலம் மற்ற இனங்களை விட குறைவாக இருக்கும்.
4. நந்தனம் வான்கோழி 1
இது கருப்பின நாட்டு வான்கோழியும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழி இனமும் சேர்ந்த கலப்பினம்.  இது தமிழக சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது
வான்கோழி வளர்ப்புப் பண்ணையின் பொருளாதார காரணிகள்
சேவல் : பெட்டை விகிதம்
1:5
சராசரி முட்டையின் எடை
65 கிராம்
ஒரு நாள் வான்கோழிக் குஞ்சின் எடை
50 கிராம்
இனப்பெருக்க வயது
30 வாரங்கள்
வாழ்நாளில் சராசரியாக இடும் முட்டைகள் எண்ணிக்கை    
80 -100
அடைகாக்கும் காலம்
28 நாட்கள்
இருபது வாரத்தில்  வான்கோழியின் உடல் எடை
பெட்டை  - 4.5 – 5 கிலோ
சேவல்  - 7 - 8 கிலோ  
முட்டையிடும் காலம்
24 வாரங்கள்
விற்பனைக்குறிய வயது
சேவல்
பெட்டை

14 -15 வாரங்கள்
17 – 18  வாரங்கள்
விற்பனைக்குறிய உடல் எடை
சேவல்
பெட்டை

7.5 கிலோ
5.5 கிலோ
தீவனத்தை மாமிசமாக மாற்றும் திறன்
2.7 -2.8
விற்பனை வயது வரை சராசரியாக உட்கொள்ளும் தீவனத்தின் அளவு
சேவல்
பெட்டை

24 -26 கிலோ
17 – 19 கிலோ
குஞ்சுப்பருவத்தில் இறப்பு
3-4%
வான்கோழிப்பண்ணையின் மேலாண்மை
I. வான்கோழிகளில் அடைகாத்தல் முறைகள் 
வான்கோழிகளில் அடைகாக்கும் காலம் 28 நாட்களாகும். முட்டைகளை அடைக்கு வைப்பதில் இரு முறைகள் உள்ளன.
(a)இயற்கையாக வான்கோழிகளைக் கொண்டு அடைகாத்தல் :
இயற்கையாகவே வான்கோழிகள் நன்கு அடைகாக்கும் திறனுடையவை. நல்ல அடைகாக்கும் வான்கோழிகள் பத்து முதல் பதினைந்து முட்டைகள் வரை அடைகாக்கும். சுத்தமான, நல்ல வடிவமுடைய முட்டைகளை அடைக்கு வைத்தால் 60 முதல் 80 சத முட்டைகள் பொரிந்து ஆரோக்கியமான குஞ்சுகள் கிடைக்கும்
(b) செயற்கை முறை அடைகாத்தல்:
செயற்கைமுறையில் குஞ்சுப்பொரிக்கும் கருவியைக் கொண்டும் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பொறிக்கலாம். குஞ்சுப்பொரிக்கும் கருவியில் இருக்கும் செட்டர் மற்றும் ஹேட்சரில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளை பின்வருமாறு அமைக்க வேண்டும்:
வெப்பநிலை (டிகிரி பாரன்ஹீட்)
ஈரப்பதம் (சதவீதம்)
செட்டர்
99.5
61-63
ஹேட்சர்
99.5
85-90
வான்கோழிப்பண்ணையில் முட்டைகளை அடிக்கடி சேகரித்தால் முட்டைகள் உடைவதையும் முட்டைகள் அழுக்காவதையும் தடுக்கலாம். ஏனெனில் அழுக்கடைந்த முட்டைகளில் இருந்து பெறப்படும் குஞ்சுகள் பெரும்பாலும் ஆரோக்கியமானவையாக இருக்காது. அடைகாக்கும் கருவியில் முட்டைகளை மணிக்கொரு முறை திருப்பிவிட வேண்டும்.
