சாப்ட்வேர் இன்ஸ்டலேஷனில் பிரச்சினையா?
கம்ப்யூட்டர் மலர் அலுவலகத்திற்கு அடிக்கடி கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வாசகர்களிடமிருந்து இன்ஸ்டலேஷன் குறித்து வருகின்றன. அதுவும் நீங்கள் எழுதிய புரோகிராமினை அல்லது சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்தேன்; ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டது; ஏன் இது போல பிரச்சினையான சாப்ட்வேர் எல்லாம் ரெகமண்ட் செய்கிறீர்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தும் கடிதங்களும் நிறைய வருகின்றன. அப்போது வாசகர்களுடன் சேர்ந்து நாங்களும் வருத்தப்படுவோம். எதற்காக? கூடுதலாகச் சில குறிப்புகளை அவ்வப்போது தந்து கொண்டே இருக்க வேண்டும்; ஆனால் அப்படி தராததே இதற்குக் காரணாமாக இருக்குமோ என்பதால் தான். அந்தக் குறிப்புகளை இங்கு காணலாம்.
சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் பல தரப்பட்ட இது போன்ற சூழ்நிலைகளையும் தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம். இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர். இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும். அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.
சாப்ட்வேர் தொகுப்புகளை அல்லது சிறிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் நிறைய அறிவிப்புகள் வரும். வெகு நீளமான டெக்ஸ்ட்டாக இருக்கும் என்பதால் நாம் கட கடவென நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அழுத்தியவாறு விரைவாக இன்ஸ்டால் செய்வோம். ஆனால் அவை பல்வேறு கண்டிஷன்களைக் கூறி பின் இன்ஸ்டால் செய்கிறது என்பதனை உணர மாட்டோம். அதன்பின்னர் பிரச்சினை ஏற்படுகையில் அதற்கான காரணத்தை அறியாமல் திகைக்கிறோம். கீழே நல்ல முறையில் இன்ஸ்டால் செய்வதற்கான சில டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
சிஸ்டம் ஒத்துப் போகுமா? உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர் தொகுப்பின் பரிமாணங்களுடன் இன்ஸ்டால் செய்யவிருக்கும் சாப்ட்வேர் ஒத்துப் போகுமா? என்று அறிந்த பின்னரே இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் சாப்ட்வேர் குறித்து தரப்படும் தகவல்களின் இறுதியாக இவை குறிப்பிடப்பட்டிருக்கும். ப்ராசசர் என்ன ஸ்பீட் வேண்டும்? எவ்வளவு ஹார்ட் டிஸ்க் தேவைப்படும்? மெமரி எவ்வளவு இருக்க வேண்டும்? என்ன வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் எல்லாம் சாப்ட்வேர் செயல்படும் என்றெல்லாம் தரப்பட்டிருக்கும். இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கையில் நீங்கள் இன்ஸ்டால் செய்யப்பட இருக்கும் டிரைவில் எவ்வளவு இடம் உள்ளது? அது போதுமா என்றெல்லாம் காட்டப்படும். இவற்றைச் சற்றுப் பொறுமையுடன் படித்துப் பார்த்து உங்கள் சிஸ்டம் அந்த சாப்ட்வேர் தொகுப்பை ஏற்றுக் கொள்ளுமா என்பதனை வரையறை செய்த பின்னரே இன்ஸ்டால் செய்வதனைத் தொடர வேண்டும். உங்களிடம் பழைய பென்டியம் ஐ விண்டோஸ் 98, 8எக்ஸ் டிரைவ் என இருந்தால் நிச்சயம் இன்றைய நாட்களில் வரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.
லைசன்ஸ் ஒப்பந்தத்தைச் சற்றாவது படிக்கவும்: சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் போது உங்களுக்கும் அந்த சாப்ட்வேரை வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நீளமான ஒப்பந்தத்திற்கு ‘I accept’ என்பதை அழுத்தி நீங்கள் இசைவு தர வேண்டியதிருக்கும். இந்த நீளமான ஒப்பந்தத்தினைச் சற்று சில இடங்களிலாவது படிக்க வேண்டும். அதன் சில ஷரத்துக்கள் சற்று விவகாரமானவையாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ரியல் ஒன் ஆடியோ பிளேயரை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் அது உங்களுடைய பெர்சனல் தகவல்களை வாங்கிக் கொண்டு உங்கள் கம்ப்யூட்டரிலேயே அது பயன்படுத்த பதிந்து வைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் ‘I accept’ என்பதனை அழுத்தும் போது உங்களுடைய பெர்சனல் தகவல்களை அந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளிக்கிறீர்கள். இதனால் அந்நிறுவனம் மட்டுமின்றி சார்ந்த நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் அறிவிக்கைகள் உங்களுக்குத் தேவையோ இல்லையோ அவை ஸ்பாம் மெயில்கள் மாதிரி வந்து கொண்டே இருக்கின்றன. எனவே நீளமான அந்த ஒப்பந்தத்தில் privacy policy statement என்று இருப்பதையாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எங்கு இன்ஸ்டலேஷன்? இன்ஸ்டலேஷனுக்கு முந்தைய விண்டோக்களில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என தொடர்ந்து அழுத்த வேண்டாம். குறிப்பாக எந்த டிரைவில் இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது என்பதனை உணர்ந்தாக வேண்டும். பொதுவாக அனைத்து புரோகிராம்களும் சி டிரைவிலேயே இன்ஸ்டால் செய்திடும்படி செட் செய்திடப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முடிவு செய்தால் அதனை வேறு ஒரு டிரைவில் இன்ஸ்டால் செய்திடலாம். வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது. எனவே அந்த கேள்வி உள்ள விண்டோ கிடைக்கையில் அதற்கென சில டிரைவ்களை ஒதுக்கி அந்த டிரைவ்களிலேயே பதியவும். அப்படி வேறு டிரைவில் பதிந்தாலும் சாப்ட்வேர் ஒன்றின் சில பைல்கள் சி டிரைவில் பதியப்படும் என்பதனை இங்கு நினைவில் கொள்வது நல்லது.
எந்த வகை இன்ஸ்டலேஷன்? புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் தயவு செய்து மேலோட்டமாகவாவது அக்ரிமெண்ட் பக்கத்தைப் பார்க்கவும். ஒருவர் அவசரமாக பதிந்து விட்டு இறுதியில் பார்க்கையில் டெமோ பதிப்பு மட்டுமே பதியப்பட்டிருந்தது. உடனே நம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதற்குத்தானா பக்கம் பக்கமாய் எழுதினீர்கள் என்றார். இறுதியில் அவர் இன்ஸ்டால் செய்த போது டெமோ பதிப்பிற்கு யெஸ் சொல்லி நெக்ஸ்ட் அழுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. என்ன என்ன வசதிகளுடன் ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்பதனை நம்மிடம் கேட்ட பின்னரே ஒரு புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்படும். எனவே கவனமாக இவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ரீட் மி (Read Me) பைலைப் படிக்கலாமே! எப்போதும் ஒரு சாப்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்ததற்காக நன்றி சொல்லிவிட்டு ரீட் மி பைலை தரட்டுமா என்று கேட்கப்படும்; பெரும்பாலானவர்கள் இதனை தள்ளிவிட்டு புதிய சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தச் செல்வார்கள். ஏனென்றால் இந்த வகை பைல்களில் சட்ட ரீதியான ஒப்பந்தம் பற்றி மீண்டும் சில குறிப்புகள் இருக்கும். அல்லது தொழில் நுட்ப ரீதியாகத் தகவல்கள் இருக்கும். ஆனால் சில வேளைகளில் சில கம்ப்யூட்டர் சிஸ்டங்களினால் எப்படி அந்த சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று காட்டியிருப்பார்கள். இதில் உங்கள் சிஸ்டமும் ஒன்றாக இருக்கலாம். எனவே இதனையும் படித்து அறிந்து கொள்வது நல்லது.
