Wednesday 2 May 2012

எண்ணெய் வகைகள்



எண்ணெய் வகைகளில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் மற்றும் கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் வகைகள் சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. எனவே இவை அழகுசாதனத் தயாரிப்பில் சேர்க்கப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கறிக்கும் பயன்படுத்துவதுண்டு. புண்களுக்கு காய்ச்சும் எண்ணெய்களில் இது சிறப்பாகச் சேரும். இதைக் கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர தோலைப் பற்றிய நோய்கள் தீரும்.

கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்குகிறது.
பீச், பிளம், பாதாம் பருப்பு போல் இதுவும் கடினமான கொட்டை உடையது. முற்றிக் காய்ந்த இதன் வெண்பருப்பே கொப்பரை எனப்படுகிறது. இதிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், சோப்பு, கூந்தல் எண்ணெய், ஷாம்பூ முதலியவை தயாரிக்கவும் பயன்படுகிறது. இளநீர் உடலுக்கும் தோலுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது.
ஆலிவ் எண்ணெய்
சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாய்க்கும் பயன்படுத்தினர். இதிலிருந்து எண்ணெய் எடுத்து உபயோகப்படுத்தினர். தூய்மைக்கும், சமாதானத்திற்கும் சின்னமாக விளங்குவது ஆலிவ். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

பாதாம் எண்ணெய்
சருமத்திற்கு வனப்பும், போஷாக்கும் அளிக்கக் கூடியது. அனைத்து வைட்டமின் சத்துகளும் குறிப்பாக சருமத்திற்கு அழகூட்டும் வைட்டமின் ‘இ’ சத்தும் மிகுந்து காணப்படுகின்றது.

வேப்ப எண்ணெய்
சிறந்த கிருமி நாசினி. தோல் எரிச்சல், சருமத் தொற்றைத் தடுக்கும்.

தவிட்டு எண்ணெய் (Wheat germ)
சருமத்திற்கு இளமைப் பொலிவளிக்கிறது.

கடுகு எண்ணெய்
 
சருமத்திற்கு வனப்பளிக்கும், அழகூட்டும் சோப்புகளில் சேர்க்கப்படுகிறது.

கற்பூர எண்ணெய்
கற்பூரம் நறுமணம் வீசும் வெண்மையான படிகம் போன்ற பொருள். இது கற்பூர மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இதைக் கொண்டு செல்லுலாய்டு நறுமணத் தைலம், வெடி மருந்துகள், தொற்றுத் தடை மருந்து, மெழுகு எண்ணெய், பூச்சி அரிக்காமல் தடுக்கும் மருந்து முதலியன செய்யப்படுகின்றன. இதை ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பிலும், மருந்துப் பொருள்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஜப்பானில் பல தீவுகளில் காடு போல் இவை வளர்கின்றன. சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலைகள் பருமனாக பளபள என்று இருக்கும்.

கற்பூர மரத்தின் பட்டைகளிலிருந்து கற்பூரம் எடுத்தனர். இப்போது மரப்பட்டை, இலை, மரம் ஆகியவற்றிலிருந்தும் கற்பூரம் எடுக்கப்படுகிறது. கற்பூர தைலம் அழகு சாதனத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. பருக்களுக்கு நல்ல மருந்து.
அழகுக்கூடும்…

No comments:

Post a Comment