Friday, 2 March 2012

மத்ஸ்யாசன


அடுத்த ஆசனமும் அமர்ந்த வண்ணமே செய்ய வேண்டியதே. தினம் பயிற்சியின் போது மாற்றி மாற்றியே செய்ய வேண்டும். ஒரு ஆசனம் நின்று கொண்டு செய்தால் அடுத்த ஆசனம் படுத்தோ அல்லது அமர்ந்தோ செய்கிறாப்போல் வைத்துக்கொள்ள வேண்டும். யோக குருவின் ஆலோசனைப்படியும் செய்யலாம். ஏனெனில் ஒவ்வொரு ஆசனத்துக்கும் மாற்று ஆசனம் உண்டு. அப்படிச் செய்தல் இன்னும் அதிக நன்மை பயக்கும். என்றாலும் இப்போது செளகரியம் கருதி அடுத்து நாம் பார்க்கப் போவதும் அமர்ந்த வண்ணம் செய்யும் ஆசனமே. இதை யோக முத்ரா எனக் கூறுவார்கள்.
இது பத்மாசனத்தை அடிப்படையாகக் கொண்டே செய்யப் படும் ஒரு ஆசனம். ஆகவே பத்மாசனத்திலேயே அமர்ந்த வண்ணம் கைகளை மட்டும் பின்னால் கொண்டு போகவும். இடக்கை மணிக்கட்டை வலக்கையால் பிடித்துக்கொண்டு உடலை முன்னோக்கிக் குனிந்து கொண்டு போக வேண்டும். நம் தாடையானது தரையைத் தொட வேண்டும். எடுத்த எடுப்பில் அவ்வளவு குனிய முடியாது. நாளாவட்டத்தில் பழக்கம் ஆகும். இதிலும் கால்களை மாற்றிப் போட்டுச் செய்யலாம். இடுப்பின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மூலாதாரச் சக்கரத்தை நினைவிலிருத்தி இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும். தலையையும் தோள்பட்டையையும் முன்னோக்கி வளைக்க வேண்டும். தாடையை முதலில் நேராக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டுப் பின்னர் வலப்பக்கம், இடப்பக்கம் என மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம். இதனால் தோள்பட்டை வலிகள் குறையும். ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் தோள்பட்டைத் தசைப்பிடிப்புக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும். பெரும் தொந்தி இருப்பவர்க்குத் தொந்தி குறையும். ஜீரண சக்தி ஏற்படும். சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப் புண், குடலிறக்கம் போன்றவற்றிக்கு இந்த ஆசனம் பலன் தரக்கூடியது. பெண்கள் இதைத் தினமும் செய்து வந்தால் கர்ப்பப் பை நோய்கள் அகலும். அடிவயிறு பெரிதாக இருந்தால் குறைய ஆரம்பிக்கும்.
இது மத்ஸ்யாசனம் எனப்படும் ஆசனத்திற்கு மாற்று ஆசனம் ஆகும். ஆகையால் அடுத்து நாம் மத்ஸ்யாசனம் என்றால் என்னவெனப் பார்ப்போம். அதன் முன்னர் மீண்டும் ஒரு வேண்டுகோள். இந்த ஆசனங்களை யாரும் தக்க குருவின் உதவி இல்லாமல் முயல வேண்டாம். மேலும் யோகம் என்பது வேறு. முழுமையாகச் செய்ய வேண்டிய யோகத்திற்குச் செல்லும் முன்னர் நம் உடலைப்பக்குவப் படுத்த வேண்டிய அடிப்படை நிலையே இந்த ஆசனப் பயிற்சி. ஆகவே இதை யோகா என்று கூறாமல் ஆசனப் பயிற்சி என்பதே சரியாக இருக்கும்.
மத்ஸ்யாசனம்: மச்சாசனம் என்றும் கூறலாம். மச்சம் என்றால் மீன். மீனைப் போல் உருவில் இல்லாமல் செய்கைகளில் மீனைப் போன்று செய்வதே மச்சாசனம் எனப்படும். இதைப் பத்மாசனம் செய்ததும் தொடர்ந்து செய்யலாம். பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணமே வலக்காலை இடத்தொடை மீதும், இடக்காலை வலத்தொடை மீதும் போட்டுக் கொள்ளவும் கால்களைப் பிரிக்கக் கூடாது. அப்படியே பின்னால் வளைய வேண்டும். அதற்கு முதலில் இரு கைகளையும் பின்பக்கமாக உயர்த்திய வண்ணம் தரையின் ஊன்றவும். பின்னர் மெல்ல மெல்லக் கழுத்தைப் பின் பக்கமாய வளைத்துக் கொண்டே போகவும். தலையைத் தரையில் படும்வரை வளைத்துக் கொண்டு வைத்துக் கொள்ளவும். இடுப்பும், மார்பும் மேல்நோக்கி வில் போல் வளைந்து வருமாறு பார்த்துக்கொள்ளவும். இந்நிலையில் கால் தொடைகள் இரண்டும் தரையில் இருக்க வேண்டும்.
மெல்ல மெல்லக் கைகளை மீண்டும் உயர்த்தி முன்னால் கொண்டு வரவும். முன்னால் கொண்டு வந்த இரு கைவிரல்களாலும் இரு கால் பெருவிரல்களைப் பிடித்துக்கொள்ளவும். இப்போது மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்துக்கொண்டு மெல்ல வெளியே விட வேண்டும். இந்த நிலையில் ஒரு முழு நிமிடம் வரை இருக்க வேண்டும். ஒரு நிமிடம் என்பது குறைந்த நேரமாய்த் தோன்றலாம். நிமிடம் காட்டும் கடிகாரத்தை வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் காத்திருந்தால் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நேரமாகிறது என்பது புரியும். இதன் பின்னர் மெல்ல மெல்ல ஆசனத்தைக் கலைத்துக்கொள்ளவும். சிறிது ஓய்வுக்குப்பின்னர் மேலே சொன்ன யோக முத்ராவைச் செய்ய வேண்டும். மச்சாசனத்தின் முதுகெலும்பை வளைத்துக் கொண்டு பின்னோக்கிச் செய்வோம். அதற்கு மாறாக யோக முத்ராவில் முன்னோக்கி வளைந்து செய்ய வேண்டும். ஆகவே உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்லும்.
தைராய்டு சுரப்பி, நுரையீரல், போன்றவை நன்கு வேலை செய்யும். பிராண வாயு அதிகம் இழுக்கப்படுவதால் ரத்தம் தூய்மை அடையும். தினசரி இந்த ஆசனம் செய்ய வேண்டும். நடுவில் விட்டால் பலன் தராது. மேலும் அதிக நேரம் செய்யக் கூடாத ஆசனங்களில் இதுவும் ஒன்று. அதிகம் போனால் இரண்டு நிமிடங்கள் செய்யலாம். பொதுவாகவே ஆசனப் பயிற்சியின்போது சாப்பாடு சாப்பிட்டிருக்கக் கூடாது. அதிலும் மச்சாசனம் செய்கையில் கண்டிப்பாய்க் காலி வயிற்றுடன் தான் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment