Thursday 22 March 2012

ஈமு வளர்ப்பு


ஈமு வளர்ப்பு

ஈமு கோழிகள்-ஒரு அறிமுகம்
ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தை சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்பநிலையிலும் தாங்கி வளரக்கூடியவை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தை சார்ந்தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பறவைகள் திறந்த வெளியிலும், தீவிர  முறையிலும் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு
ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையினையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று  காணப்படும். ஆனால், இந்த கோடுகள்  4-12 மாத வயதில் மறைந்து,  பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடையுடையவையாக இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின் இயற்கையான உணவு, பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளை விட பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுகுஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்
ஈமுக்கோழிகுஞ்சுகள்
emu-chicks.JPG
ஈமு குஞ்சுகள் சராசரியாக 370-450 கிராம் எடை இருக்கும் (முட்டையின் எடையில் 67 சதவிகிதம்). குஞ்சு பொரித்து முதல் 48-72 மணி நேரத்தில் குஞ்சுகளை குஞ்சு பொரிப்பானிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டையின் மஞ்சள் கருவினை குஞ்சுகளின் உடல் நன்கு உறிஞ்சிக்கொள்வதற்கும், குஞ்சுகளின் உடல் நன்கு உலரச்செய்வதற்கும் ஏதுவாகிறது. கோழிக்குஞ்சுகளைப் போலவே ஈமுக்குஞ்சுகளுக்கும் முதல் சில நாட்களுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே குஞ்சுக்கொட்டகையை கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து ஆழ்கூளமாக நெல் உமியினைப் போட்டு அதன் மீது சாக்கினை பரப்பி விட வேண்டும். குஞ்சு கொட்டகையில், ஈமு குஞ்சு ஒன்றிற்கு 4 சதுர அடி இடம் தேவைப்படும். குஞ்சு கொட்டகையில், முதல் 10 நாட்களுக்கு, 90°F வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, பத்து நாள் முதல் 3-4 வாரங்களுக்கு, 85°F  வெப்பம் குஞ்சுக்கொட்டகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுக்கொட்டகையில் மேற்குறிப்பிட்ட வெப்பநிலையினை பராமரிப்பதற்காக நூறு சதுர அடி இடத்திற்கு ஒரு 40 வாட்ஸ் பல்பினை பயன்படுத்தவேண்டும். சரியானவெப்பநிலையினை குஞ்சுக்கொட்டகையில் பராமரிப்பதன் மூலம் குஞ்சுகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு வழி செய்யலாம். குஞ்சு கொட்டகையில் போதுமான அளவு தீவனத்தட்டுகளும், தண்ணீர் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குஞ்சுகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க, 2.5 அடி உயரத்திற்கு ஒரு தடுப்பினை அமைக்கவேண்டும். மூன்று வார வயதில் குஞ்சு தடுப்பினை இன்னும் அகலப்படுத்தி குஞ்சுகளுக்கு தேவையான இடஅளவினை அதிகப்படுத்தி, ஆறாம் வார வயதில் இத்தடுப்பினை எடுத்துவிடலாம். முதல் 14 வாரத்திற்கு அல்லது குஞ்சுகள் 10 கிலோ உடல் எடையினை அடையும் வரை, குஞ்சுத்தீவனத்தை ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். இந்த வயதில் ஈமு குஞ்சு ஒன்றிற்கு திறந்தவெளியுடன் 30 சதுர அடி இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொட்டகையின் தரை சுத்தமாகவும் ஈரத்தன்மை இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
  1. குறுகிய இடத்தில் அளவுக்கு அதிகமாக ஈமுக்கோழி குஞ்சுகளை வளர்க்கக்கூடாது.
  2.  குஞ்சு பொரித்து முதல் சில நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரினை கொடுக்கவேண்டும். மேலும் குடிநீரில் எதிர் அயற்சி மருந்துகள் கலந்து கொடுக்கவேண்டும். 
  3. தண்ணீர்த் தட்டுகளை தினமும் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அல்லது, தானியங்கி தண்ணீர் அளிப்பானை பயன்படுத்தலாம்.
  4. ஈமு குஞ்சுகளுக்கு தீவனத்தில் வைட்டமின் மற்றும் தாது உப்புக் கலவையை கலந்து கொடுக்க வேண்டும்.
  5. முறையான உயிர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த, எப்பொழுதும் பண்ணையில் ஒரே சமயத்தில் குஞ்சுகளை வாங்கி, வளர்ந்தவுடன், ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும்.
ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது செய்யக்கூடாதவை
  1. ஈமு குஞ்சுகளை வெய்யில் நேரத்தில் கையாளக்கூடாது. குஞ்சுக்கொட்டகை எப்பொழுதும் அமைதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
  2. தெரியாத நபர்களையோ அல்லது தேவையற்ற பொருட்களையோ பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது
  3. குஞ்சுக் கொட்டகையில் எப்பொழுதும் ஆழ்கூளத்தினை பயன்படுத்த வேண்டும்.
  4. கொட்டகையின் தரை வழவழப்பாக இருக்கக்கூடாது. ஏனெனில், தரை வழவழப்பாக இருந்தால், ஈமுக் குஞ்சுகள் ஓடும் பொழுது தரை வழுக்கி அவற்றின் கால்கள் உடைந்து விட வாய்ப்புள்ளது.
வளரும் ஈமுக் கோழிக் குஞ்சுகளை பராமரிக்கும் முறைகள்
    emu-grower.JPG
வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகள்
ஈமுக் கோழிக் குஞ்சுகள் வளரும் போது அவற்றுக்கு பெரிய தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர் தட்டுகள் தேவைப்படும். வளரும் பருவத்தில் ஆண், பெண் பறவைகளை தனியாக கண்டறிந்து அவற்றை தனித்தனியாக வளர்க்க வேண்டும். மேலும் கொட்டகையின் தரையில் போதுமான அளவு நெல் உமியினை ஆழ்கூளமாக இடவேண்டும். குஞ்சுகள் 34 வார வயதினை அடையும் வரை அல்லது 25 கிலோ உடல் எடையினை அடையும் வரை, அவற்றுக்கு வளரும் பருவத்திற்கான தீவனத்தினை அளிக்கவேண்டும். இந்த பருவத்தில் ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு அவற்றுக்கு தேவைப்படும் தீவனத்தின் அளவில் 10 சதவிகிதமாக பசுந்தீவனத்தினை இட ஆரம்பிக்கவேண்டும்.  எல்லா நேரத்திலும் சுத்தமான குடிநீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வளரும் பருவம் முழுவதும் ஆழ்கூளம் ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வளரும் பருவத்தில் ஒரு ஈமுக்கோழிக்குஞ்சுக்கு 100 சதுர அடி அளவு இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளை பிடிக்கும் போது அவற்றின் உடல் பக்கவாட்டில் பிடித்து, பின் அவற்றின் இறக்கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, பிடிப்பவரின் கால்களுக்கு இணையாக இழுக்கவேண்டும். ஈமுக்கோழிகள் பக்கவாட்டாகவும் முன்பாகவும் உதைக்கக்கூடியவை. எனவே, இக்கோழிகளை கையாளும்பொழுது கவனமாக கையாள வேண்டும்.
வளரும் ஈமு குஞ்சுகளை பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
  1. தினமும் பண்ணையில் குறைந்தது ஒருமுறையாவது வளரும் குஞ்சுகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என கவனிக்க வேண்டும்
  2. ஈமுக்கோழிக்குஞ்சுகளின் கால்களின் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனக் கண்டறிந்து அவ்வாறு உள்ள பறவைகளை தனியாக பிரித்து பராமரிக்கவேண்டும்.
  3. ஒரே சமயத்தில் குஞ்சுகளை வளர்த்து ஒரே சமயத்தில் விற்று விட வேண்டும்
  4. வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளை வளர்ந்த பெரிய கோழிகளுடன் ஒன்றாக வளர்க்கக்கூடாது
வளரும் ஈமுக் கோழிக் குஞ்சுகளை பராமரிக்கும் செய்யக் கூடாதவை
  1. வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளின் கொட்டகைக்குள் கூர்மையான அல்லது கூழாங்கற்கள் போன்ற பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆர்வத்தின் காரணமாக வளரும் ஈமுக் கோழிகள் கண்ணில் படும் பொருட்களையெல்லாம் இழுத்து விடும்
  2. வெய்யில் அதிகமாக இருக்கும்போது வளரும் ஈமுக்கோழிக் கோழிகளை தடுப்பூசி போடுவதற்காக பிடிக்கக்கூடாது
  3. நாள் முழுவதும் வளரும் ஈமுக்கோழிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள்
