Thursday 19 April 2012

தற்கொலை தீர்வாகுமா?


இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியை தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது. அன்றாடம் பத்திரிக்கைளை புரட்டினால் இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை... என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது. இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் கேரளம் ஆகும். உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன.

ஏன் இந்த கோழைத்தனம்? உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது. உலகிலேயே யாருக்கும் வராத தர்ம சங்கடம் ஏன் தனது வாழ்க்கையில் வந்துவிட்டது என்று மனம் உடைந்துதான் இத்தகைய முடிவை எடுக்கின்றார்கள். பிரச்சினைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

பிரச்சினைகளும், கஷ்டங்களும்... தான் விரும்பினால் வருவதோ விரட்டினால் ஓடிவிடுவதோ அல்ல மாறாக, இறைவனின் ஏற்பாட்டின்படிதான் வருகின்றன. இதைப் புரியாமல் ஏன் இந்த தன்வதைகள் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பிரச்சினைகளை சந்திக்கவே நேரமில்லை எனில் சிந்திக்க நேரமேது? என்கின்றனர். உலகளாவிய இந்த தற்கொலை செயலை தடுக்க மாற்று வழிதான் என்ன? அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைதான் என்ன? ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டால் பிரேதப் பரிசோதனை என்று நாட்கள் நகரும் பின் சில தடயங்கள் கிடைத்துவிட்டன இந்த தற்கொலைக்கு காரணம் என ஒருவர் கைது செய்யப்படுவார் ஆனால் தற்கொலை செய்து கொண்டவருக்கு இதனால் என்ன பயன்?



கடந்த வருடம் ஆந்திரா, கர்நாடாக மாநில விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் வறுமையில் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அரசு அவர்களுக்கு மானியம் அறிவித்தது ஆக, அரசு மேற்கொள்வதெல்லாம் வெறும் கண்துடைப்பதான். உண்மையில் இதற்கு தீர்வு என்ன? தற்கொலை என்ற இந்த இரத்தக் கறையை நம் வாழ்விலிருந்து துடைக்க விரட்ட வேறு வழியே இல்லையா?.

தெளிவான மார்க்கம் கொடுக்கப்பட்டுள்ள நம் முஸ்லிம் சமுதாயம் கூட இந்த ஹராமான செயலில் ஈடுபடத்தான் செய்கின்றனர். நாடு விட்டு நாடு சம்பாதிக்க வந்தவர்கள் கூட ஊரில் தன் குடும்பப் பிரச்சினைகளின் காரணத்தால் பூட்டிய அறைகளில் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் அவலங்கள் பிழைக்க வந்த இந்த பூமியிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் சமுதாயத்திற்கே ஏன் இந்த நிலைமை. தனது உள்ளச் சுமைகளை நீக்க வேறு வழியே இல்லை என்று ஏன் இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். மார்க்கம் தெரியவில்லை. நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் புரியவல்லை. மாமறை கூறும் உன்னத வாழ்வியல் தத்துவங்களில் இருந்து இவர்கள் படிப்பினை பெறவில்லை.

இறைவன் தன் திருமறையில் ...
"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், ஆனால் பொறுமையுடையேர்க்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:155)

மனிதன் என்று பிறந்துவிட்டால் அனவது வாழ்வில் பலவேறு வழிகளில் இறைவன் சோதனை செய்வான் என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது. இம்மையின் சொற்ப கஷ்டங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மறுமையில் நிரந்தரமாய் சுவர்க்கத்தை இழக்க வேண்டுமா? சொல்லுங்கள் என் அன்பு சகோதர-சகோதரிகளே!

"உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும், பிணியும் பீடித்தன, தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று கூறும்வரை அலைக்கழிக்கப்பட்டனர்" தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் உதவி மிகச் சமீபத்தில் இருக்கின்றது (அல்குர்ஆன் 2:214) என்று மறுமையை நேசித்த உறுதியான ஈமான் கொண்டவர்கள் அனுபவித்த சோதனைகளை எடுத்துக் கூறி வல்ல இறைவன் உபதேசம் செய்கின்றான். மேலும் அவனது உதவியை சமீபத்தில் பெறவேண்டுமென்றால் சோதனை ஏற்பட்டுவிட்டால் துவண்டு போய்விடக் சுடாது. தொழுகைகயைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு தீமை ஏற்பட்டு விட்டதென்றால் அதற்கு பின்னால் இறைவன் ஒரு நன்மையை நாடி இருக்கிறான் என்று ஆறுதல் கொள்ள வேண்டும்.

"ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு இலேசும் இருக்கின்றது" (அல்குர்ஆன் 94:6) என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய கஷ்டம்-துன்பம் வந்தாலும் அதை வென்று சுவனத்தின் வாரிசுகளாகலாம்.

மேலும் உயிர் என்பது அல்லாஹ்வின் உடைமை ஒரு மனிதனை எப்படி அவன் உருவாக்கி உயிரூட்டினானோ அதுபோல அவ்வுயிரை எடுக்கும் உரிமையும் அவனுக்கே உண்டு. இறைவனின் உடைமையை தனதாக்கிக் கொள்ள மனிதனுக்கு எவ்வித உரிமையும் இல்லை அவ்வாறு செய்பவர்களுக்கு சுவர்க்கம் ஹராமாகிவிடும்.

உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதருக்கு காயம் ஏற்பட்டது அவன் பதறினான், ஒரு கத்தியை எடுத்து தன் கையை அதனால் அறுத்து கொண்டான்! உதிரம் நிற்காமல் இருந்தான்! - என் அடியான் தன் உயிரைக் கொண்டு என்னிடம் அவசரப்பட்டு விட்டான்! அவனுக்கு சுவர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ், நூல்: புகாரி.

எனவே தற்கொலை செய்துக் கொள்வதினால் இவ்வுலக பிரச்சினைகள் வேண்டுமானல் தீருமே ஒழிய, மறுமையில் அவனுக்கு பெரும் தண்டனை காத்திருக்கின்றது என்பதை ஒவ்வொரு இதயங்களும் மறந்துவிடக் கூடாது.

"எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூற்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

எனவே மறுமையில் பெரும் வேதனை காத்திருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பிரச்சினைகள் நமக்கு ஏற்பட்டுவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளாக நாம் இருக்கக் கூடாது.

"அல்லாஹ்வை நினைவு கூறுவதின் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன" (அல்குர்ஆன் 13:28) என்பதை நினைவில் கொண்டு கஷ்டங்கள் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வராமல் இது எனது இறைவனின் ஏற்பாடு, அவன் அருளாளன் இதற்கு பின் அவன் எனக்கு ஏதோ நன்மையை தருவான் என்று ஆறுதல் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை நீக்கக் கோரி இறைந்து இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தினை செய்தால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி உறுதி.

No comments:

Post a Comment