டுடோரியல் பக்கங்கள்! பல சாப்ட்வேர் தொகுப்புகளில் டுடோரியல் பக்கங்கள் என சிலவற்றைத் தந்திருப்பார்கள். குறிப்பிட்ட சாப்ட்வேர் தொகுப்பினை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ன என்ன பயன்கள் கிடைக்கும் எனத் தரப்பட்டிருக்கும். குறிப்பாக விர்ச்சுவல் டிரைவ், பயர்வால், பாப் அப் பிளாக்கர்கள், குறிப்பான சில பயன்பாடுகளைத் தரும் புரோகிராம்கள் (கால்குலேட்டர், கரன்சி கன்வெர்டர், பிற மொழி சாப்ட்வேர் தொகுப்புகள் போன்றவை) ஆகியவற்றைச் சரியாக செட் (Configure) செய்திடாவிட்டால் அவை சரியாகச் செயல்படாமல் போகும் வாய்ப்பு உண்டு.
எனவே பயன்களைச் சரியாக அதிக பட்ச அளவில் பெற இதனைப் படித்தறிவது நல்லது.இது போன்ற சின்ன சின்ன வழிகாட்டல்களைப் பின்பற்றுவது பின் நாளில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும்.
டி.வி.நிகழ்ச்சிகள் நாம் நினைத்த நேரத்தில் பார்த்து மகிழ
டிஜிட்டல் வழி பொழுது போக்கு சாதனங்கள் திடீர் திடீரென புதிய வகைகளில் அறிமுகமாகி நம் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் சில மாதங்களாய் நம் ஹால்களில் நுழைந்து வேகமயமாகி வரும் வாழ்க்கையில் இன்னொரு வசதியான சாதனமாய் உருவாகியுள்ளது.
டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் அல்லது பெர்சனல் வீடியோ ரெகார்டர் என அழைக்கப்படும் இந்த சாதனம் வீடியோவினை டிஜிட்டல் பார்மட்டில் ஒரு டிஸ்க் அல்லது வேறு வகை மெமரி சாதனத்தில் பதிந்து பின் நாம் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தத் தருகிறது. ஸ்டேண்ட் அலோன் செட் டாப் பாக்ஸ், போர்டபிள் மீடியா பிளேயர், பெர்சனல் கம்ப்யூட்டரில் வீடியோ கிளிப்களை ரெகார்ட் செய்து பின் இயக்க வழி தரும் சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகிய அனைத் தையும் இந்த பெயரில் அழைக்கலாம். நுகர்வோருக்கான எலக்ட்ரானிக் சாதனங்களை வடிவமைத்துத் தரும் சில நிறுவனங்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளை இது போன்ற டிஜிட்டல் வீடியோ ரெகார்டரையும் அதற்கான சாப்ட்வேர் தொகுப்பினையும் இணைந்ததாகத் தரத் தொடங்கிவிட்டன. எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதனை 2007 ஆம் ஆண்டிலேயே வடிவமைத்து வெளியிட்டது. தற்போது பல வடிவங்களில், நிலைகளில் இவை கிடைக்கத் தொடங்கிவிட்டன.
முதன் முதலில் அமெரிக்காவில் நடந்த ஒரு எலக்ட்ரானிக் �ஷாவில் 1999 ஆம் ஆண்டில் டி.வி.ஆர் மற்றும் ரீ பிளே டிவிக்கள் காட்டப்பட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த செயல்பாட்டை முன்னிறுத்தி சாப்ட்வேர் தொகுப்பினை வெளியிட்டது. ஆனால் வர்த்தக ரீதியாக இந்த தொகுப்பு 1999 ஆம் ஆண்டின் பின்பகுதியில்தான் கிடைத்தது.
டி.வி. ஆர். – அதன் அடிப்படைகள்: டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் என்பது அடிப்படையில் ஓர் அழகான பெட்டியில் ஹார்ட் டிரைவ் ஒன்றினைக் கொண்டிருக்கும். இதன் பின்புறம் இதனை டிவி, செட் டாப் பாக்ஸ், கேபிள் பாக்ஸ் அல்லது வி.சி.ஆர். ஒன்றுடன் இணைப்பதற்கான போர்ட்டுகள் இருக்கும். ஆன்டென்னா, கேபிள் அல்லது சாட்டலைட் மூலம் டெலிவிஷன் சிக்னல்கள் இந்த டி.வி.ஆர். உள்ளே உள்ள ட்யூனரை வந்தடையும். பின் அந்த சிக்னல்கள் ஒரு எம்பெக்-2 என்கோடருக்கு மாற்றப்படும். இங்கே அனலாக் சிக்னல்கள் டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்படும். (எம்பெக் 2 என்பது ஒரு டிவிடியில் டேட்டாவினை பதியும் வகையில் சுருக்கி மாற்றித் தரும் தொழில் நுட்பம் என்பது தெரிந்ததே)
இந்த என்கோடரிலிருந்து சிக்னல்கள் இரண்டு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. முதலாவதாக இவற்றை சேவ் செய்து பதிந்து வைத்திட ஹார்ட் டிரைவிற்கு. இரண்டாவதாக எம்பெக்–2 டிகோடர் சாதனத்திற்கு. இந்த டிகோடர் டிஜிட்டல் சிக்னல்களை மீண்டும் அனலாக் சிக்னல்களாக மாற்றி தொலைக் காட்சிப் பெட்டிக்கு காட்சிகளாக நாம் காணுவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சில சிஸ்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்யூனர்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் ஒரே நேரத்தில் பல சேனல்களின் டிஜிட்டல் சிக்னல்கள் டிரைவின் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகின்றன. இதனால் சில சாதனங்களில் இரண்டு வெவ்வேறு சேனல்கள் பதியப்படுகையில் நம்மால் மூன்றாவதாக ஒரு சேனலைக் கண்டு களிக்கலாம்.
சாட்டலைட் டிவி மற்றும் டிஜிட்டல் கேபிள்: டிஜிட்டல் கேபிள் அல்லது சாட்டலைட் சிஸ்டங்களில் பாக்ஸுக்குள்ளாக எந்தவிதமான என்கோடரும் தேவைப்படுவதில்லை; ஏனென்றால் சாட்டலைட் அல்லது கேபிள் நிறுவனம் இந்த சிக்னல்களை டிஜிட்டல்களாக மாற்றிய பின்னரே நமக்கு வழங்குகின்றன. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் காட்சி, ஆன்டென்னா அல்லது கேபிள் சிஸ்டம் மூலம் கிடைக்கும் காட்சிகளைக் காட்டிலும் அதிகத் தெளிவுடன் இருக்கின்றன.