II. குஞ்சுப்பருவம்
வான்கோழிகளில் முதல் நான்கு வார வயது குஞ்சுப்பருவமாகும். ஆனால் குளிர்காலங்களில் இப்பருவம் ஐந்து முதல் ஆறு வாரங்கள் நீடிக்கக்கூடும். பொதுவாக கோழிக்குஞ்சுகளை ஒப்பிடுகையில் வான்கோழிக்குஞ்சுகளுக்கு, இரண்டு மடங்கு இடம் தேவைப்படும். குஞ்சுகள் வளரும் கொட்டகையை, அகச்சிவப்பு பல்புகள் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் அடைகாக்கும் கருவிகளைக் கொண்டு, மிதமான வெப்பத்தில் பராமரிக்க வேண்டும்.
குஞ்சுப்பருவத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயங்கள்
  • முதல் நான்கு வார வயதில் ஒரு குஞ்சுக்கு ஒன்றறை  சதுரடி இடம் தேவைப்படும்
  • குஞ்சுக்கொட்டகையை குஞ்சுகள் பொறிப்பதற்க்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே தயாராக வைத்திருக்க வேண்டும்
  • இரண்டு மீட்டர் விட்டத்திற்கு கூளத்தினை ஆழமாக மெத்தை போல் பரப்பி வைக்கவேண்டும்
  • வெப்பமளிக்கும் பல்பு அல்லது எரிவாயு மூலம் இயங்கும் பல்பிலிருந்து குஞ்சுகள் தூரமாக போவதை தவிர்க்க,  ஆழ்கூளத்தினை சுற்றி குறைந்தது ஒரு அடி உயரத்திற்கு தடுப்பு வைக்கவேண்டும்.
  • முதலாம் வாரத்தில் குஞ்சுக்கொட்டகையின் வெப்பநிலை 95º F இருக்குமாறும், அடுத்த  நான்கு வாரம் வரை, வாரத்திற்கு 5º F   வரை வெப்பநிலையை குறைத்துக்கொண்டே வரவேண்டும்.
  • ஆழம் குறைந்த தண்ணீர்த் தட்டுகளையே பயன்படுத்தவேண்டும்
முதல் நான்கு வார காலத்தில் சராசரியாக ஆறு முதல் பத்து சதம் வரை இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் சில நாட்களில், மங்கலான கண்பார்வை மற்றும் பயத்தின் காரணமாக தீவனம் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு குஞ்சுகள் தயக்கம் காட்டும். அந்த சமயங்களில் குஞ்சுகளுக்கு தீவனத்தை கட்டாயப்படுத்தி தீவன்ம் கொடுக்கவேண்டும்.
கட்டாயப் படுத்தி தீவனம் அளித்தல்
குஞ்சுப்பருவத்தில் பட்டினியால் குஞ்சுகள் இறப்பது முக்கிய காரணமாகும். எனவே குஞ்சுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பத்து குஞ்சுகளுக்கு, நாளொன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில்  100 மில்லி பாலுடன் ஒரு முட்டையை கலந்து, முதல் பதினைந்து நாட்களுக்குக் கொடுக்கவேண்டும். இவ்வாறு கொடுப்பதால் குஞ்சுகளின் புரத மற்றும் சக்தி தேவை பூர்த்தியாகிறது.
வான்கோழிக்குஞ்சுகளை தீவனத்தை நோக்கி ஈர்ப்பதற்கு தீவனத்தட்டினை விரல்களால் லேசாகத் தட்டலாம். கூழாங்கற்கள் அல்லது வண்ணக்கற்களை தண்ணீர் மற்றும் தீவனத்தட்டில் போட்டு வைத்தாலும் குஞ்சுகள் தீவனம் மற்றும் தண்ணீர் நோக்கி ஈர்க்கப்படும். வான்கோழிகளுக்கு பசுந்தீவனம் மிகவும் பிடித்தமான உணவு என்பதால் நறுக்கப்பட்ட இலைகளை தீவனத்துடன்  கலந்து வைத்தால் அவற்றின் உண்ணும் திறன் அதிகரிக்கும். வண்ணம் தீட்டப்பட்ட  முட்டை அட்டைகளை தீவனத்தட்டாக முதல் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
ஆழ்கூளப் படுக்கை
வான்கோழிக்குஞ்சு கொட்டகையில் பொதுவாக மரத்தூள், நெல் உமி, நறுக்கிய வைக்கோல் போன்ற பொருட்களை ஆழ்கூளப் படுக்கையமைக்க உபயோகப்படுத்தலாம். முதலில் ஆழ்கூளம் சுமார் இரண்டு அங்குலம், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முதல் நான்கு அங்குல உயரத்திற்க்கு அதிகரிக்கலாம். தகுந்த கால இடைவெளியில் ஆழ்கூளத்தினை அடிக்கடி கிளறி விட்டால் ஆழ்கூளம் கெட்டியாகாமல் இருக்கும்.
