Thursday 5 April 2012

ஹயக்ரீவனை அழித்த ஹயக்ரீவர்



ஹயக்ரீவனை அழித்த ஹயக்ரீவர்

குதிரை முகமுடைய ஹயக்ரீவன் எனும் அசுரன், மகாபராக்ரமசாலியாகத் திகழ்ந்து வந்தான். அசுர குலத்துக்கே உரிய மூர்க்கத்தனத்துடன், மூவுலகிலும் நடைபெறும் தர்ம காரியங்களுக்கு இடையூறு விளைவித்து வந்தான். இந்த அசுரனின் இன்னல் தாளாமல் ரிஷிகளும், சாதுக்களும், தேவியையும் மும்மூர்த்திகளையும் இவனை அழிக்க வேண்டி பூஜித்தனர். அந்த அசுரனோ, எவரும் தம்மை அழிக்க முடியாத வரத்தைப் பெற, புவனேஸ்வரியை நோக்கி ஆயிரம் வருட காலம் கடுந்தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த தேவி, அவன் தியானித்த முறைப்படியே சிம்ம வாகனத்தில் காட்சி தந்தாள். தேவியைக் கண்ட பரவசத்தில் அசுரன் ஹயக்ரீவன்,
நமோ தேவ்யை மஹாமாயே ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணி
பக்தாநுக்ரஹ சதுரே காமதே மோக்ஷதே சிவே
தராம்புதேஜ: பவன கபஞ்சா நாஞ்ச காரணம்
த்வங்கந்த ரஸநாசக்ஷúஸ்த்வக்
சுரோத்ர மிந்திரியாணிச
கர்மேந்திரியாணி சாந்யாநி த்வத்தஸ் ஸர்வம் மஹேஸ்வரி
என அம்பிகையைத் துதித்தான். அவனது துதியில் மகிழ்ந்த தேவி ஹயக்ரீவா! வேண்டும் வரத்தைக் கேள் என்றாள். ஹயக்ரீவன், தேவி, என்னை மரணத்தை வென்றவனாக்கு என அன்னையிடம் வேண்டி நின்றான். ஹயக்ரீவா! பிறப்பு இறப்பு என்பது ஒன்றைவிட்டு ஒன்று அகலாதது. மரணத்தை, இம்மண்ணில் உதித்த எவராலுமே வெல்ல முடியாது. வேறு வரம் கேள், தருகிறேன் என்றாள் அன்னை. சற்று சிந்தித்த அசுரன், அன்னை புவனேஸ்வரியிடம், தேவி! நான் அழியக் காரணமாகும் ஒருவனும், என்னைப்போலவே குதிரை முகத்தினை உடையவனாக இருத்தல் வேண்டும் என வேண்டினான். புவனேஸ்வரி அன்னையும், வரம் அளித்தேன் ஹயக்ரீவா! இம்மூவுலகிலும் நீ சிறந்த பராக்ரமசாலியாகத் திகழ்வாய் என்ற வரமருளி மறைந்தாள். வரம் பெற்றதாலேயே செருக்குற்ற அசுரன், மேன்மேலும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் தீங்கிழைத்து வந்தான். இந்நிலையைக் கண்ட தேவேந்திரன், தர்மம் ஓங்க, தேவர்கள் ராஜ்யம் செழிக்க, யாகம் ஒன்றைச் செய்ய நினைத்து தம் தேவ கூட்டத்தை அழைத்துக்கொண்டு, பிரம்மதேவரிடம் ஆலோசனை பெற விரைந்தான்.
விவரத்தைக் கேட்ட பிரம்மதேவரோ, நாம் ருத்திரனைக் கண்டு அவர் ஆலோசனையைப் பெறுவோம் என்று அனைவரோடும் திருக்கயிலைக்குச் சென்றார். ரிஷபவாகனத்தில் காட்சியளித்த அம்மகா ருத்திரரிடம், தாங்கள் வந்த நோக்கத்தை எடுத்துரைத்தனர். இதைக் கேட்ட ருத்திரரோ, நன்று! எவ்விதமான ஸத்காரியமும், புரு÷ஷாத்தமரான மகாவிஷ்ணுவினுடைய ஆக்ஞையோடு நடப்பதே சிறப்பு என்றுரைக்க, இப்போது அனைவரும் மகாவிஷ்ணுவைக் காண ஸ்ரீவைகுண்டம் சென்றார்கள். அங்கோ, மகாவிஷ்ணு இல்லை. தேவேந்திரன், தன் ஞான திருஷ்டியினால் மகாவிஷ்ணு பிருந்தாவனத்தில் இருப்பதை உணர்ந்து, எல்லோரையும் அழைத்துக்கொண்டு அங்கு விரைந்தான். இங்கோ மகாவிஷ்ணு ஏற்கெனவே ஓர் அசுரனுடைய பல வருட காலம் யுத்தம் செய்த களைப்பினால், பத்மாசனராய் தன்னுடைய வில்லை தன் முகவாயிற் பொருத்தி, ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். வெகுநேரமாகியும், மகாவிஷ்ணு தன் நித்திரையினின்றும் விடுபடவில்லை. தேவேந்திரன் பிரம்மாவிடம், இப்போது என்ன செய்ய? எனக் கேட்டான். பிரம்மதேவர் தேவேந்திரா! ஸ்ரீமகாவிஷ்ணுவானவர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார். அவரை, நாமாகவே எழுப்பினால்தான் பயன் ஏற்படும். நித்திராபங்கம் செய்வது பாவமாயினும். நாம் செய்யவிருக்கும் யாகக் காரியமானது, இவ்வுலகுக்கு நன்மை பயப்பதாகும். எனவே, நீ காலம் தாழ்த்தாமல் வண்டாக மாறி, வில்லின் நாணை அறுத்து, அம்மகாவிஷ்ணுவைத் துயிலெழச் செய்வாய் என அறிவுறுத்தினார்.
தேவேந்திரனோ! பிரம்மதேவரே! உலகில் பஞ்சமகா பாதங்களாகக் கருதப்படுவதில் ஒன்றான, நித்திரா பங்கத்தை நான் செய்யத் தயாராக இல்லை என்றான். பிரம்மதேவரோ, தேவேந்திரா! நித்திரா பங்கம் செய்து நீ பாவியாகி விடுவாய் என அஞ்ச வேண்டாம். நாம் செய்யவிருக்கும் ஸத் காரியத்தை முன்னிட்டே நீ இதைச் செய்வதனால், உன்னை ஒரு பாவமும் அண்டாது என அறிவுறுத்தினார். இவ்வாறே ருத்திரரும் அறிவுறுத்த, தேவேந்திரன் நடக்கவேண்டியது என்னவோ அது நடக்கட்டும் என்றெண்ணி வண்டாக மாறி வில்லின் நாணை அறுத்தான். நாணறுந்த மறுநிமிடம் வில்லானது அதிவேகமாக மேலே உயர, விஷ்ணுவினுடைய சிரம் இருந்த இடம் தெரியாமல் அறுபட்டு மறைந்துபோனது. இந்த நிகழ்வால், அவர்கள் நின்ற இடமே அதிர்ந்தது. சமுத்திரம் கரை புரண்டது. பூமாதேவி நிலைகொள்ளாமல் நடுங்கினாள். இதென்ன கெட்ட காலம் என்றஞ்சி ஆதவனும் மறைந்தான். இந்நிகழ்வைக் கண்ணுற்ற தேவர்களும் கூக்குரலிட்டு அழுதனர். அசுரர்களை சம்ஹரித்து சுரர்களைக் காக்கும் நம் நாராயணரை, நானே சிரமற்றவராக ஆக்கிவிட்டேனே! என்னாலேயே இத்துக்கம் ஏற்பட்டது. துஷ்ட காரியத்தைச் செய்த நான். இவ்வுலகின்கண் இனி என்றுமே மதிக்கப்படப் போவதில்லை, மன்னிக்கப்படப் போவதும் இல்லை எனப் பலவாறாக தேவேந்திரன் புலம்பினான். அனைவரும் சற்று அமைதியாக இருங்கள். இனி நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை. நாம் அனைவரும் இக்கணமே, சனாதனியாகிய அத்தேவியை துதிப்போம் எனக் கூறி,நான்கு வேதங்களையும் துணைக்கு அழைத்தனர்.
அந்நான்கு வேதங்களும் பிராமண உருக்கொண்டு சென்று தேவர்களுடன் அம்மகா மாயாதேவியைத் துதித்தனர். அந்த சனாதனியும் வேண்டாம். இவ்வுலகில் செய்யப்படும் எக்காரியமும் காரணமில்லாமல் ஏற்பட்டதன்று. எனவே நடந்ததை எண்ணி அஞ்ச வேண்டாம். துஷ்ட அசுரன் ஹயக்ரீவன், தன்னைப் போலவே குதிரை முகத்தினை உடையவனாலேயே அழிக்கப்பட வேண்டுமென வரம் பெற்றிருப்பதால், அவனை அழிக்கும் பொருட்டு சிரமற்ற விஷ்ணு, குதிரையின் முகத்தைப் பெற்று ஹயக்ரீவராகி, அந்த துஷ்ட ஹயக்ரீவனை சம்ஹரிப்பார் என அருளி மறைந்தாள். பிரம்மதேவரோ, காலம் தாழ்த்தாமல் ஓர் குதிரையின் சிரஸை அறுத்து மகாவிஷ்ணுவின் உடலில் பொருத்தினார். ஹயக்ரீவராக மாறிய மகாவிஷ்ணு, மிகுந்த ஆவேசம் கொண்டு ஹயக்ரீவன் எனும் துஷ்ட அசுரனை சம்ஹரித்து தேவ சமூகத்தின் குறையை நீக்கினார். தேவ சமூகம் தங்கள் துன்பம் நீங்கியதை எண்ணி ஜெய ஜெய என கோஷமிட்டு பூமாரி பொழிய மகாவிஷ்ணு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவராக அவ்விடத்தில் குடிகொண்டார். விஷ்ணுவின் சிரம் ஏன் அறுபட வேண்டும்? இதற்கும் ஒரு கதை உண்டு. விஷ்ணுவானவர் முன்பொரு சமயம், அழகில் குன்றியவள் என லக்ஷ்மியைப் பரிகசித்தார். தன் பதியானவர் வேறு பெண்ணின்மேல் ஈடுபட்டு கொண்டதாலேயே தன்னை இவ்விதம் பரிகசிக்கிறார் என்றெண்ணி கோபம் கொண்ட லக்ஷ்மி என் முகம் அழகில் குன்றியதாக நினைக்கும் உங்களின் சிரம் அறுபட்டுப் போகட்டும் எனச் சபித்தாள். தன் தவறை உணர்ந்த விஷ்ணுவும் அவ்விதமே ஆகட்டும் என்றெண்ணி லக்ஷ்மி ஹயக்ரீவராக நமக்கு அருள்கின்றனர்.

No comments:

Post a Comment