ஒரு டிவிஆர் பழைய வி.சி.ஆர். சாதனத்தைப் போல இயங்குவதாகத் தெரிந்தாலும் இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. டிவிஆர் சாதனத்தில் டேப் கிடையாது. வி.சி.ஆர். காட்சிகளைப் பதிய மட்டுமே செய்திடும். காலியான டேப்புகள் இதன் மீடியாவாகும்.ஆனால் ஒரு டிவிஆர் சாதனத்தில் மீடியா மற்றும் டூல் ஆகிய இரண்டும் ஒன்றே. ஹோம் நெட்வொர்க் என அழைக்கப்படும் எந்த சிறிய நெட்வொர்க்கிலும் டிவிஆர் –னை இணைத்து உலகின் இன்னொரு மூலையிலிருந்து கிடைக்கும் வீடியோ காட்சிகளைப் பதிந்து கொள்ளலாம்.
டிவிஆர் நமக்குத் தரும் மிகப் பெரிய வசதி என்னவென்றால் டிஜிட்டல் காட்சிகளைத் திரும்பப் பெறுவதற்கு நமக்கு அளிக்கும் ஆப்ஷன்கள் தாம். வி.சி.ஆர் ஒன்றில் ஒரு வீடியோ காட்சி ஒன்றைப் பதிந்தால் அது முடிந்து பின் மீண்டும் டேப் திரும்ப சுழன்று முதலில் இருந்து காட்சிகளைக் காணலாம். ஆனால் டிவிஆர் மூலம் காட்சி தொடர்ந்து பதிந்து கொண்டிருக்கும்போதே பத்து நிமிடங்களுக்கு முன் பதிந்த காட்சியைக் காணலாம். அப்போதும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து பதியப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.
இதனால் பயன்படுத்த எளிமை, காட்சிகளைத் தேடி அறிய நவீன தேடுதல் முறைகள், ஒரே நேரத்தில் பதிவதும் இயக்குவதுமான இரட்டை வேலை, படங்களின் தெளிவு சிறிதும் சிதையாமை, படங்களைச் சுருக்கிப் பதிதல், தூரத்தில் இருந்து பதிவதனையும் பார்ப்பதனையும் கட்டுப்படுத்துதல் எனப் பல பரிமாணங்களை பொழுதுபோக்கு உலகிற்கு இந்த டிவிஆர் தருகிறது.
மேலும் IPTV DVR சாதனத்தை எளிதாக நெட் வொர்க்கில் இணைக்க முடிகிறது. இதனுள்ளே அமைக்கப்படும் இணைய இன்டர்பேஸ் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர் வழியாக ஒரே நேரத்தில் வீடியோ காட்சியினைப் பார்ப்பதும், பதிவதும், மீண்டும் இயக்கிப் பார்ப்பதும் எளிதாகிறது. இதில் தரப்பட்டுள்ள வீடியோ ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தின் மூலம் குறைந்த அளவிலான டிஸ்க் இடத்தில் அதிக பட்ச வீடியோ சிக்னல்கள் பதிவாகின்றன.
இந்தியாவில் இந்த டிவிஆர் குறைந்த அளவிலேயே பயன்பாட்டில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மலரில் டாட்டா ஸ்கை இவ்வகையில் அறிமுகம் செய்த டாட்டா ஸ்கை ப்ளஸ் சாதனம் குறித்து ஏற்கனவே இங்கு தகவல்களைத் தந்திருந்தோம். இந்த வகை டாட்டா ஸ்கை இணைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்களிடம் பரவவில்லை. மொத்தத்தில் இது 10 சதவிகிதம் என்ற அளவிலேயே தான் உள்ளது. இதற்குக் காரணம் இந்த டிவிஆர் பாக்ஸின் விலை தான். டாட்டா ஸ்கை நிறுவனம் இந்த பாக்ஸின் விலையில் ரூ. 5,000 முதல் ரூ.8,000 வரை தள்ளுபடி செய்தே தர வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 2,000 கோடி இழப்பில் இந்திய சாட்டலைட் டிவி சேனல் நிறுவனங்கள் இயங்கி வருவதாக மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா என்ற அமைப்பு தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் மேலும் தள்ளுபடி விலையில் இந்த டிவிஆர் கள் சாட்டலைட் இணைப்புகளுடன் தரப்படுமா என்பது சந்தேகமே.
எது எப்படி இருந்தாலும் டிஜிட்டல் பொழுது போக்கு சாதனங்களின் வரிசையில் டிவிஆர் ஒரு ஸ்பெஷல் மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டெலிவிஷன் சேனல் நிகழ்ச்சியை எந்த நேரத்தில் ஒருவர் காண வேண்டும் என்ற உரிமையை இந்த டிவிஆர் சாதனங்கள் மக்களுக்கு வழங்கி உள்ளன என்பது ஒரு புரட்சிகரமான மாறுதல் தானே. எனவே விரைவில் இது மக்களை அதிகமான எண்ணிக்கையில் சென்றடையும் என்று எதிர்பார்க்கலாம்.
எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ்….
பில் ஹேண்டில்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்துவிட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் கிடைக்கும். இதனை இழுத்தால் செல்லில் உள்ள டேட்டா கீழாக உள்ள செல்லில் அமைக்கப்படும். இது எப்படி அமைக்கப்படுகிறது? எடுத்துக் காட்டாக ஒரு எண்ணை அமைத்துப் பின் பில் ஹேண்டிலை வைத்து இழுத்தால் அந்த எண் மற்ற செல்களில் ஜஸ்ட் காப்பி செய்யப்படுகிறது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 2345 என எண்டர் செய்து பில் ஹேண்டில் இழுத்தால் கீழே உள்ள செல்களில் 2345 என்ற எண் காப்பி செய்யப்படும்.
அடுத்ததாக அவ்வாறு இழுக்கும் போது கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு இழுத்தால் அடுத்தடுத்த செல்களில் எண்ணுடன் 1 சேர்த்து அடுத்த எண் அமைக்கப்படும். அதாவது 2346, 2347, 2348 என அமைக்கப்படும்.
சரியா! இப்போது செல்லில் ஒரு தேதியை அமைத்து இதே போல பில் ஹேண்டிலைப் பயன்படுத்துங்கள். சாதாரணமாக இழுத்தால் எண்களுக்கு நடந்தது போல அதே தேதி காப்பி ஆகாது. அதற்குப் பதிலாக அடுத்த அடுத்த தேதி காப்பி ஆகும். அதாவது 03–03–09 என டைப் செய்து பின் ஹேண்டிலை இழுத்தால் 04–03–09, 05–03–09 என்று வரிசையாக அமைக்கப்படும். (ஒர்க் ஷீட்டில் தேதி பார்மட் அமைப்புப்படி இது நடக்கும்) அப்படியானால் கண்ட்ரோல் கீ அழுத்தி அமைத்தால் என்னவாகும் என்று எண்ணுகிறீர்களா. ஜஸ்ட் அதே தேதி காப்பி ஆகும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. எக்ஸெல் ஒவ்வொரு வகை டேட்டாவிற்கும் பில் ஹேண்டில் பயன்பாட்டினை ஒவ்வொரு வகையில் அமைத்துள்ளது என்பது தெரிகிறது.எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றினைத் திறக்க முயற்சிக்கையில் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இதே போன்று தான் மற்ற விண்டோஸ் புரோகிராம்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் எக்ஸெல் பைல்கள் எந்த வகையில் வரிசைப்படுத்தப்பட்டு திறக்கப்படுவதற்குக் காட்டப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.
