யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்
பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இஞ்சின் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் கூகுள் கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினைத் தன் தளத்தில் யாஹூ பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை யாஹூ மட்டுமே பெறுகிறது.
யாஹூ நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று யாஹூ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்த தனி உரிமையினைப் பெறுகிறது. இதனைத் தன் தளங்களில் இயங்கி வரும் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும். 18 மாதங்களுக்கு முன்புதான் யாஹூவை எடுத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தன் முதல் அஸ்திரத்தை வீசியது. பிப்ரவரி 1, 2008 அன்று 4,460 கோடி டாலருக்கு விலை பேசியது. இது யாஹூவைப் பெரிய அளவில் உலுக்கியது. அதன் தலைவர் இடத்தில் புதிய ஒருவர் பொறுப்பேற்றார். மூன்று புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இருப்பினும் திரை மறைவில் இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து உறவாடிக் கொண்டு தான் இருந்தன என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் எதற்காக? இணையத் தொழில் நுட்பத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை அதன் இடத்திலிருந்து இறக்கத்தான் இந்த ஏற்பாடுகள். தற்போது வந்த ஒப்பந்த அறிவிப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை தனி ஒரு சர்ச் இஞ்சின் நிறுவனமாக இயங்கி வந்த யாஹூ அந்த அடையாளத்தினை இந்த ஒப்பந்தம் மூலம் முறித்துக் கொண்டுவிட்டது.
மைக்ரோசாப்ட் முதலில் அறிவித்த பங்கு முதலீட்டினை ஜெர்ரி யாங் காட்டமாக மறுத்துத் தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதி தீவிர முயற்சிகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து பங்குகளைக் கொண்டிருந்த கார்ல் தன் பக்கத்திற்கு மூன்று இயக்குநர் இடங்களைப் பிடித்தார். தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்ரி யாங் தலைவர் பதவிலியிருந்து இறங்க கேரல் பார்ட்ஸ் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.
ஒரு பெண்ணுக்குரிய நிதானம் மற்றும் வேகத்துடன் சிந்திக்கத் தொடங்கி கேரல் பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. இதற்கு வலுவான காரணமும் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தேவையான பணமும் இருந்தது; தேவைகளும் இருந்தன. இந்த பிரிவில் உயரச் செல்ல ஆசையும் இருந்தது. யாஹூ ஏற்கனவே உயரத்தில் இருந்ததால் அதனைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. அதே நேரத்தில் யாஹூ தன் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. வெளியிலிருந்து சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பெற்றால் ஆண்டுக்கு 50 கோடி டாலர் மிச்சம் பிடிக்க முடியும் என்று பார்ட்ஸ் கருதினார். இன்றைய ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில் அனைவரும் இந்த பணம் மிச்சமாவதனையே குறிப்பிட்டனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தின் திறனும் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இது யாஹூ நிறுவனத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இப்போதைய ஒப்பந்தம் யாஹூவின் பணிக் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 18 மாதங்களாகத் தன் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதையினைப் பார்க்க உழைத்துக் கொண்டிருந்த யாஹூ திடீரென இன்னொரு நிறுவனம் அமைத்த தொழில் நுட்பத்தினைத் தழுவிக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் தன் தளத்தில் வந்து தேடும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளித்துத் தக்க வைக்க வேண்டிய நிலையில் யாஹூ உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரங்களையும் விற் பனை செய்திடும் உரிமை யாஹூவிற்குப் பெரிய அளவில் கை கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஸ்டம் குறித்த தகவல்களை அறிய
உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து சாதனங்களின் திறன் குறித்து அறிய உங்களுக்கு ஆவலாக உள்ளதா! அதற்கான புரோகிராம் டவுண்லோட் தான் SIW என்பதாகும். இது System Information for Windows என்பதைக் குறிக்கிறது. சிஸ்டம் சாப்ட்வேர், நெட்வொர்க் மற்றும் பிற ஹார்ட் வேர் சாதனங்களின் திறன் குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது. சிபியு கிளாக் செயல் வேகம், ராம் மெமரியின் அலைவேகம், பயாஸ், மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, பேட்ச் பைல் இணைப்பு,லைசன்ஸ் குறித்த தகவல் என அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. இவற்றுடன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.
இந்த புரோகிராமில் சென்சார் ஒன்று தரப்படுகிறது. இது ஒவ்வொரு சாதனப் பகுதியின் வெப்ப தன்மை குறித்து அறிவிக்கிறது. பாஸ்வேர்ட் மறந்து போனால் எடுத்துத் தரும் வசதியும் இதில் உண்டு. இது செயல்பட குறைந்த அளவில் மெமரியை எடுத்துக் கொள்கிறது. சில நொடிகளில் அனைத்து தகவல்களையும் பெற்றுத் தருகிறது.
இந்த அடிப்படை புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். சில சிறப்பு வசதிகளுடன் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளும் உண்டு. இலவச புரோகிராமினைப் பெற http://www.techspot.com/downloads/155siwsysteminfo.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்து இயக்கப் படக் கூடிய புரோகிராம் ஒன்றும், தனியாகவே இயக்கக் கூடிய புரோகிராம் ஒன்றும் கிடைக்கிறது. எனவே அதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து இயக்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்…. டிப்ஸ்….
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பல சின்னஞ்சிறு வசதிகளை நாம் பயன்படுத்துவது இல்லை. அவற்றைக் கையாளும் விதம் குறித்து இங்கு பல குறிப்புகளும் டிப்ஸ்களும் தரப்படுகின்றன. விஸ்டா மற்றும் எக்ஸ்பிக்கான குறிப்புகள் இணைந்து இங்கே காட்டப்படுகின்றன. ஏதாவது ஒரு சிஸ்டத்திற்கு மட்டும் எனில் அது அடைப்புக்குறிக்குள் சுட்டிக் காட்டப்படுகிறது.
1. குயிக் லாஞ்ச் (எக்ஸ்பி – விஸ்டா)
ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும். இது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டுமென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. இந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.
2. ஸ்டார்ட் மெனு (எக்ஸ்பி)
உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருந்தால் ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ஆல் புரோகிராம்ஸ் பட்டியல் மிகப் பெரியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் இருக்காது. இதனைப் பல வகைகளாகப் பிரித்து அடுக்கும் வசதியினை எக்ஸ்பி சிஸ்டம் தருகிறது. இதனைப் பயன்படுத்த ஸ்டார்ட் பட்டனில் லெப்ட் கிளிக் செய்து பின் ஆல் புரோகிராம்ஸ் மீது ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும்.
இதில் Open அல்லது Open All Users என்பதைத் திறக்கவும். இங்கு போல்டர்களில் இந்த புரோகிராம்கள் காட்டப்படும். இவற்றைப் புதிய துணை போல்டர்களை உருவாக்கி புரோகிராம்களை வகைப்படுத்தி வைக்கலாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் Edit மெனு சென்று அதில் Undo என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. டபுள் கிளிக் (எக்ஸ்பி)
ஒரு போல்டரில் டபுள் கிளிக் செய்கையில் என்ன ஏற்பட வேண்டும் என்பதனை ஆல்ட் அழுத்தி மாற்றலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறே புரோகிராம் மீது அழுத்தினால் அந்த புரோகிராம் சார்ந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அந்த போல்டருக்கான ஐகானை மாற்றலாம்; வியூவினை மாற்றலாம். கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் ஒரு புது விண்டோவில் திறக்கப்படும். ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் வியூ எக்ஸ்ப்ளோரர் பாரில் இடது பக்கம் கிடைக்கும்.
4. குயிக் டாகுமென்ட்ஸ் (எக்ஸ்பி):
விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் டாகுமென்ட்ஸ் என்ற பட்டன் இருப்பதைப் பார்க்கலாம். எக்ஸ்பியில் இது இல்லை. ஆனால் மிக எளிதாக இது போன்ற ஒரு பட்டனை எக்ஸ்பி சிஸ்டத்திலும் சேர்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஸ்டார்ட் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Advanced டேப்பில் என்டர் அழுத்தி ஸ்டார்ட் மெனு காட்டும் பிரிவுகளில் My Documents என்று இருப்பதனைக் கண்டறியவும். இதில் வரிசையாக உள்ளவற்றில் ஸ்குரோல் பார் மூலம் கீழே சென்றால் Display as Menu என்று ஒரு வரி இருப்பதனைக் காணலாம். இதில் கர்சரால் கிளிக் செய்து அங்குள்ள கட்டத்தில் மார்க் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மை டாகுமென்ட்ஸ் பட்டன் கிடைக்கும்.
5. வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி):
கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு. இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும். இப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘H’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘ஏ’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும். இறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.
6. ஆட்டோமேடிக் ஸ்குரோலிங் :
மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ, என்டர் கீ தட்டியோ, ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.
7. போல்டருக்கு ஷார்ட் கட்:
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம்களுக்கு ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டெஸ்க்டாப் பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.