III. வான்கோழி வளர்ப்பு முறைகள்
வான்கோழிகளை திறந்த வெளியில் அல்லது கொட்டிலில் அடைத்தும் வளர்க்கலாம்
அ. திறந்தவெளி வளர்ப்பு முறை
நன்மைகள்
  • தீவனச்செலவு 50 சதவிகிதம் வரை குறைவு
  • குறைந்த மூதலீடு
  • மூதலீட்டுக்கான லாப விகிதம் அதிகம்
திறந்தவெளி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிடப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200 முதல் 250 பெரிய வான்கோழிகளை வளர்க்கலாம். இரவு நேரங்களில் கோழிகள் அடைவதற்க்கும், மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்க்கும், ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி என்ற அளவில் கொட்டகை  அமைக்கவேண்டும். நிலங்களில்  மரங்களை நடுவதால் நிழலும், குளிர்ந்த சூழ்நிலையும் நிலவும். வான்கோழிகளை வளர்க்கும் நிலங்களை சுழற்சி முறையில் பயன்படுத்தினால்  ஒட்டுண்ணிகளின் தாக்கத்தினை குறைக்கலாம்.
திறந்தவெளியில் தீவனம் அளித்தல்
வான்கோழிகளை திறந்தவெளிகளில் வளர்க்கும் போது அவை மண்புழுக்கள், சிறிய பூச்சிகள், நத்தைகள், சமையலறைக்கழிவுகள், கரையான் போன்ற புரதம் அதிகமான பொருட்களை உண்பதால் தீவனச்செலவு 50 சதவிகிதம் வரை குறைகிறது. இது தவிர பயிறு வகை தீவனங்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் முயல் மசால் போன்றவற்றை வான்கோழிகளுக்கு உணவாக அளிக்கலாம். திறந்த வெளியில் சுற்றித்திரியும் வான்கோழிகளின் கால்களில் ஏற்படும் சுணக்கம் மற்றும் ஊனத்தைத் தவிர்க்க, வான்கோழி ஒன்றிற்கு வாரத்திற்கு 250 கிராம் அளவு சுண்ணாம்பு சத்து கொடுக்க வேண்டும். காய்கறிக்கழிவுகளை கொடுப்பதன் மூலம், தீவனச்செலவினைக் பத்து சதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது.
வான்கோழிக் குஞ்சுகளின் சுகாதார மேலாண்மை
திறந்தவெளியில் வளர்க்கப்படும் வான்கோழிகள் அக ஒட்டுண்ணிகள் (உருளைப்புழுக்கள்) மற்றும் புற ஒட்டுண்ணிகள் (கோழிப்பேன்) தாக்குதலுக்கு அதிகம் ஆளாகிறது. எனவே மாதமொரு முறை வான்கோழி குஞ்சுகளுக்கு குடற்புழு நீக்கமும், மருந்து குளியலும் செய்வதன் மூலம் இவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ஆ. கொட்டிலில் அடைத்து வளர்க்கும் முறை
நன்மைகள்
  • வான்கோழிகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்
  • நோய்த்தடுக்கும் முறைகளும் நல்ல மேலாண்மையும் சாத்தியம்
கொட்டகை அமைப்பு
  • கொட்டகைகள் வான்கோழிகளை வெயில், மழை, காற்று மற்றும் இதர விலங்குகளிடமிருந்து பாதுகாத்து வசதியினை அளிக்கின்றது
  • வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில், கொட்டகையின் நீளப் பகுதி கிழக்கிலிருந்து மேற்காக இருக்கும்படி அமைக்கவேண்டும்
  • இரண்டு கொட்டகைகளுக்கு இடையில் குறைந்தது இருபது  மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். குஞ்சுகள் வளரும் கொட்டகைகள், வளர்ந்த வான்கோழிகள் வளரும் கொட்டகைகளிலிருந்து குறைந்தது 50 முதல் 100 மீட்டர் இடைவெளியில் இருக்கவேண்டும்
  • திறந்தவெளிக் கொட்டகையின்  அகலம் ஒன்பது  மீட்டர்களுக்கு மேல் இருக்கக்கூடாது
  • கொட்டகைகளின் உயரம் தரையிலிருந்து கூரைக்கு 2.6 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை இருக்கலாம்
  • கொட்டகையின் கூரை பக்கவாட்டுச் சுவரிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் அளவிற்கு வெளியில் நீட்டியிருக்குமாறு அமைத்தால் மழைக்காலங்களில் மழைச்சாரல் கொட்டகைகளின் உள்ளே செல்வது தடுக்கப்படும்.