1. File மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும்; அல்லது Standard டூல் பாரில் Open டூல் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 ஆக இருந்தால் ஆபீஸ் பட்டனை அழுத்துகையில் கிடைக்கும் ஓப்பன் டூலினைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஓப்பன் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் Toolbar ல் உள்ள View டூல் அருகே வலது பக்கம் உள்ள கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் கீழ் விரியும் மெனு ஒன்றைத் தரும்.
3. இதில் Arrange Icons என்று ஒரு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் பைல்களை எந்த வகையில் வரிசைப்படுத்தி வைக்க என பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அகரவரிசை, இறுதியாக எடிட் செய்த நாளின் அடிப்படையில், அளவின் அடிப்படையில் எனப் பல ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில் எந்த வகையில் இருந்தால் உங்களுக்குச் சரியாக இருக்குமோ அந்த வகையினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் படி பைல்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்படும். பின்னர் நீங்கள் பைல் ஓப்பன் டயலாக் பாக்ஸ் திறக்கும் போது அதே வகையிலேயே இருக்கும். மீண்டும் இதனை மாற்றினால் தான் மாறும்.
விண்டோஸ் + எக்ஸெல் இணைந்து செயலாற்றும் சில பதிப்புகளில் Arrange Icons மெனு கிடைக்காமல் இருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் பைல் ஏரியாவில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் Context மெனுவில் இந்த Arrange Icons மெனு கிடைக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.
ஒர்க் புக் அனைத்தையும் மூட
எக்ஸெல் தொகுப்பில் பல ஒர்க்புக்குகளைத் திறந்து வேலை பார்த்துக் கொண்டிருப்போம். அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் அவற்றை மூட வேண்டும். ஒவ்வொன்றாக மூடுவோம். பைல் மெனு சென்று Close பிரிவில் கிளிக் செய்திடுவோம். ஒவ்வொரு ஒர்க்புக்கினையும் இவ்வாறு மூட முயற்சிப்போம். அதிகமான எண்ணிக்கையில் ஒர்க்புக்குகள் திறக்கப்பட்டிருந்தால் இந்த வேலை சற்று சலிப்பினைத் தரும். அதற்குப் பதிலாக இவை அனைத்தையும் எக்ஸெல் தொகுப்பை மூடாமல் மூடிட ஒரு வழி உள்ளது. பைல் மெனுவில் கிளிக் செய்திடுகையில் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். அப்போது பைலை மூட அழுத்த இருக்கும் Close கட்டளை Close All கட்டளையாக மாறி இருக்கும். இதில் கிளிக் செய்தால் அனைத்து ஒர்க்புக்குகளும் உடனே மூடப்படும்.
எக்ஸெல் செல் அகலம்
எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலையைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும் படி இருக்க வேண்டும் என விரும்பினால் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.
1. நீங்கள் அட்ஜஸ்ட் செய்திட விரும்பும் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். எந்த செல்லில் அதிகமான அகலத்தில் டேட்டா தரப்பட்டு அவை காட்டப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Column என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு சப் மெனுவினைக் காட்டும்.
3. இந்த சப்மெனுவில் இருந்து Autofit என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அதில் உள்ள டேட்டா அனைத்தும் தெரியும் வகையில் செல்லின் அகலம் நீட்டப்படும். இன்னொரு வழியும் உள்ளது. எந்த செல்லின் அகலத்தினை அகலப்படுத்த வேண்டுமோ அதன் டிவைடிங் பாரில் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். அதாவது ஈ என்ற நெட்டு வரிசையில் உள்ள செல்லின் அகலத்தை நீட்டிக்க ஈ மற்றும் உ நடுவே அவற்றைப் பிரிக்கும் பாரில் உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். ஒர்க் ஷீட்டின் மேலாக காலம் தலைப்பு உள்ள கிரே ஏரியாவில் காணும் டிவைடரில் இதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்டோ பிட் வழி சென்று அமைத்தால் நீங்கள் எந்த செல்லைத் தேர்ந்தெடுத்து இந்த வழியை மேற்கொள்கிறீர்களோ அந்த செல்லுக்கேற்றபடி அகலம் அமைக்கப்படும். இரண்டாவது வழியில் டிவைடர் மூலம் மேற்கொள்கையில் நாம் விரும்பும் வகையில் அகலப்படுத்தலாம்.
பார்முலா இயங்கும் வழிகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நிறைய பார்முலாக்களைப் பயன்படுத்துவோம். டேட்டாவினைக் கணக்கிட்டுத் தர இவை நமக்கு உதவுகின்றன. இவற்றைச் சரியாக அமைக்கவில்லை என்றால் நாம் விரும்பும் வகையில் டேட்டாக்களைக் கையாள முடியாது; தேவையான முடிவுகளும் கிடைக்காது. பார்முலாவில் தவறு உள்ளதா என்றோ அல்லது பார்முலா எந்த வழிகளில் செயல்படுகிறதோ என்று நம்மால் அறிந்தால் தவறு எங்கே நேர்கிறது என்று அறியலாம். எக்ஸெல் ஒரு பார்முலா எப்படி செயல்படுகிறது என்பதனைப் படிப்படியாகக் காட்டுவதற்கு வழி ஒன்றைப் பெற்றுள்ளது.
1. நீங்கள் ஆய்வு செய்திட விரும்பும் பார்முலா உள்ள செல்லினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Tools மெனுவில் இருந்து Formula Auditing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக் ஸெல் இங்கு ஒரு சப் மெனுவினைத் தரும்.
3. இந்த சப் மெனுவில் இருந்து Evaluate Formula என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸெல் Evaluate Formula Dialogue Box னைக் காட்டும்.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் பார்முலா டேப்பினைக் காட்டவும். இதில் Formula Auditing குரூப்பில் Evaluate Formula டூலினைக் கிளிக் செய்திடவும். இங்கும் Evaluate Formula Dialogue Box கிடைக்கும். இந்த இடத்தில் எக்ஸெல் செல்லில் உள்ள பார்முலாவினை முழுமையாகக் காட்டும். இதில் சில பகுதிகள் அடிக்கோடிடப்பட்டிருக்கும். இந்த அடிக்கோடிட்ட பகுதிகள் அடுத்து அந்த பார்முலா கணக்கிட இருக்கும் பகுதியாகும். இதனை அறிவதன் மூலம் எக்ஸெல் குறிப்பிட்ட முடிவினைக் காட்ட இடையே எந்த வேலையை மேற்கொள்கிறது என்பதனை நாம் அறிய முடிகிறது.
