Sunday, 1 April 2012

இண்டர்நெட் டாக்டர் குழு,, கூகுளின் புதிய அவதாரம் – Buzz


இண்டர்நெட் டாக்டர் குழு

நம் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஒரு மருத்துவரை நாடுவதே எப்போதும் நல்லது. இன்று தகவல் தொடர்பு பெருகியுள்ள நாளில், நாட்டின் எந்த மூலையில் உள்ள டாக்டரையும் ஒருவரால் தொடர்பு கொண்டு, உடல்நலம் குறித்து அறிந்து கொள்ளலாம். சரியாக நம்மைப் பற்றிய குறிப்புகளைத் தந்தால், உடல்நலக் குறைவு, அல்லது நோய்க்கான மருந்து பரிந்துரைகளை ஒருவர் பெற முடியும். ஏன், டாக்டர் ஒருவரே தன் நோயாளியின் நோய் குறித்த தகவல்களை, தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இந்த பிரிவில் உள்ள வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி அறிவுரை கேட்க முடியும்.
இணையத்தில் இது போன்ற பல தளங்கள் இருக்கின்றன. அடிப்படையில் நம் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் தளம் ஒன்று இருக்கிறது. இதன் முகவரிhttp://www.askthedoctor.com /index.php/askthedoctor.html இந்த தளத்தில் மருத்துவ அறிவுரை இலவசமாக வழங்கப்படுகிறது. இது எப்படி செயல்படுகிறது? இந்த தளம் சென்று உங்களுடைய பெயர், இமெயில் முகவரி, உடல்நலம் குறித்த முழு தகவல்கள், உங்களின் கேள்வி இவற்றை நிரப்பி அனுப்பினால், அந்த தளத்திலேயே உங்கள் கேள்வி குறித்து எத்தகைய பதில் கிடைக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படும். பின் உங்களுக்கான பதில், உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த சேவை இந்த தளத்தின் முதன்மைச் சேவை என்றாலும், வேறு சில பிரிவுகளும் இதில் உள்ளன. இதன் ஹோம் பேஜில், பொதுவாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து எழுப்பும் கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் இங்கு முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டிருக்கும்.
Topics A to Z: உடல்நலம் குறித்தெல்லாம் கேள்வி இல்லை. மருத்துவத்தில் குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு மேற்கொள்ள எண்ணமா? இந்த பிரிவில் நீங்கள் விரும்பும் தலைப்பு உள்ளதா எனத் தேடிப் பார்த்து, அது குறித்து பல கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
Drugs A to Z: பலவகையான மருந்து குறித்த தகவல்களை இங்கு பெறலாம். அருகில் இருக்கும் மெனுவில் அடிக்கடி கேட்கப்பட்ட மருந்துகள் பட்டியலிடப்பட்டு தரப்பட்டிருக்கும்.
Diet and Fitness: இங்கு கட்டுப்பாடான உணவு, உடல் நலம் பேணல் குறித்த பல தகவல்கள் தரப்படுகின்றன. உணவு கலோரிகள், உடல் கட்டமைப்பு மற்றும் வளர்த்தல், உணவு உட்கொள்வதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தீகான இடைவெளிகள், வைட்டமின் என இது போன்ற பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Parenting and Pregnancy: இந்த பிரிவில் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.
Sex and Beauty: நாம் மற்றவரிடம், ஏன் டாக்டரிடம் கூடக் கேட்கத் தயங்கும் தகவல்கள் அழகாக இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்தும் பல தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.


கூகுளின் புதிய அவதாரம் – Buzz

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன. ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் “Buzz” என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் “Buzz” மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.

No comments:

Post a Comment