ஈமுக்கோழிகள் 18-24 மாத வயதில் முதிர்ச்சி அடையும். ஒரு ஆண் ஈமுக்கோழிக்கு ஒரு பெண் ஈமுக்கோழி என்ற விகிதத்தில் பராமரிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஜோடி ஈமுக் கோழிகளுக்கு 2500 சதுர அடி இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் செய்ய  தனிமைக்காக  மரங்கள் மற்றும் புதர்கள் இருக்கும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளுக்கென தயாரிக்கும் தீவனத்தினை இனப்பெருக்க காலத்திற்கு 3-4 வாரத்திற்கு முன்பே அளிக்கத் தொடங்க வேண்டும். தீவனத்தில் போதுமான அளவு தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கலந்து அளிப்பதன் மூலம் முட்டைகளின் கருவுறுதல் மற்றும் குஞ்சுபொரிக்கும் திறனை அதிகரிக்கலாம். இனப்பெருக்க காலத்திற்கு பின்பு ஆண், பெண் பறவைகளை தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும். சாதாரணமாக, ஒரு வளர்ந்த ஈமுக்கோழி ஒன்று, ஒரு நாளைக்கு ஒரு கிலோ தீவனம் உண்ணும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் தீவனம் எடுக்கும் அளவு திடீரென குறையத்தொடங்கும். எனவே இத்தருணத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஈமுக்கள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெண் ஈமுக்கோழிகள் அவற்றின் 2.5 வயதில் முதல் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடுதல் வருடத்தின் குளிரான மாதங்களில் (அக்டோபர் முதல் பிப்ரவரி) வரை நடைபெறும். முட்டையிடுதல் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். முட்டைகள் உடைவதை தடுக்க தினமும் இரண்டு முறை முட்டைகளை சேகரிக்க வேண்டும். பருவமடைந்த முதல் வருடத்தில் ஒரு பெண் ஈமுக்கோழி 15 முட்டைகள் இடும். பின்வரும் வருடங்களில் இடும் முட்டைகளின் அளவு 30-40 வரை அதிகரிக்கும்.. ஒரு ஈமு கோழியின் முட்டையின் எடை 475-650 கிராம் ஆகும். ஈமுகோழிகளின் முட்டை பச்சை நிற மார்பிள் கல்லின் நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டின் மேற்புறம் வழுவழுப்பாகவோ அல்லது சொரசொரப்பாகவோ இருக்கும். பெரும்பாலான (42%) முட்டைகள் நடுத்தர பச்சை நிறத்தில் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும்.
 

ஈமுக்கோழி முட்டைகள்
இனப்பெருக்கத்திற்கு பயன்படும் பெண் ஈமுகோழிகளுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து (2.7%) அளிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட முட்டைகளை 60˚F வெப்பநிலையில் சேமித்து வைக்கவேண்டும். கருவுற்ற முட்டைகளை 10 நாட்களுக்கு மேல் சேகரித்து வைக்கக்கூடாது. முட்டைகளை சேகரித்து 3-4 நாட்களுக்குள் அடை வைத்து விட வேண்டும்.
முட்டைகளை அடைகாத்தல்
கருவுற்ற முட்டைகளை முட்டை அடைகாப்பானில் குஞ்சு பொரிப்பதற்காக வைக்கவேண்டும். அடைகாப்பான் முட்டை அடை வைப்பதற்கு முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு அடைகாப்பானில் உலர் வெப்பமானியில் 96-97˚F, ஈரவெப்பநிலைமானியில் 78-80˚F என்ற வெப்பநிலைக்கு பொருத்த வேண்டும். மேலும் அடைகாப்பானின் உள்ளே ஈரப்பதம் 30-40% இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக வைக்கும் தேதி, முட்டையிட்ட தேதி ஆகியவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். முட்டைகளை அடைவைத்து 48ம் நாள் வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பிவிட வேண்டும் அல்லது தானியங்கி அடைகாப்பானை பயன்படுத்தலாம். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து முட்டைகளை திருப்புவதை நிறுத்தி விடவேண்டும். 52ம் நாள் முட்டை அடைகாப்பது முடிவுறும். நாற்பத்தி ஒன்பதாம் நாளிலிருந்து 52ம் நாள் வரை முட்டை ஒட்டினை உடைத்து குஞ்சுகள் வெளி வரத் துவங்கும். முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவந்த பின்பு, குஞ்சுகள் 1-3 நாட்களுக்கு அடைகாப்பானிலேயே பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம். பொதுவாக, ஈமுகோழிகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 70% இருக்கும். இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஈமுகோழிகளுக்கு சரிவிகித தீவனம் அளித்தால் ஆரோக்கியமான குஞ்சுகளைப் பெறலாம்.