ஒவ்வொரு முறை Evaluate பட்டனை அழுத்தும் போதும் எக்ஸெல் அடிக்கோடிட்ட பகுதிக்கான முடிவினைக் காட்டும். இந்த Formula Evaluator மூலம் நீங்கள் என்ன செய்தாலும் ஒர்க் ஷீட்டில் உள்ள பார்முலா மாற்றப்பட மாட்டாது. பார்முலாவின் ஒவ்வொரு நிலையிலும் என்ன நடைபெறுகிறது; இடைக்கால முடிவு என்ன என்றே இந்த வசதி காட்டும். முழுமையாகப் பார்த்தவுடன் குளோஸ் பட்டனை அழுத்தி வேலையை முடிக்கலாம்.
மைக்ரோசாப்ட் அடோப் எச்சரிக்கை
ஜூன் 9 அன்று மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள சில தவறுகளுக்கான பேட்ச் பைல்களை வெளியிட்டது.
அதே போல அடோப் நிறுவனம் தன்னுடைய இணைய தளத்தில் பாதுகாப்பான இயக்கத்திற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்ரோபட் மற்றும் ரீடர் தொகுப்புகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய பதிப்புகளுக்கு மாறிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய பதிப்புகள் தங்களுடைய பெர்சனல் கம்ப்யூட் டர்களில் சரியாக இயங்கவில்லை என் றால் அதற்கேற்ப கூடுதல் சாப்ட்வேர் தொகுப்புகளும் தரப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வழங்கியுள்ளது. தற்போதைய தொகுப்புகளில் உள்ள சில தவறுகள் மிகவும் ஆபத்தானவை என்று அறிவித்துள்ளது. இருப்பினும் இவற்றைப் பயன்படுத்தி இதுவரை எந்த மலிசியஸ் சாப்ட்வேரும் இயங்கியதாகத் தெரியவில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை அடோப் தொகுப்புகளைப் பயன்படுத்தும் விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இவை வெளியே தெரிய வரும் பட்சத்தில் கெடுதல் விளைவிக்கும் மலிசியஸ் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிப்பவர்கள் உடனே தயாரிக்கத் தொடங்கி விடுவார்கள் என்றும் கூறியுள்ளது.
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம்.
அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?
எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள்.
அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள். பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
வேர்ட் தெரிந்ததும் தெரியாததும்
எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் தொகுப்பினைக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும், அதன் பல்வேறு சுருக்க வழிகளைப் பயன்படுத்தி விரைவாகப் பணிகளை முடிக்கின்றனர். ஆனால் இத்தொகுப்பு வழங்கும் பல வழிகள் இதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கும் தெரியாததாகவே உள்ளது. சிலர் இது போன்ற புதிரான வழிகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த சில வழிகள் குறித்து அறியாமல் அல்லது தெரிந்தும் அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பார்கள். அவற்றில் சில வழிகள் குறித்து இங்கு காணலாம்.
1. பைண்ட் அண்ட் ரீபிளேஸ்: Find and Replace
என்பது வேர்ட் தொகுப்பில் சில சொற்களை மொத்தமாக எடிட் செய்வது மட்டுமின்றி, ஒரு டாகுமெண்ட்டில் இவற்றின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது. சொற்கள் மட்டுமின்றி பார்மட்டிங், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஏன் காலியான ஸ்பேஸ் அடையாளங்கள் ஆகியவற்றை எடிட் செய்திடவும் உதவுகிறது. இந்த Find and Replace டயலாக் பாக்ஸ் வேண்டுமென்றால் மெனு செல்லாமல் கீ போர்டிலேயே அதற்கான ஷார்ட் கட் உள்ளது. Ctrl+H A�x F5+Alt+P அழுத்துங்கள்.
ஸ்பேஸ் கேரக்டரை இதில் எப்படி எடிட் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா? அதற்கான சந்தர்ப்பம் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறதா? சில வேளைகளில் இதனையும் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஒருவர் ஒரு வாக்கியம் முற்றுப் பெற்றவுடன் அடுத்த வாக்கியம் முன் இரு ஸ்பேஸ் விட்டு தொடங்குவார். இது பழைய காலத்தில் டைப் ரைட்டர் வகை பார்மட்டிங். இப்போது ஒரு சிலர் இந்த பார்மட் வழியைக் கடைப்பிடித்தாலும் பலர் ஒரு ஸ்பேஸ் விட்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் இந்த Find and Replace விண்டோ மூலம் Find What கட்டத்தில் இரு ஸ்பேஸ் இடைவெளியினை முதலில் ஏற்படுத்தி பின் Replace With கட்டத்தில் ஒரு ஸ்பேஸ் இடைவெளியை ஏற்படுத்தி அமைக்கலாம்.
தேவையற்ற பாரா இடைவெளிகள், டேப் இடைவெளிகள், நீங்களாக அமைத்த லைன் இடைவெளிகள் ஆகிய ஸ்பெஷல் கேரக்டர்களை எப்படி நீக்குவது? Find and Replace டயலாக் பாக்ஸில் More என்பதில் கிளிக் செய்திடுங்கள். இந்த கட்டம் விரியும் போது Special என்பதில் கிளிக் செய்யவும். இங்கு எந்த ஸ்பெஷல் கேரக்டர் எடிட் செய்யப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இந்த கேரக்டர் இருக்கும் இடத்தில் வேறு எதனையும் அமைக்கப் போவதில்லை. எனவே Replace With என்பதைக் கிளிக் செய்து அங்கு Delete என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Find Next என்பதில் கிளிக் செய்து அடுத்த எடிட்டிங் வேலையைத் தொடரலாம். இப்படி ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து எடிட் செய்து தேவையற்ற ஸ்பெஷல் கேரக்டர்களை நீக்கலாம்.
2.பாரா இடைவெளி அமைத்தல்: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா மார்க்கர்களை அமைக்க ஸ்பேஸ் பார் அல்லது டேப் கீயினை அழுத்தி அமைக்கிறீர்களா? தேவையே இல்லை. வேர்டில் கிடைக்கும் ரூலர் இந்த வசதிகளை அளிக்கிறது. (உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் ரூலர் தெரியவில்லையா? வியூ சென்று ரூலர் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அப்போதும் தெரியவில்லையா? உங்கள் வேர்ட் டாகுமெண்ட் வியூ மெனுவில் பிரிண்ட் லே அவுட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது மேலாகவும் இடது பக்கமும் ரூலர்கள் காட்டப்படும். ரூலரின் இடது பக்க ஓரத்தில் இரண்டு முக்கோணங்கள் ஒரு சிறிய கட்டத்தின் மீது அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இவை மூன்று சிறிய தனி ஐகான்களாகும். இவற்றைப் பயன்படுத்தி பாரா இடைவெளியை அமைக்கலாம். மேலே உள்ள சிறிய முக்கோணம் ஒவ்வொரு பாராவின் முதல் வரிக்கான இடைவெளியை அமைக்கிறது. கீழே உள்ள முக்கோணம் பாராவில் உள்ள மற்ற வரிகள் ஒவ்வொன்றிற்கும் தனி இடைவெளியை அமைக்க உதவுகிறது. கீழே இருக்கும் சிறிய பாக்ஸ் பாரா முழுவதையும் எப்படி அமைக்க வேண்டும் என்பதில் உதவுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட முதல் வரி இடைவெளி மற்றும் பிற வரிகளின் அமைக்கப்பட்ட இடைவெளியினை அப்படியே வைத்துக் கொள்கிறது. இதே ரூலரின் வலது மேல் ஓரத்தில் ஒரே ஒரு முக்கோணம் இருப்பதனைக் காணலாம். இது வலது பக்கம் இன்டென்ட் அமைக்க உதவுகிறது.