  • கொட்டகையின் தரை விலை மலிவாகவும், தரமானதாகவும், பாதுகாப்பாகவும் அமைக்கப்படவேண்டும். பொதுவாக ஈரத்தை உறிஞ்சாத கான்கிரீட் தரைகளே வான்கோழிக்கொட்டகைகளுக்கு ஏற்றவை.
ஆழ்கூளமிடப்பட்ட தரைக்கொட்டகைகளில் வான்கோழிகளை வளர்க்கும் போது பொதுவாக முட்டைக்கோழிகளை பராமரிக்கும் முறைகளை கையாள வேண்டும். வான்கோழிகளுக்கு போதுமான தங்குமிட அளவு, தண்ணீர் மற்றும் தீவனத்தட்டிற்க்கு தகுந்த இடவசதி கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
IV. வான்கோழிகளை பிடிக்கும் மற்றும் கையாளும் முறைகள்
எல்லா வயதுடைய வான்கோழிகளையும் ஒரு குச்சியினைக் காட்டி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லலாம். வான்கோழிகளை பிடிப்பதற்கு இருட்டான அறை நல்லது. இருட்டு அறைகளில் வான்கோழிகளின் இரண்டு கால்களையும் பிடித்து கொள்வதன் மூலம் பிடிக்கலாம். ஆனால் வளர்ந்த வான்கோழிகளை மூன்றிலிருந்து நான்கு நிமிடங்களுக்கு மேல் தலைகீழாக தொங்கவிடக்கூடாது.
V. வான்கோழிகளுக்குத் தேவைப்படும் தங்குமிடம், தீவனம் மற்றும் தண்ணீர் வசதி
வயது
தங்குமிடஅளவு
தீவன இட அளவு (செ.மீ)
(நீளவாட்டு தொட்டி)  
தண்ணீர் தட்டின் அளவு (செ.மீ)
(நீளவாட்டு தொட்டி)
0-4 வாரம்
1.25
2.5
1.5
5-16 வாரம்
2.5
5.0
2.5
16-29 வாரம்
4.0
6.5
2.5
இனப்பெருக்கப் பருவத்தில் உள்ள வான்கோழிகள்
5.0
7.5
2.5
வான்கோழிகள் பொதுவாக பயந்த சுபாவமுடையவை. எனவே பண்ணைக்குள் வெளியிலிருந்து பார்வையாளர்கள் நுழைவதை கட்டுப்படுத்தவேண்டும்.
VI. அலகு வெட்டுதல்
வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்வதை தவிர்க்கவும், இறகுகளை பிடுங்கிக்கொள்வதைத் தடுக்கவும் அவற்றின் அலகுகளை வெட்டிவிட வேண்டும். அலகுகளை பொறித்த நாளிலிருந்து, மூன்றிலிருந்து ஐந்து வாரங்களுக்குள் மூக்குத்துவாரத்திலிருந்து அலகின் நுனி வரை பாதியளவு அலகினை வெட்டிவிட வேண்டும்
VII. வான்கோழிகளின் மூக்கிலிருந்து வளரும் சதைப்பற்றை நீக்குதல்
வான்கோழிகளின் அலகின் அடிப்புறத்திலிருந்து வளர்ந்திருக்கும் சதைப்பகுதியினை நீக்குவதன் மூலம் வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும் போதும், சண்டையிட்டுக்கொள்ளும் போதும் அவற்றிற்கு ஏற்படும் தலைக்காயத்தினை தவிர்க்கலாம். வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே விரல்களைக் கொண்டு அழுத்துவதன் மூலம் நீக்கி விடலாம். பின்பு மூன்று வார வயதில் கத்தரிக்கோல் கொண்டு தலையை ஒட்டி, இச்சதைப்பற்றினை கத்திரிக்கவேண்டும்.