தீவன மேலாண்மை
ஈமுக்களின் பராமரிப்பிற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சரிவிகித தீவனமளிப்பது முக்கியமாகும். ஈமுக்களுக்கு இது வரை தேவைப்படும் சத்துகளின் சரியான அளவு கண்டறியப்படவில்லை. எனினும் ஆராய்ச்சி முடிவுகளின்படி ஈமுகோழிகளுக்கு தேவையான சத்துகளின் அளவு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோழிகளுக்கு தீவனம் அரைக்க பயன்படும் மூலப்பொருட்களையே ஈமுகோழிகளுக்கும் பயன்படுத்தலாம். தீவனச்செலவு மட்டுமே மூலதன செலவில் 60-70 சதவிகிதம் இருப்பதால், குறைந்த செலவுடைய தீவன மூலப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தீவன செலவினை குறைக்கலாம். வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஈமு கோழிப் பண்ணைகளில் ஒரு ஜோடி ஈமு கொழிகள் உட்கொள்ளும் தீவனத்தின் அளவு 394-632 கிலோ இருக்கும்.
பல்வேறு வயதுடைய ஈமுக்கோழிகளுக்குத் தேவைப்படும் சத்துகளின் அளவு

சத்துகள்
குஞ்சுகள் (10 கிலோ உடல் எடை அல்லது 10-14 வார வயது)வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25 கிலோ உடல் எடை வரை)
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள்
புரதம் %201820
 லைசின் %1.00.80.9
மெத்தியோனின்%0.450.40.40
டிரிப்டோபேன் %0.170.150.18
திரியோனின் %0.500.480.60
கால்சியம்1.51.52.50
மொத்த பாஸ்பரஸ் %0.800.70.6
சோடியம் குளோரைட் %0.400.30.4
நார்ச்சத்து (அதிகஅளவு) %91010
வைட்டமின் A (IU/kg)15000880015000
வைட்டமின் D3 (ICU/kg)450033004500
வைட்டமின் E (IU/kg)10044100
வைட்டமின்  B 12 (IU/kg))452245
கோலின் (mg/kg)220022002200
தாமிரம் (mg/kg)303330
துத்தநாகம் (mg/kg)110110110
மாங்கனீஸ் (mg/kg)150154150
ஐயோடின் (mg/kg)1.11.11.1
ஈமுக்கோழித் தீவன மூலப்பொருட்கள் (kg/100kg)
மூலப்பொருட்கள்குஞ்சுகள் (10 கிலோ உடல் எடை அல்லது 10-14 வார வயது)வளரும் ஈமுக்கோழிகள்
15-34 வார வயது அல்லது 10-25 கிலோ உடல் எடை வரை)
இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகள்
மக்காச்சோளம்504550
சோயாபீன்302525
எண்ணெய் எடுத்த அரிசித்தவிடு1016.2515.50
சூரியகாந்தி புண்ணாக்கு6.15100
டைகால்சியம் பாஸ்பேட்1.51.51.5
கால்சைட் பவுடர்1.51.51.5
கிளிஞ்சல்006
உப்பு0.30.30.3
இதர தாதுஉப்புகள்0.10.10.1
வைட்டமின்கள்0.10.10.1
இரத்தக்கழிச்சல் நோய்க்கான மருந்து0.050.050
மெத்தியோனின்0.250.150.25
கோலின்குளோரைட்0.050.050.05
ஈமுகோழிகளின் நல மேலாண்மை
ரேட்டைட் இனத்தை சார்ந்த பறவைகள் பொதுவாக கடின உடலமைப்பினைக் கொண்டவை. மேலும் இவை நீண்ட நாள் வாழும் திறனுடையவை. இளம் வயது ஈமு கோழிக் குஞ்சுகளில் மட்டுமே நோய்த்தாக்குதலும் இறப்பும் அதிகமாக இருக்கும். தீவனப் பற்றாக்குறை, குடல் அடைப்பு, கால் பாதிப்பு, ஈ.கோலை மற்றும் கிளாஸ்டிரிடியம் இனத்தினை சார்ந்த பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றால் இளம் ஈமுகோழிக் குஞ்சுகளில் அதிக இழப்பு ஏற்படுகிறது.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்
ஈமுகோழிக்கறியில் குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் ஈமுக்களின் மேல்தோல் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப்பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்காகவும், மருந்தாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரம்
ஈமுகோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினை பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையினை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு  ரூ.1232 செலவாகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ஜோடி ஈமுக்கோழி வருடத்திற்கு  ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமுக் கோழி குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500-3000. எனவே, ஈமுகோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவிகித்திற்கு அதிகமாகவும், தீவனச்செலவு குறைவாகவும், குஞ்சு பருவத்தில் இறப்பு சதவிகிதம் 10 சதவிகிதத்திற்கு குறைவாகவும் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment