பரசுராமர் கோபத்துடன் கர்ஜித்தார்.தசரத மன்னனின் புதல்வனே, ராமா! நீ சிவனின் வில்லை ஒடித்ததற்காக பெருமைப்படாதே. அது ஏற்கனவே பழுதுபட்டிருந்தது. பழுதுபட்ட வில்லை ஒடிப்பது என்பது பெரிய காரியம் அல்ல. என் கையில் கிருஷ்ண பராமாத்மா கொடுத்த வில் இருக்கிறது. இதை உன்னிடம் கொடுக்கிறேன். இதில் நாண் ஏற்றி என்னுடன் சண்டைக்கு வரவேண்டும், என்றார். ராமபிரான் அவரது பேச்சைக் கண்டு நடுங்கவில்லை. இதற்குள் தசரதர் பரசுராமனை கைகூப்பி வணங்கி, பரசுராமரே! இப்போதுதான் என் மகனுக்கு மணம் முடித்து ஊருக்கு சென்று கொண்டிருக்கிறோம் இவ்வேளையில் போர் எதுவும் வேண்டாம், வழிவிடுங்கள், என்றார். ராமபிரான் அவரிடம்,மகாப்பெரியவரே! உங்களைப் போன்ற ஞானிகள் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அரசகுலத்தில் பிறந்தவர்களை அழிப்பது உமது கொள்கை. ஆனால், அரசகுலத்தில் பிறந்தது எனது தவறல்ல. இருப்பினும், உங்கள் உத்தரவை நான் ஏற்றுக் கொள்கிறேன். விஷ்ணுவின் வில்லை என்னிடம் கொடுங்கள். நான் நாண் ஏற்றுகிறேன் என்றார் பணிவோடு. பரசுராமர் வில்லை ராமனிடம் கொடுத்தார். ராமர் அந்த வில்லை வளைத்து நாணில் அம்பை வைத்தார். வில் வளைந்ததை கண்டு பரசுராமரின் முகம் சுருங்கிப்போய்விட்டது. யாராலும் வளைக்கமுடியாது என்று கருதிய வில் வளைந்துவிட்டதே என நாணம் கொண்டார். மிகுந்த பணிவான குரலுடன், இந்த வில்லை விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் வளைக்க முடியாது. ஆனால், ராமா! நீ வளைத்துவிட்டாய். நீ யார் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். எனது அகங்காரத்தை உனது செயல் அழித்துவிட்டது. உன் மண ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதற்கு பிராயச்சித்தமாக இதுவரை நான் செய்த தவத்தின் வலிமையை உனக்கு தருகிறேன், என்று சொல்லிவிட்டு ராமனை வலம் வந்தார். பின்பு அங்கிருந்து போய்விட்டார்.
தசரதர் உள்ளம் பூரித்தார். மகனின் பெருமையை உணர்ந்தார். விஷ்ணுவே தனக்கு மகனாக வந்தது கண்டு அவரது மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அனைவரும் அயோத்தியை அடைந்தனர். அயோத்தி நகரம் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஊரெங்கும் அலங்கார தோரணங்கள். தங்கள் இளவரசர்களையும், இளவரசிகளையும் திருமணக் கோலத்தில் காணும் பாக்கியத்தைப் பெற்ற அயோத்தி மக்கள் சீதாதேவியின் அழகு பற்றியும், குணம் பற்றியும் மற்ற தேவிகளின் இயல்பு பற்றியும் பேசி உள்ளம் மகிழ்ந்தனர். தசரத மன்னனுக்கு இணையாக இவ்வுலகில் இனி வேறு யாருமில்லை என புகழ்ந்தனர். திருமணம் முடிந்து பல நாட்கள் வரை அரண்மனை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. தசரதனின் மூன்று தேவியர்களும் எவ்வித வித்தியாசமும் பாராமல் எல்லா மருமகள்களையும் சம உரிமை கொடுத்து கவனித்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்தபிறகு பிறந்த வீட்டை நினைத்துக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால் மாமியார்களின் அன்பில் மூழ்கி போன மருமகள்கள் தங்கள் பிறந்த வீட்டைக் கூட மறந்துவிட்டனர். பிறந்த வீட்டின் சூழ்நிலையே புகுந்தவீட்டிலும் நிலவியது. கைகேயியின் சகோதரன் யுதாஜித். பரதனின் தாய்மாமன். அவன் பரதனையும், சத்ருக்கனனையும் அழைத்துக் கொண்டு தனது நாட்டிற்கு சென்றான். பரத, சத்துருக்கனரின் மனைவியரும் உடன் சென்றனர். ராமன் சீதையுடன் அயோத்திலேயே தங்கியிருந்தார். திருமணம் முடிந்தபிறகும், ராமனின் குணஇயல்புகளில் எந்த மாறுதல்களும் இல்லை. பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஆண், பெண் இருபாலரின் குணங்களும் மாறிப்போவதாக குடும்பத்தாரால் குற்றம் சாட்டப்படுவதுண்டு. ஆனால், ராமனின் வாழ்வில் அப்படி ஒரு நிலை இல்லை.
ராஜகுமாரனாக இருந்தாலும் கூட அவரது மனதில் ஆணவம் என்பது அறவேயில்லை. பெற்றவர்களுக்கு நல்ல மகனாக திகழ்ந்தார். நோயற்ற வாழ்வு வாழ்ந்தார். சத்தியம் அவரது உயிர்மூச்சாக இருந்தது. கருணை மிக்கவராக திகழ்ந்தார். வந்தோருக்கு எல்லாம் வாரி வழங்கினார். தனக்குள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டார். ராமனைச் சுற்றிலும் நல்லவர்கள் மட்டுமே இருந்தனர். லட்சுமணன், அவரை விட்டு ஒருகணம் கூட பிரியவில்லை. அந்த குடும்பத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வரை எந்தவித பிரச்னையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.பண்புமிக்க ராமன் தங்கள் அரசனாக பதவி ஏற்கப்போகும் நாள் எது என்பதைப் பற்றி அயோத்திமக்கள் அடிக்கடி விவாதிப்பார்கள். அந்த நல்ல நாளுக்காக அவர்கள் காத்துக் கிடந்தார்கள். தசரதரும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டார். மூத்தவன் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டிய நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். பட்டாபிஷேகம் தொடர்பாக ஆலோசனை செய்ய அறிஞர்களையும், பக்கத்து நாட்டு மன்னரற்களையும் வியாபாரிகளையும், முனிவர்களையும் அவர் அழைத்தார். இந்த நாட்டை எனது முன்னோர்கள் தங்கள் குடும்பமாகவே கருது ஆண்டுவந்தனர். நானும் இத்தனை காலமும், அவர்கள் வழியே நடந்துவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. என் செல்வகுமாரன் ராமனிடம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறேன். அவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நான் காட்டிற்கு சென்று என் வாழ்வின் இறுதி காலத்தை தவம் இருந்து கழிக்க முடிவு செய்துள்ளேன், என்றார்.
No comments:
Post a Comment