VIII. வான்கோழிகளின் கால் விரல் நகங்களை வெட்டுதல்
வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே அவற்றின் வெளிப்புறம் உள்ள நகத்தை வெட்டிவிட வேண்டும்.
IX. தீவன மேலாண்மை
வான்கோழிகளுக்கு தீவனத்தை அரைத்தும்,  குச்சி வடிவிலும் கொடுக்கலாம்
  • கோழிகளுடன் ஒப்பிடும் போது வான்கோழிகளுக்கு அதிகமாக புரதம், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவைப்படும்
  • பெட்டை மற்றும் சேவல்களுக்குத் தேவைப்படும் சக்தி மற்றும் புரதத்தின் அளவு வேறுபடுவதால் அவற்றை தனித்தனியே வளர்ப்பது நலம்
  • வான்கோழிகளுக்கு தீவனத்தட்டிலேயே தீவனம் அளிக்கவேண்டும்.  தரையில் தீவனத்தினை போடக்கூடாது
  • ஒரு வகை தீவனத்திலிருந்து மற்றொன்றுக்கு  மாற்றும் போது சிறிது சிறிதாக மாற்ற வேண்டும்
  • வான்கோழிகளுக்கு எப்பொழுதும் சுத்தமான தண்ணீர் அளிக்கவேண்டும்.
  • கோடை காலங்களில் அதிகப்படியான தண்ணீர் தட்டுகளை வைக்க வேண்டும்.
  • கோடை காலங்களில் குளிர்ந்த நேரங்களில் வான்கோழிகளுக்கு தீவனம் அளிக்கவேண்டும்.
  • வான்கோழிகளின் கால்கள் வலிமையற்று இருப்பதை தவிர்க்க ஒரு வான்கோழிக்கு 30 முதல் 40 கிராம் வீதம் கிளிஞ்சல் கொடுக்கவேண்டும்
பசுந்தீவனம் அளித்தல்
தீவிர முறை வளர்ப்பில், வான்கோழிகளுக்கு பசுந்தீவனத்தை மொத்த தீவனத்தில் 50 சதவிகிதம் வரை அளிக்கலாம். புதிதாக அறுக்கப்பட்ட குதிரை மசால் எல்லா வயது வான்கோழிகளுக்கும் ஏற்றது. குதிரை மசால் தவிர வேலிமசால் மற்றும் முயல் மசால் போன்ற பசுந்தீவனங்களையும் நறுக்கி வான்கோழிகளுக்கு தீவனமாக அளித்தால் தீவனச்செலவினை பெருமளவு குறைக்கலாம்
வான்கோழிகளின் உடல் எடை மற்றும் தீவன தேவைகள் 
வயது (வாரங்கள்)
சராசரி உடல் எடை (கிலோ கிராம்)
எடுத்துக்கொண்ட மொத்த தீவனம் (கிலோ கிராம்)
தீவன மாற்றுத்திறன்

சேவல்
பெட்டை
சேவல்
பெட்டை
சேவல்
பெட்டை
4ம் வாரம் வரை
0.72
0.63
0.95
0.81
1.3
1.3
8ம் வாரம் வரை
2.36
1.90
3.99
3.49
1.8
1.7
12ம் வாரம் வரை
4.72
3.85
11.34
9.25
2.4
2.4
16ம் வாரம் வரை
7.26
5.53
19.86
15.69
2.8
2.7
20ம் வாரம் வரை
9.62
6.75
28.26
23.13
3.4
2.9
X. வான்கோழிகளின் இனப்பெருக்கம்
இயற்கை முறையில் இனப்பெருக்கம்
வான்கோழிச் சேவல், பெட்டையுடன் சேரும் போது அதன் இறகுகளை பரப்பி அடிக்கடி ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும். இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்வதற்கு நடுத்தர வான்கோழிகளின் ஐந்து பெட்டைகளுக்கு ஒரு சேவல் வீதமும், பெரிய வான்கோழி இனங்களுக்கு மூன்று பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வளர்ந்த பெட்டை வான்கோழியிடமிருந்து சராசரியாக 40 முதல் 50 குஞ்சுகள் வரை உற்பத்தியை எதிர்பார்க்கலாம். ஒரு வருடத்திற்க்கு மேற்பட்ட வான்கோழி சேவல்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவற்றின் விந்துக்களின் கருவூட்டும் திறன் குறைவாக இருக்கும். பொதுவாக ஒரு சேவலை மட்டும் பெட்டை வான்கோழிகளுடன் நீண்ட நாட்களுக்கு இனவிருத்திக்கு வைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட பெட்டையிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிடும். இதனைத் தவிர்க்க இனவிருத்திக்கு பயன்படும் சேவலை பதினைந்து நாட்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்.
