கதைக்குள் செல்லும் முன்...
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.
ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.
அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.
No comments:
Post a Comment