3.ஆட்டோ கரெக்ட்: பொதுவான சிறிய டெக்ஸ்ட்டை வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கும் வசதியே ஆட்டோ கரெக்ட். இதன் அடிப்படை வேலை ஆங்கிலச் சொற்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அமைப்பதுதான். எடுத்துக் காட்டாக ‘and’ பதிலாக ‘adn’ என டைப் செய்தால் அது ‘and’ எனத் திருத்தப்படும். இப்படியே பல சொற்கள் ஏற்கனவே ஆட்டோ கரெக்ட் பட்டியலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதனைப் பயன்படுத்தி சிறிய டெக்ஸ்ட்களையும் ஓரிரு கீ அழுத்தலில் அமைக்கும்படி செட் செய்திடலாம்.
AutoText க்குப் பதிலாக Auto Correct பயன்படுத்தினால் என்டர் அல்லது எப்3 அழுத்தத் தேவையில்லை. வேர்ட் தொகுப்பு சொற்பிழையினைத் தானாகத் திருத்தும். மேலும் நீங்களாக ஒரு டெக்ஸ்ட்டை அமைத்து இயக்க இரண்டு கீகளை அழுத்தினால் போதும். எடுத்துக் காட்டாக உங்கள் இமெயில் முகவரியினை வேர்ட் டாகுமெண்ட்களில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் அதனை செட் செய்திடலாம். இதற்கு Tools, AutoCorrect Options (or Tools, AutoCorrect உங்களின் வேர்ட் பதிப்பைப் பொறுத்து) எனச் செல்லவும். இங்கு ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Replace text –இல் zz என அமைக்கவும். பின் With பீல்டில் உங்களுடைய இமெயில் முகவரியினை அமைக்கவும். அதன் பின் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி எப்போது zz டைப் செய்து ஸ்பேஸ் பார் அழுத்தினாலும் உடனே உங்கள் இமெயில் முகவரி தானாக அமைக்கப்படும். இதில் என்ன வசதி என்றால் ஆட்டோ டெக்ஸ்ட் என்றால் உங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டு இணைக்கவா என்று கேட்கப்படும். அந்த இடைச்செருகல் இங்கே இருக்காது.
4. ஆட்டோ டெக்ஸ்ட்: வேர்ட் தொகுப்பில் பொதுவான சில சொற்றொடர்களை (நாள், தேதி போன்றவை) டைப் செய்திட முயற்சிக்கையில் சிறிய மஞ்சள் கட்டத்தில் முழுமையாக அந்த டெக்ஸ்ட் காட்டப்படும். உடனே என்டர் அல்லது எப்3 தட்டினால் அந்த டெக்ஸ்ட் அமைக்கப்படும். இதனைத்தான் ஆட்டோ டெக்ஸ்ட் என அழைக்கிறோம். வேர்ட் தொகுப்புடனே வரும் டெக்ஸ்ட் என்ட்ரிகளுடன் நாமாகவும் நமக்குத் தேவையானதை அமைக்கலாம். அமைக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் வேர்ட் டாகுமெண்ட் பைலில் டைப் செய்திடவும். இது பாரா மார்க்கர்கள் அடங்கிய ஒரு முழு பாராவாகக் கூட இருக்கலாம். இதில் ஸ்பெஷல் கேரக்டர்கள் கூட இருக்கலாம். தினந்தோறும் கடிதங்களை குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புபவர்கள் அவர்களின் முகவரிகளை டைப் செய்து ஆட்டோ டெக்ஸ்ட்டில் போட்டு வைக்கலாம். இங்கு எடுத்துக் காட்டாக அதனையே காணலாம். ஒருவரின் முகவரியை டைப் செய்து பின் அதனை செலக்ட் செய்து கொள்ளவும். அதன் பின் இன்ஸெர்ட் மெனு சென்று அங்கே ஆட்டோ டெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் நியூ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே நீங்கள் அமைக்க இருக்கும் ஆட்டோ டெக்ஸ்ட்டுக்கு வேர்ட் தொகுப்பு ஒரு பெயரைத் தரும். அல்லது நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயரை குறைந்தது ஐந்து கேரக்டர்கள் வரும் வகையில் அமைக்க வேண்டும். பின் ஓகே கிளிக் செய்துவிட்டால் எந்த பெயரை நீங்கள் அமைத்தீர்களோ அதனை டைப் செய்திடத் தொடங்குகையில் நான்கு கேரக்டர்கள் வந்தவுடன் அதனுடன் ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரி ஒத்துப் போனால் வேர்ட் ஒரு சிறிய கட்டத்தில் டெக்ஸ்ட்டை காட்டும். அது வேண்டும் என்றால் உடனே எப்3 அல்லது என்டர் பட்டனைத் தட்ட வேண்டும். நீங்கள் அமைத்தது மற்றும் அதற்கெனக் கொடுத்த பெயர் மறந்து போய்விட்டால் Insert, AutoText, AutoText எனச் சென்று அங்கு கிடைக்கும் பட்டியலில் சுருக்குப் பெயர்களையும் அதற்கான டெக்ஸ்ட்களையும் காணலாம். இந்த பட்டியல் மூலம் தேவையற்ற என்ட்ரிகளை நீக்கலாம். ஏற்கனவே அமைத்த டெக்ஸ்ட்களை எடிட் செய்திடலாம்.
5.பைல் மெனுவில் ஒன்பது பைல்: வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப்படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் தேவையில்லை. இதில் நான்கு பைல் என்பதனை ஒன்பது பைல் வரை காட்டும்படி செட் செய்திடலாம். இதற்கு Tools மெனுவில் Options செலக்ட் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேப்பினைத் தட்ட வேண்டும். அதில் Recently Used File list என்று காட்டப்பட்டு ஒரு வரி இருக்கும். அதன் முன்னால் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின் அதன் அருகே எண்ணை அமைக்க உள்ள கட்டத்தின் மேல், கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எண்ணை டைப் செய்தோ நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் திறந்து பயன்படுத்திய பைல்களின் எண்ணிக்கையை செட் செய்திடலாம். இது வேர்டுக்கு மட்டுமின்றி அனைத்து எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கும் பொருந்தும்.
6. டேபிள் ஸ்டைல்: வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்குகையில் அதன் ஆட்டோமேடிக் டேபிள் இரண்டு வரிசையில் ஐந்து நெட்டு வரிசையுடன் தரப்படும். இவற்றின் எண்ணிக்கையைக் கூட்டியோ குறைத்தோ அமைத்தாலும் கிடைக்கும் டேபிளின் தோற்றம் வெறும் கட்டமாக இருக்கும். இதனை அழகான ஸ்டைலில் மாற்ற வேர்ட் தொகுப்பு 45 வகையான ஸ்டைலைத் தருகிறது. ஒரு டேபிளின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்றால் அதனுள் கர்சரை அமைத்து Table
மெனுவில் கிளிக் செய்து Table AutoFormat தேர்ந்தெடுக்கவும். உடன் Table AutoFormat டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் 45 ஸ்டைலுக்கான பெரிய லிஸ்ட் கிடைக்கும். இதில் ஒவ்வொன்றின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அதன் தோற்ற மாதிரி காட்டப்படும். பிடித்திருந்தால் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். ஸ்டைல் மாடல் பிடித்திருந்து அதிலும் சில மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்னினால் modify என்பதில் கிளிக் செய்தால் எழுத்து வகை மற்றும் பார்மட்டிங் மாற்றிட விண்டோ கிடைக்கும். தேவையான மாற்றங்களுடன் புதிய ஸ்டைல் உருவாக்கி வைக்கலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் சாதாரணமாகத் தோற்றமளித்த டேபிள் படு ஸ்டைலாகக் காட்சி அளிக்கும்.