செயற்கை முறையில் கருவூட்டல்
சீதோஷ்ண நிலையினை பொருட்படுத்தாமல் செயற்கை முறை கருவூட்டலின் மூலம் அதிகமான கருவுற்ற முட்டைகளை வான்கோழிகளிடமிருந்து பெறமுடியும் என்பதே செயற்கை முறை கருவூட்டலின் நன்மையாகும்.
வான்கோழி சேவலிடமிருந்து விந்தினை சேகரித்தல்
  • விந்து சேகரிக்கும் போது வான்கோழி சேவலின் வயது 32 லிருந்து 36 வாரங்களாக இருக்கவேண்டும்
  • விந்து சேகரிப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் சேவல்களை தனியாக பிரித்து வைக்க வேண்டும்
  • சேவலை விந்து சேகரிக்கும் போது சரியாக கையாள வேண்டும்.  சேவலிடமிருந்து விந்து சேகரிக்க இரண்டு நிமிடங்களே போதும்.
  • சேவல்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவை என்பதால் தொடர்ந்து ஒரு நபரே கையாளவேண்டும்.
  • ஒரு வான்கோழி சேவலிடமிருந்து சராசரியாக 0.15 லிருந்து 0.30 மில்லி வரை விந்து கிடைக்கும்
  • விந்தினை சேகரித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதனை உபயோகித்துவிட வேண்டும்
  • சேவலிடமிருந்து ஒரு வாரத்தில் மூன்று முறையோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ விந்தினை சேகரிக்கலாம்
பெட்டை வான்கோழிகளை செயற்கை முறை கருவூட்டல் செய்தல்
  • வான்கோழிப்பண்ணையில் வான்கோழிகள் 8 லிருந்து 10 சதவிகித முட்டை உற்பத்தி அளவை அடைந்தவுன் செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்
  • பெட்டைகளை மூன்று வாரத்திற்கொரு முறை சேவல்களிடமிருந்து சேகரித்த விந்தினைக் கொண்டு செயற்கை முறை கரூவூட்டல் செய்ய வேண்டும் (ஒரு பெட்டைக்கு 0.025 - 0.030 மிலி என்ற அளவில்)
  • பனிரெண்டு வாரம் கழித்து வான்கோழி பெட்டைகளை 15 நாட்களுக்கொரு முறை செயற்கை முறை கருவூட்டல் செய்யலாம்
  • செயற்கை முறை கருவூட்டலை பொதுவாக மாலை ஐந்து  மணியளவில் செய்யவேண்டும்
  • 16 ம் வாரங்களில், செயற்கை முறை கருவூட்டலின் மூலம் 80 லிருந்து 85 சதவிகித முட்டைகள் கருவுற்றிருக்கவேண்டும்
XI. வான்கோழிகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்
நோய்நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி  நோயின் அறிகுறிகள்நோய்த்தடுப்பு முறைகள்
அரிசோனியாசிஸ்சால்மொனெல்லா அரிசோனாபொதுவாக 3-4 வார வயது
டைய குஞ்சுகள் இந்நோய்த் தாக்குதலுக்குள்ளாகின்றன. பாதிக்கப்பட்ட குஞ்சுகள் கண்கள் பாதிக்கப்பட்டு குருடாதல்
இந்நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளை இனப்பெருக்கத்திற்குப்  பயன்படுத்தக்கூடாது. மேலும் குஞ்சுப்பொரிப்பகங்களை புகைமூட்டம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
நீலக்கொண்டை நோய்கொரோனா வைரஸ்சோர்வடைதல், எடை குறைதல், நுரையுடன் கூடிய தண்ணீர் போன்ற கழிச்சல், தலை மற்றும் தோல் கருத்துப்போதல்பண்ணையினை காலி செய்து கிருமி நீக்கம் செய்தல். பண்ணையில் சிறிது காலத்திற்கு வான்கோழிகளை வளர்க்காமல் இருத்தல்.
