Monday 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »அகோபில மடம் ஜீயர்


தானம் பெற தகுதியற்றவர்கள்

* சிரத்தை இல்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது. 
* தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும்.  கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும். 
* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர். 
* அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும். தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.


மனிதன் நிச்சயம் மாறக்கூடாது

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால், அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக? இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக! இப்படி மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள் தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும். அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப் பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும் உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை அடைந்து விட்டான். மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான் வாழ்க்கை நெறிமுறையாகும்.

No comments:

Post a Comment