ராமனுக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தி நாடெங்கும் பரவிவிட்டது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர். ராமராஜ்யம் கிடைப்பதென்றால் சும்மாவா? அவன் ஆட்சியில் இருக்கும் வரை இல்லை என்ற சொல் இருக்காது. திருடர்களுக்கு திருடி பிழைக்க வேண்டிய அவசியம் வராது. எல்லாமே கிடைக்கும் போது திருட்டுக்கென்ன வேலை? நவரத்தினமா.. நினைத்தவுடன் கிடைக்கும். அன்னமில்லையே அடுத்த வேளைக்கு என்றால், அறுசுவை உணவு வாசல் கதவைத் தட்டும். நியாயதர்மம் நிலைத்திருக்கும். அவர் தெய்வமகன். அவர் நினைத்தாலன்றி எமன் கூட யார் மீதும் கை வைக்க முடியாது. அவனே அனைத்துமாய் இருப்பான். குழந்தைகளுக்கு தேவைக்கதிகமாகவே பால் கிடைக்கும். மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அமைதியாய் வாழும். காட்டு மிருகங்கள் கூட ராமனுக்கு கட்டுப்பட்டே நடக்கும். ஒட்டு மொத்தத்தில் மனித சமுதாயத்துக்கு துன்பமே இருக்காது. மக்கள் கோயில்களுக்கு சென்றனர். பூஜைகள் செய்தனர். எங்கும் ராமராஜ்யம் பற்றிய பேச்சு தான். பல இடங்களில் ஹோ வென ஒலி எழுப்பி ஆரவாரம் புரிந்தனர் மக்கள். மகிழ்ச்சி அதிகமாகும் இடத்திற்கு வெகுவிரைவில் துன்பமும் வந்து சேரும் என்பது இயற்கையின் நியதிபோலும். இதோ துன்பம் ஒரு பெண் வடிவில் அரண்மனைக்குள் நுழைந்தது. அவள் அழகானவளா? இல்லை... கூனிக்குறுகி இருப்பாள். அவளது உருவத்தைப் பார்ப்பவர்கள், ஏ கூனி என்று அழைப்பர். அவள் முறைத்துப் பார்ப்பாள். ஒரு முறை ராம சகோதரர்கள் பூவால் செய்த பந்தை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து இந்த கூனியின் மீது விழுந்தது. கூனி இளவரசர்களை சத்தம் போட்டாள். தன் சகோதரர்களை திட்டுவதை பொறாத ராமன், கூனியை அந்த சிறுவயதிலும் எச்சரித்தார். அதுமுதலே ராமனைக் கண்டால் கூனிக்கு பிடிக்காது. அவளது உண்மைப் பெயர் மந்தரை.
பிடிக்காத ஒருவனுக்கு நல்ல காரியம் நடக்கப் போகிறதென்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ராமனை பழி வாங்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த அவள், மகாராணி கைகேயிக்கு வேலைக்காரி, ஊர் நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டே கைகேயிக்குரிய பணிகளைக் கவனிப்பாள். கைகேயியை ஒருமையில் பேசும் அளவுக்கு சுதந்திரம் பெற்றவள். அடியே கைகேயி! உனக்கு விஷயம் தெரியுமா? நாளை ராமனுக்கு பட்டாபிஷேகம், என்றாள். கைகேயிக்கு அப்போது தான் விஷயமே தெரியும். அவள் ராமனை தன் மூத்தாள் மகன் என நினைத்ததே இல்லை. பரதனைப் போல தன் மகனாகவே கருதினாள். அவளுக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனந்தமாக இருக்கும் நேரத்தில் என்ன கேட்டாலும் கிடைக்கும். அல்லது ஆனந்தப்படுபவர் எதிரே இருப்பவருக்கு கையில் கிடைப்பதை கொடுத்து விடுவார். கைகேயியும் அப்படித்தான். தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி அப்படியே