நீண்ட நாட்களாக இருக்கும் சுவாச நோய்மைக்கோபிளாஸ்மா கேலிசெப்டிகம்இருமல், தும்மல் மற்றும் மூக்குத்துவாரங்களிலிருந்து சளி வடிதல்மைக்கோபிளாஸ்மா தொற்று  இல்லாத வான்கோழிகளை வாங்கி வளர்த்தல்
எரிசிபிலேஸ்எரிசிபிலோத்ரிக்ஸு ரூசியோபதிடேதிடீர் இறப்பு, தாடி வீக்கம், முகப்பாகங்கள் நிறம் மாறுதல், தலை தொங்கி விடுதல்தடுப்பூசி அளித்தல்
கோழி காலராபாஸ்சுரெல்லா மல்டோசிடாவான்கோழிகளின் தலை இளஞ்சிவப்பு நிறமாதல், பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த கழிச்சல், திடீர் இறப்புசுகாதாரமான பண்ணை பராமரிப்பு மற்றும் இறந்த வான்கோழிகளை  முறையாக அகற்றுதல்
கோழி அம்மைபாக்ஸ் வைரஸ்வான்கோழிகளின் கொண்டை மற்றும் தாடிகளில் சிறிய மஞ்சள் நிற கொப்புளங்கள் உண்டாகி பின்பு அது காய்ந்து புண் உண்டாகுதல்தடுப்பூசி அளித்தல்
இரத்தக்கழிச்சல்வைரஸ்ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டு வான்கோழிகள் இறத்தல்தடுப்பூசி
இன்பெக்சியஸ் சைனோவைட்டிஸ்மைக்கோபிளாஸ்மா கேலிசெப்டிகம்வான்கோழிகளின் கால் முட்டிகள் மற்றும் பாதம் வீக்கம், நொண்டுதல், நெஞ்சுப்பகுதியில் கொப்புளங்கள் தோன்றுதல்நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிகளை வாங்குதல்
இன்பெக்சியஸ் சைனுசைட்டிஸ்பாக்டீரியாமூக்கிலிருந்து சளி வடிதல், இருமல்நோய்த்தொற்று இல்லாத பண்ணைகளிலிருந்து வான்கோழிக்குஞ்சுகளை வாங்குதல்
மைக்கோடாக்சிகோஸிஸ்பூஞ்சைகல்லீரல் இரத்தத் திட்டுக்களுடன் வெளிறி கொழுப்பு படிந்து காணப்படுதல்,பூஞ்சைகளால் தீவனம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
நியுகேசில் நோய்பாராமிக்ஸோ வைரஸ்இளைப்பு வாங்குதல், மூச்சு விட சிரமப்படுதல், கழுத்தை திருகிக்கொள்ளுதல், வலிப்பு மற்றும் தோல் போன்ற ஓடுகளையுடைய முட்டையிடுதல்தடுப்பூசி போடுதல்
பாரா டைபாய்டுசால்மொனல்லா புள்ளோரம்வான்கோழிக்குஞ்சுகளில் கழிச்சல்நோய்த் தடுப்பு மற்றும் பண்ணைச்சுகாதாரம்
வான்கோழி கொரைஸாபார்டொடெல்லா ஏவியம்மூச்சு விடும் போது சத்தம் உண்டாதல், மூக்குத்துவாரங்களிலிருந்து அதிகமான அளவு சளி வடிதல்தடுப்பூசி போடுதல்
காக்ஸிடியோஸிஸ்காக்ஸிடியாஇரத்தக்கழிச்சல் மற்றும் எடைகுறைதல்முறையான பண்ணை சுகாதாரம் மற்றும் ஆழ்கூள மேலாண்மை
வான்கோழி வெனிரியல் நோய்மைக்கோபிளாஸ்மா மெலியாகிரிடிஸ்முட்டைகள் கருவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல்கடுமையான பண்ணை சுகாதாரம்
வான்கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை :
முதல் நாள்  
இராணிக்கெட் அல்லது நியுகேசில் நோய்க்கான –பி1 தடுப்பூசி
4 மற்றும் 5 ம் வாரங்கள்
கோழி அம்மை தடுப்பூசி
6 ம் வாரம்
இராணிக்கெட் அல்லது நியுகேசில் நோய்க்கான ஆர் 2 பி–தடுப்பூசி
8 மற்றும் 10 ம் வாரங்கள்
கோழி காலரா தடுப்பூசி
வான்கோழிகளை சந்தைப்படுத்துதல் அல்லது
சேவல் மற்றும் பெட்டை வான்கோழிகள் 16ம் வார வயதில் முறையே 7.26 கிலோ மற்றும் 5.53 கிலோ உடல் எடையை அடையும். இதுவே வான்கோழிகளை விற்க்கக்கூடிய சரியான சமயமாகும்.