7. பாண்ட் கேஸ் மாற்ற: ஒரு சொல்லின் எழுத்துக்கள் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரியதாக என வேர்டில் மாற்றலாம். மாற்ற வேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட்+எப்3 அழுத்தினால் இந்த மாற்றங்கள் அடுத்தடுத்து வரும். தேவையானது வந்தவுடன் கீகளிலிருந்து விரல்களை எடுத்துவிடலாம்.
8. வேகமாக பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லினை பார்மட் செய்திட (போல்ட், இடாலிக், அடிக்கோடு) அதனைத் தேர்ந்தெடுத்துப் பின் மெனு பாரில் உள்ள சார்ந்த ஐகானைக் கிளிக் செய்கிறோம். இந்த சிரமம் தேவையில்லை. எந்த சொல்லை பார்மட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு ப் பின் தேவையான ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதனால் ஷிப்ட் அழுத்தி கர்சரை நகர்த்தி சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலையும் நேரமும் மிச்சமாகிறது.
9. டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இன்னொரு வழி: டாகுமெண்ட்டில் சில நேரங்களில் வரிகள் ஓரமாக ஏதேனும் தேவைப்படாத குறீயீடுகள் அமைந்திருக்கும். அல்லது டாகுமெண்ட்டில் நீளவாக்கில் தேவையற்ற டேட்டாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை நீக்க இவற்றை ஒவ்வொன்றாகச் சென்று டெலீட் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. ஆல்ட் கீயை அழுத்தியவாறு நெட்டு வாக்கில் இந்த கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து பின் வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் என்ன என்ன செய்கிறோமோ அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
10. ஆட்டோ சேவ்: ஒரு சிலர் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அடிக்கடி கண்ட்ரோல் +எஸ் அழுத்தி பைலை சேவ் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் முற்றிலும் மறந்துவிடுவார்கள். இடையே ஏதேனும் காரணத்தினால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் செய்த வேலை எல்லாம் போய்விடும். இது போன்றவர்களுக்காகவே வேர்ட் சில தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. வேர்ட் தானாகவே நீங்கள் தயார் செய்து கொண்டிருக்கும் டாகுமெண்ட்டை நீங்கள் செட் செய்திடும் கால அளவில் சேவ் செய்திடும். இதற்கு Tools>Options சென்று பின் கிடைக்கும் விண்டோவில் Save டேப் கிளிக் செய்திடவும். இதில் Save Auto recover info every என்று இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் கால அளவை நிமிடங்களில் செட் செய்திடலாம். இதனால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனாலும் பைல் மீட்கப்பட்டு கிடைக்கும்.
குழந்தைகளுக்கென தனியே ஒரு தளம்
குழந்தைகள் என்றாலே நமக்கு கொள்ளை ஆசைதான். முதலில் நம் குழந்தைகளை அன்போடு எதிர்பார்ப்புகளுடன் வளர்த்து ஆளாக்குகிறோம். பின் அவர்களின் குழந்தைகளை, பேரக் குழந்தைகளை வளர்க்கத் தொடங்குகிறோம். இவர்களின் ஒவ்வொரு நிகழ்வையும் போட்டோக்கள் எடுத்து ஆல்பங்களாக அமைத்து காட்டி மகிழ்கிறோம். குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களுக்குக் காட்டி நீங்கள் இப்படித்தான் வளர்ந்தீர்கள் என்று காட்டுகிறோம். நம் அன்பை அவர்கள் புரிந்து கொள்ள இதுவும் ஒரு கருவியாக அமைகிறது. இதே போட்டோக்களை, சிறிய வீடியோ காட்சிகளை இணையத்தில் அமைத்து குழந்தைகளும் உறவினர்களும் எப்போதும் காணும் வகையில் அமைத்தால் என்ன!
நாம் தனியாக இணையப் பக்கங்களை ஒவ்வொருவரும் அமைக்க முடியாது. இந்த நோக்கத்திற்காகவே நமக்கு இலவசமாக இணையப் பக்கங்களை அமைத்துத் தருகிறது www.totspot.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம். இதில் நம் குழந்தைகளில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சாதனை நிகழ்வுகளையும் பதித்து அவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் காணும்படி அமைக்கலாம். இந்த தளம் சென்று முதலில் நமக்கென்று ஒரு அக்கவுண்ட் திறக்க வேண்டும். இதற்கென நாம் வைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்டினை இந்த தளம் கேட்கும். பின் அந்த தளத்திற்கு ஒரு மெயில் அனுப்பி நம் விருப்பத்தினை உறுதிப்படுத்தும். பின் நமக்கென ஒரு தளம் திறக்கப்படும். அதன்பின் மீண்டும் இந்த தளத்தில் நுழைந்து நம் பெயரில் லாக் இன் செய்து போட்டோக்களை அமைக்கலாம். இவற்றை எல்லாரும் பார்க்க முடியாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்க அவர்களுக்கான அக்கவுண்ட்டை உருவாக்கி போட்டோக்களைக் காணுமாறு செய்திடலாம். வருங்காலத்தில் குழந்தைகள் இவற்றைப் பார்வையிடும்போது நிச்சயம் நம் அன்பைப் புரிந்து கொண்டு அதனை அவர்களின் குழந்தைகளிடமும் காட்டுவார்கள் அல்லவா!
பாப் அப் வழி தூண்டில்கள்
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் கம்ப்யூட்டர் இன்பெக்ட் ஆகிவிட்டதாகவும், கம்ப்யூட்டர் மிகவும் ஸ்லோவாக செயல்படுவதாகவும் மெசேஜ் பாப் அப் செய்யப்பட்டு அதற்கு இலவச தீர்வு வேண்டும் என்றால் கிளிக் செய்யவும் என ஒரு லிங்க் அல்லது சிகப்பு கலரில் எக்ஸ் அடையாளம் தரப்படுகிறது. இது உண்மையா? என்ன செய்ய வேண்டும்? இது போன்ற பல கடிதங்கள் கம்ப்யூட்டர் மலர் அலுவலகத்திற்கு வாசகர்களிடமிருந்து வருகின்றன. மேலும் பலர் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இதுவும் வைரஸைப் பரப்புபவர்கள் மற்றும் பிஷ்ஷிங் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுபவர்கள் வேலைதான். இவ்வாறு பலமுறை எழுதிய பின்னரும் பலர் அது எப்படி இருக்க முடியும் என்று எண்ணி இந்த செய்தியை உண்மை என நம்பி லிங்க்கில் கிளிக் செய்து பின் விளைவுகளை அனுபவிக்கின்றனர். எனவே சற்று விரிவாக இந்த பிரச்சினையை இங்கு காணலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வரும் இத்தகைய தூண்டில் செய்திகள் குறித்து பொதுவாக அனைவருமே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப இப்போது ஏமாற்றும் விதமும் அதிகரித்து வருகிறது. இந்த செய்திகளைக் கவனித்தால் அவற்றை அனுப்புபவரின் தந்திரம் தெரியவரும்
1. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்ற தொனியில் நம்மை எச்சரிக்கும் விதமாக இந்த செய்தி அமைக்கப்பட்டிருக்கும். வைரஸை எடுக்க வேண்டும்; உடனடியாக அப்டேட் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் கம்ப்யூட்டர் நாசமாகிவிடும் என நம்மை பயம் அடைய வைக்கும் விதமாக இது அமைந்திருக்கும்.