8. எக்ஸ்பிக்கு சைட் பார்:
விண்டோஸ் விஸ்டாவில் இருப்பதைப் போல சைட்பார் ஒன்றினை எக்ஸ்பி திரையில் அமைக்க விரும்பினால் அதற்கு வழி உள்ளது. இதற்கு கூகுள் டூல் பார் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். http://pack.google.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அதனை டவுண்லோட் செய்திடவும். இந்த பைலை டவுண்லோட் செய்தவுடன் கூகுள் டெஸ்க் டாப் டாஸ்க்பாரில் தானாகவே காட்டப்படும். இதனை சைட் பாராகப் பயன்படுத்த அதன் அருகே உள்ள கருப்பு அம்புக் குறியில் கிளிக் செய்து அதன் பின் சைட்பார் என்பதில் கிளிக் செய்திடவும். இந்த சைட்பாரில் இன்னும் பலவித பயன்பாட்டு புரோகிராம்களை இணைக்கலாம். கால்குலேட்டர், கடிகாரம், நியூஸ் பீட் போன்ற பல புரோகிராம்கள் கிடைக்கும். அத்துடன் இந்த கூகுள் டெஸ்க்டாப் மூலம் பைல் மற்றும் போல்டர்கள், இமெயில் செய்திகள் ஆகியவற்றை எக்ஸ்பியில் தேடிப் பெறுவதைக் காட்டிலும் வேகமாகத் தேடிப் பெறலாம்.
9. பிரைவேட் போல்டர்:
யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந் தெடுக்கலாம். இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன.
இதனை செட் செய்திட என்று Allow / Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம். உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலம.
10. ரெகுலர் கடிகாரம் எதற்கு?
விஸ்டாவில் சைட் பார் உள்ளது. அதில் கடிகாரம் ஓடுகிறது. எக்ஸ்பியிலும் சைட் பார் உருவாக்கி அதில் கடிகாரத்தினை இயக்கிவருகிறீர்களா! அப்படியானால் டாஸ்க் பாரில் கடிகாரம் எதற்கு என்று எண்ணுகிறீர்களா? அதனை நீக்க வேண்டும் என முடிவு செய்தால் கீழ்க்குறித்தபடி இயங்கவும். வழக்கம்போல டாஸ்க்பாரில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area என்று உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Clock என்று உள்ள இடத்தில் Show the Clock முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
11. பைல் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரிய:
விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் பைல் ஒன்றின் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரியாமல் இருக்கும் வகையில் டிபால்ட்டாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்குச் சில வேளைகளில் பைல்களின் பெயர்கள் அதன் துணைப் பெயருடன் தேவையாய் இருக்கும்.
ஒரே பெயரில் பேஜ் மேக்கர், வேர்ட், பெயிண்ட் புரோகிராம்களில் பைல்களை உருவாக்கி இருப்போம். இவற்றில் நமக்குத் தேவையானதைப் பெற நமக்கு துணைப் பெயர் தெரியவேண்டியதிருக்கும். இந்த பெயரைக் காட்டும்படி சிஸ்டத்தினை செட் செய்திடலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து Tools மெனுவினைத் திறக்கவும்.
விஸ்டாவில் ஆல்ட் கீயினை அழுத்தவும். பின் போல்டர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வியூ டேப்பில் கிளிக் செய்து அதில் ‘Hide extensions for known file types’ என்று உள்ள வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்து பைல்களின் பெயர்கள் காட்டப்படுகையில் அவற்றின் துணைப் பெயர்களோடு அவை காட்டப்படும்.
அக்செஸ் டிப்ஸ்
டேட்டா எனப்படும் தகவல்களைப் பிரித்து வகைப்படுத்தி, நம் எதிர்பார்ப்புக்கேற்ப ஒழுங்குபடுத்தி அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ரிப்போர்ட் மோடில் தருவதே அக்செஸ். அத்தோடு நின்றுவிடாமல் அதனைத் தேடி அறிவதிலும் நமக்கு பல உதவிகளை அக்செஸ் தந்து வருகிறது. பல வாசகர்கள் அக்செஸ் குறித்து தங்களுக்கு உள்ள சந்தேகங்களை எழுதி வந்தனர். பொதுவான சந்தேகங்கள் அடங்கிய கேள்விகளுக்கான பதில்கள் பொதுவான டிப்ஸ்களாக இங்கு தரப்படுகின்றன.