வான்கோழி முட்டை :
  • வான்கோழிகள் 30 ம் வாரம் முட்டையிட ஆரம்பித்து தொடர்ந்து 24 வாரங்கள் (54 ம் வாரம்) வரை முட்டையிடும்
  • போதுமான தீவனம் மற்றும் செயற்கை முறையில் வெளிச்சமளிக்கும் போது வான்கோழிகள் வருடத்திற்கு 60 லிருந்து 100 முட்டைகள் வரை இடும்
  • 70 சதவிகித வான்கோழிகள் முட்டைகளை பிற்பகலில் தான் இடும்.
  • வான்கோழி முட்டைகளின் வெளிப்புறத்தில் பொட்டுகள் போன்று காணப்படும். ஒரு வான்கோழி முட்டையின் எடை 85 கிராம் இருக்கும்
  • வான்கோழி முட்டையின் ஒரு முனை கூர்மையாவும் அப்பகுதியில் முட்டையின் ஓடு தடிமனாகவும் இருக்கும்
  • வான்கோழி முட்டையில், 13.1 சதம் புரதம், 11.8 சதம் கொழுப்பு, 1.7 சதம் மாவுச்சத்து மற்றும் 0.8 சதம் தாது உப்புகளும் இருக்கின்றன.  அது போக, முட்டையின் ஒரு கிராம் மஞ்சள் கருவில் 15.67 லிருந்து 23.97 மில்லிகிராம் கொலஸ்டிராலும்  இருக்கிறது.   
வான்கோழி இறைச்சி :
வான்கோழி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இல்லாததால் மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர். வான்கோழி இறைச்சியில் 24 சதம் புரதம், 6.6 சதம் கொழுப்பு மற்றும் நூறு கிராமில் 160 கலோரி எரிசக்தியும் உள்ளன.  மேலும் தாது உப்புகளான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, செலினியம் மற்றும் சோடியம் ஆகியனவும் உள்ளன. உடலுக்கு அவசியமாக தேவைப்படும் அமினோ அமிலங்களும் வைட்டமின்களான நியாசின், பி6 மற்றும் பி12 ஆகியனவும் வான்கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன. அது மட்டுமன்றி, உடலுக்குத் தேவைப்படும் முழுமையடையாத கொழுப்பு அதிகமாகவும், கொலஸ்டிராலின் அளவு குறைவாகவும் இருக்கிறது.
   
ஒரு வியாபார ஆராய்ச்சியின்படி, 10 முதல் 20 கிலோ உடல் எடையுள்ள 24 வார வான்கோழி சேவல் ஒன்றை வளர்க்க ஆகும் செலவு ரூ.300 லிருந்து ரூ 400 வரை. அதே வான்கோழியினை விற்பனை செய்வதன் மூலம் ரூ.500 லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும். இதே போன்று, அதே 24 வார வயதுடைய வான்கோழி பெட்டை ஒன்றை விற்கும் போது ரூ.300 லிருந்து 400 வரை லாபம் கிடைக்கும்.

No comments:

Post a Comment