2. பல வேளைகளில் இந்த செய்தி ஓரு பிரபலாமான நிறுவனம் (மைக்ரோசாப்ட், நார்டன், சைமாண்டெக், அடோப், குயிக் டைம் போன்றவை) ஒன்றின் பெயரில் தரப்படும். இது ஒரு ஏமாற்று வேலை. இந்த செய்தியை நன்றாக உற்றுக் கவனித்தால் பல எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் இருக்கும். புகழ் பெற்ற நிறுவனங்கள் நிச்சயம் இந்த வகை பிழைகளுடன் செய்திகளைத் தர மாட்டார்கள்.
இவை டவுண்லோட் செய்திடச் சொல்லும் புரோகிராமின் பெயர் அல்லது விசிட் செய்யச் சொல்லும் வெப்சைட்டின் முகவரியினை காப்பி செய்து கூகுள் சர்ச் இஞ்சினில் போட்டுப் பார்த்தால் இவை உண்மையா என்பது தெரியவரும்.
எனவே இது போன்ற மெசேஜ் பாப் அப் ஆகி வருகையில் என்ன செய்திட வேண்டும்?
1. உங்கள் மவுஸின் கர்சரை எந்தக் காரணத்தைக் கொண்டும் லிங்க் அருகே கொண்டு செல்ல வேண்டாம்.
2. விண்டோவின் எந்த இடத்திலும் மவுஸைக் கிளிக் செய்திட வேண்டாம். செய்தால் உடனே நம்மைக் கவிழ்க்கும் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகத் தொடங்கும்.
3. உடனடியாக ஆல்ட்+எப்4 கீகளை அழுத்துங்கள். அந்த விண்டோ அல்லது பிரவுசர் மூடப்படும். பின் மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுஸ் செய்திடலாம்.
அல்லது கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைத் திறக்கவும். இதற்கு Ctrl+Alt+Del கீகளை அழுத்தவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Applications டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.
3. உங்கள் பிரவுசர் புரோகிராம் மீது இடது கிளிக் செய்திடவும்; அல்லது நீங்கள் பிரச்சினை என்று முடிவு செய்திடும் புரோகிராம் மீது கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் ஹைலைட் ஆகும். பெரும்பாலும் இது நீல நிறத்திற்குச் செல்லும்.
4. அடுத்து End Task பட்டனில் கிளிக் செய்திடவும். புரோகிராம் மூடப்படும்.
உங்கள் கம்ப்யூட்டரில் பயர்வால் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எப்போதும் அப் டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் பிரவுசரில் இது போன்ற பாப் அப் விண்டோக்கள் வராதவாறு தடை செய்திடும் வசதி இருக்கும். அதனை இயக்கி வைக்க வேண்டும்.
இது போல பிரவுசரில் பாப் அப் தடை செய்யப்பட்டிருந்தாலும் இயங்கும்படி இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் செட் செய்யப்பட்டிருக்கலாம். எனவே பிரவுசரில் தடை செய்யப்பட்ட பின் வரும் பாப் அப் செய்திகள் எல்லாம் உண்மையானவை என்று எண்ண வேண்டாம்.ஏற்கனவே உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதனை பத்து நாட்களுக்கு ஒரு முறை இயக்குங்கள். இதனால் எப்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குத் தப்பிக்கும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இதில் மாட்டிக் கொள்ளலாம். இதற்கு மால்வேர் பைட்ஸ் (Malwarebytes) என்ற புரோகிராம் சிறப்பாக உதவிடுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராமினைப் பெற அணுக வேண்டிய முகவரி: http://malwarebytes.org. இந்த புரோகிராமின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களும் புரோகிராம் பைலும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
இன்டர்நெட் தொடர்புகள் அறிய
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து தளங்களுக்குச் சென்று அரிய தகவல்களைப் பெறுவது என்பது அனைவரும் விரும்பும் குஷியான சமாச்சாரமாக மாறிவிட்டது. யாராவது இந்த இன்டர்நெட் இணைப்பு எப்படி எந்த கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது? அதற்கான தொழில் நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொள்ளாமல் எப்படி தெரிந்து கொள்வது?
இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தான் இணையத்தில் ஒரு சாப்ட்வேர் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை அறியவும் இந்த புரோகிராம் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் TCPView. இதனை இலவசமாக இறக்கிப் பதியலாம்.
எளிதாக இயக்கவும் செய்திடலாம். இந்த புரோகிராம் இயங்குகையில் நமக்கு ஒரு நீண்ட பட்டியல் கிடைக்கிறது. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் கம்ப்யூட்டர் தொழில் நுட்பச் சொற்கள் அடங்கிய பட்டியல் போல் தெரியும். ஆனால் ஒவ்வொரு வரியும் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் எதனை எல்லாம் தொடர்பு கொண்டு செயல்படுகிறது என்று காட்டுவதைக் காணலாம்.
நீங்கள் இன்டர்நெட்டில் இருக்கையில் சேட் கிளையண்ட் புரோகிராம் இயங்கலாம். அதற்கான நெட்வொர்க் தொடர்புகள் காட்டப்படும். அதே நேரத்தில் சில தளங்களுக்குச் சென்று நீங்கள் தகவல்களை எடுத்து சேட் செய்திடும் நண்பருக்கு அனுப்ப முயற்சிக்கலாம். அந்த தொடர்பு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கம்ப்யூட்டர் தொடர்பு கொள்ளும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அந்த வரிசையும் காட்டப்படும்.
இதில் இன்னொரு நன்மையும் உண்டு. நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு இயங்கும் புரோகிராம்களும் நம் இன்டர்நெட் வழியாகத்தானே நம் தகவல்களை அனுப்புகின்றன. இந்த தொடர்பு வரிசையைக் கண்டு கொண்டால் அது எங்கே செல்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் டி.சி.பி. வியூ புரோகிராமினைப் பதிந்து ரெகுலராக அதனைக் கவனித்து வந்தால் புதிதாக ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் உங்கள் இன்டர்நெட் பாதையில் தெரிந்தால் உடனே உஷாராகி அதனை அப்புறப்படுத்தலாம்.
இந்த புரோகிராமில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? உடனேhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb897437.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இதனை டவுண்லோட் செய்து பதிந்து இயக்கவும்.
No comments:
Post a Comment