கூனியின் கழுத்தில் போட்டாள். நல்ல சேதி கொண்டு வந்தாய் மந்தரை! இனி இந்நாட்டிற்கு துன்பம் ஏதும் வராது, என்றாள். அடியே பைத்தியக்காரி! நாட்டிற்கு துன்பம் வராதடி! ஆனால், உனக்கு வந்து விட்டதே துன்பம். அதற்கு என்ன செய்யப் போகிறாய்? கைகேயியின் முகம் சுருங்கியது. என்ன சொல்கிறாய் மந்தரை. என் மகன் ராமன் பட்டம் சூடுவதற்கும், அதனால் துன்பம் ஏற்படும் என்றும் கூறுவதற்கும் என்னடி சம்பந்தம்? நீ குழப்பமாக பேசுகிறாயே? கைகேயி, குழப்பம் எனக்கு இல்லையடி. சற்று யோசித்துப் பார். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு வா, சரி கேள்! நீ யாருடைய மனைவி? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி தசரத மகாராஜாவின் மகாராணி, நீ மட்டும் தான் மகாராணியோ? கவுசல்யா யார்? அவள் என் மூத்தாள். தசரத மகாராஜாவின் முதல் மனைவி, சரி, மூத்தவளின் மகனுக்கு பட்டம் சூட்ட வந்த ராஜா, உன் மகனை நினைத்துப் பார்த்தாரா? இல்லை, கவுசல்யா மட்டும் தான் அவரது மனைவி.
நீ பூஜ்யம் எனக் கருதி விட்டாரா? உன் மகன் பரதனைப் பற்றி அவருக்கு ஏன் நினைவு வ்ரவில்லை? இதற்காகத்தான் என்னைப் பயப்படுத்தினாயா மந்தரை! நீ கேட்பது முறையற்ற கேள்வி. மூத்தவள் ராஜாவாவது உலக நடைமுறை தான், அது ஒருவனுக்கு ஒருத்தி எனப்படும் நாட்டிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இங்கே அப்படியல்ல. நீ இன்றுவரை தசரத சக்கரவர்த்தியின் ராணியாக செல்வச் செழிப்போடு திகழ்கிறாய். ஆனால், அதிகாரம் ராமனின் கைக்கு போனதும் நிலைமை என்னாகும் என யோசித்துப்பார். எங்கே தன் இளவல் தலையெடுத்து விடுவானோ என்ற பயத்தில் பரதனை ராமன் விட்டு வைப்பானோ மாட்டானோ? உளறாதே மந்தரை. ராம சகோதரர்கள் ஒற்றுமையுடன் திகழ்கின்றனர். தான் சொன்னது எடுபடவில்லை எனத் தெரிந்ததும் மந்தரை அடுத்த அஸ்திரத்தை வீசினாள். மனித மனங்களை நல்வழிப்படுத்துவது தான் கடினம். கெடுப்பது நொடி நேர வேலை தான். கலங்காத மனங்களையும் கலங்க வைக்கும் சக்தி கொண்ட நாக்குடையவர்கள் உலகில் அதிகம். மந்தரை தொடர்ந்தாள். கைகேயி! நான் சொல்வதை இன்னும் சிந்தித்துப் பார். ராமன் பொறுப்பேற்று விட்டால், அந்த கவுசல்யா ஆடாத ஆட்டம் ஆடுவாள். என் மகன் அரசன். என்னை என்ன செய்யமுடியும் என்பாள். அவளுக்கு தான் அரண்மனையில் அதிக அதிகாரம் இருக்கும். எதற்கெடுத்தாலும் நீ அவளது கையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இறுதியில், நீ என்னைப் போன்ற வேலைக்காரி போல கையேந்த வேண்டி வரும், கைகேயி இதற்கெல்லாம் கலங்கவில்லை. மந்தரை! ராமன் என்னை சிற்றன்னையே என அழைக்க மாட்டான். அம்மா என்று தான் அழைப்பான். அந்த உத்தமனைப் பற்றி தவறாக நினைக்கவே என் மனம் கூசுகிறது, என்ற கைகேயியை மந்தரை மேலும் கரைத்தாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே. பால் போல் வெள்ளை மனம் கொண்ட அந்த நல்லவளின் மனதில் விஷத்தின் துளிகள் தெறித்தன.
No comments:
Post a Comment