1. அவுட்லுக்கில் இருந்து டேட்டா பெற: உங்களிடம் அக்செஸ் 2000 அல்லது அதற்குப் பின் வந்த தொகுப்பு இருந்தால் நீங்கள் அவுட்லுக் தொகுப்பில் இருந்து டேட்டாக்களை இதற்கு File மெனு சென்று அதில் Obtain External Data என்பதனைத் தேர்ந்தெடுத்து பின் Access Data Sheet வியூவில் Link Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பைல் டைப் என்ற பட்டியலில் Outlook என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் கிடைக்கும் விஸார்ட் கூறுகிறபடி இயங்கவும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டிலும் உள்ள டேட்டாக்கள் தொடர்புடையனவாக மாற்றப்பட்டுவிட்டதால் இதில் எந்த புரோகிராமில் டேட்டாவினை மாற்றினாலும் அது இரண்டிலும் எதிரொலிக்கும்.
2. எக்ஸெல் தொகுப்பிலிருந்து டேட்டா: எக்ஸெல் தொகுப்பிலிருந்து டேபிள் ஒன்றை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இரண்டு புரோகிராம்களையும் திறக்கவும். அக்செஸ் புரோகிராமில் டேட்டா ஷீட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கவும். இந்த டேபிள் முழுவதையும் செலக்ட் செய்திடவும். இதற்கு கோடும் பீல்ட் தலைப்பும் குறுக்கிடும் இடத்தில் உள்ள கோட்டில் கிளிக் செய்திடவும். டேபிள் முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் எடிட் மெனு செல்லவும். இதில் பேஸ்ட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் இறுதியாக மேற்கொள்ள வேண்டிய அட்ஜஸ்ட்மெண்ட் அனைத்தையும் மேற்கொள்ளவும். பீல்டின் அளவை மாற்றி அமைக்கலாம். பீல்டுக்கான பெயர்களை மாற்றலாம்.
3. அக்செஸ் டேபிளை வேர்டுக்கு மாற்ற: இது மிகவும் எளிதான ஒன்றாகும். இரண்டு புரோகிராம்களையும் திறக்கவும். பைல்களை இயக்கத்திற்குக் கொண்டுவரவும். பின்னர் டேட்டா பேஸ் விண்டோவிலிருந்து அக்செஸ் டேபிளை அப்படியே இழுத்து வந்து வேர்டில் போடவும்.
4. அக்செஸ் ஷார்ட்கட்ஸ்: அக்செஸ் மற்ற ஆபீஸ் புரோகிராம்களைப் போல மிக எளிமையான புரோகிராம் அல்ல. ஏனென்றால் இது டேட்டா பேஸ் தரும் டேட்டாக்களையும் சார்ந்த அப்ளிகேஷன்களையும் முதன்மையாகக் கொண்டு இயங்கும் புரோகிராம். இதனாலேயே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த தொகுப்பின் பக்கம் வரச் சிறிது தயங்குவார்கள். இருப்பினும் இதனையும் பயன்படுத்த எண்ணுபவர்கள் கீழ்க்காணும் குறைந்த பட்ச ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும் அவற்றின் செயல் பாடுகளையும் அறிந்து கொள்வது நல்லது.
எப்2 – தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைப்பர் லிங்க்கில் முழு முகவரியையும் காட்டும்.
எப்4 – காம்போ பாக்ஸ் ஒன்றைத் திறக்கிறது.
எப்5 – பார்ம் மற்றும் டிசைன் என்ற வியூக்களுக்கு நடுவே மாற்றி மாற்றி செல்கிறது.
எப் 9 – காலம் ஒன்றின் அல்லது காம்போ பாக்ஸ் ஒன்றின் பீல்டுகளை அப்டேட் செய்திடும்.
5. விண்டோ ஸூம்: அக்செஸ் தொகுப்பில் பொதுவாக பலரும் ஒரு பிரச்சினையைக் கூறுவதுண்டு. ஒரு பார்ம், க்வெரி அல்லது டேபிள் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பீல்டு ஒன்றின் டேட்டா வியூவின் ஏரியாவில் அடங்காமல் இருக்கும். இந்த பிரச்சினையைப் போக்க ஷிப்ட் + எப்2 கீகளை அழுத்தவும். அக்செஸ் ஸூம் என்று ஒரு விண்டோவினைத் திறக்கும். இதில் டெக்ஸ்ட்டை மிகத் தெளிவாகப் படிக்கலாம். இது அக்செஸ் புரோகிராமின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
6. குறிப்பிட்ட தகவல் எழுத்தின் அடிப்படையில்: டேபிள் ஒன்றில் பல தகவல்கள் உள்ளன. அதில் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் டேட்டா மட்டும் பெறுவது எப்படி? எடுத்துக் காட்டாக மாணவர்களின் பெயர் பட்டியலில் இருந்து “A”என்று தொடங்கும் மாணவர்களின் பெயர்கள் மட்டும் வேண்டும் என்றால் Name of the Student என்ற க்வெரி பீல்டில் Like A*என்று தர வேண்டும்.
7. பெரிய எழுத்தாக மாற்ற: ஏதேனும் டேட்டா சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களில் அமைத்த பின் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்துக்களாக மாற்றக் கீழ்க்காணும் பங்சனைப் பயன்படுத்த வேண்டும். StrConv (string, 3) இதில் string என்பது எந்த சொல்லாகவும் இருக்கலாம்; அல்லது சொற்கள் கலந்த தொடராகவும் இருக்கலாம்.
8. எச்.டி.எம்.எல். பார்ம்: அக்செஸ் பார்ம்களை எச்.டி.எம்.எல். ஆக மாற்றலாம்.இதனால் அக்செஸ் தங்கள் சிஸ்டத்தில் இல்லாதவர்களும் இவற்றைப் பார்வையிடலாம். இதற்கு டேட்டா பேஸ் விண்டோவில் Tools என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் எந்த பார்மை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் File மெனு செல்லவும். இதில் Export என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Save As கிளிக் செய்து பைல் பெயர் மற்றும் அதன் எக்ஸ்டென்ஸன் ஆகியவற்றைக் கொடுக்கவும். இதனை முடித்த பின் Export என்பதில் கிளிக் செய்து பைலை சேவ் செய்திடவும்.
9. பிரிண்ட் ஷார்ட் கட்: டேட்டா பேஸ் ஆப்ஜெக்ட் (ரிப்போர்ட், பார்ம், டேபிள் போன்ற அனைத்தும்) ஒன்றுக்கு ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கியபின் அதனை ஷார்ட் கட் ஐகானிலிருந்தே பிரிண்ட் செய்திடலாம். இதை நிறைவேற்ற ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிரிண்ட் என்பதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஜெக்ட் பிரிண்ட் ஆகும். இன்னொரு வழியும் உண்டு. குறிப்பிட்ட ஆப்ஜெக்டை டெஸ்க் டாப்பில் உள்ள பிரிண்டர் ஐகானுக்கு இழுத்து வந்து பிரிண்ட் செய்திடலாம்.
செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்
கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.
கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கள்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற http://wave.google.comஎன்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
பி.எஸ்.என்.எல். புதுத்திட்டம்
கடந்த ஆறு மாதங்களில் தன் 3ஜி சேவைக்கு பத்தாயிரம் சந்தாதாரர்களையே பிடிக்க முடிந்த பி.எஸ்.என்.எல்., இந்த சேவையை வழங்க பன்னாட்டளவிலான நிறுவனங்களின் உதவியை நாடுகிறது. அதிவேக இன்டர்நெட், மொபைல் டிவி, வீடியோ கான்பரன்சிங், வேகமான பைல் டவுண்லோட் எனப் பல வசதிகளை மொபைல் போனில் தரக்கூடிய 3ஜி சேவையினைச் சிறப்பான முறையில் வழங்க பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளன. வரும் டிசம்பர் மாதம் இதற்கான ஏலத்தை மைய அரசு நடத்தி முடித்தால் அடுத்த ஆண்டு முதல் உலக அளவில் இயங்கும் பல நிறுவனங்கள் தனியா கவோ அல்லது இந்திய தனியார் நிறுவனங்களுடன் இணைந்தோ இந்த சேவையை வேகமாகவும் மக்களை எளிதில் அடையும் வகையிலும் தரத் தொடங்கிவிடுவார்கள். எனவே அதற்குள் தாங்களும் முந்திக் கொள்ள வேண்டும் என இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. சென்ற வாரம் எம்.டி.என்.எல். இதற்கான டெண்டரைக் கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். விரைவில் அதே பாணியைப் பின்பற்றும் எனத் தெரிகிறது. வரும் செப்டம்பரில் தன் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைய ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 100 நகரங்களில் இந்த சேவையை வழங்குவதற்கானக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல். விரைவில் இதனை 1000 நகரங்களுக்கு விரிவடையச் செய்திடும் திட்டத்தினையும் மேற்கொள்ளும்.
இந்த சேவை மூலம் வீடியோ, பாட்டு, கேம்ஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்கும் அளவில் தன் டேட்டா பேஸ் அமைப்பையும் தொழில் நுட்ப வசதியையும் உயர்த்த இருக்கிறது. தற்போது இந்தியாவின் 22 தொலைதொடர்பு மண்டலங்களில் 20ல் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையினை வழங்கி வருகிறது. இதன் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5கோடி.
No comments:
Post a Comment