யோகம் என்ற சொல் வெவ்வேறு விதமான பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. பொதுவாக கர்ம யோகம், ஞான யோகம், பக்தியோகம் என்பவை கீதை முதலாக பல்வேறு சாத்திரங்களில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹட யோகம், ராஜ யோகம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பதங்களில் யோகம் என்ற சொல் வருகிறதே அன்றி அது என்ன பொருளை அல்லது என்ன முறையை குறிக்கிறது என்று பெயரைக் கேட்டவுடனேயே மிகத்தெளிவாக தெரிந்து கொள்வது கடினம். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களைக் கூட நம்மால் ஆகாது என்று இந்த யோகம் என்னும் சொல்லே சில நேரங்களில் விரட்டி விடுகிறது. இதற்கு காரணம் இந்த தெளிவின்மை தான். இதில் சிறிதளவாவது தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
யோகம் என்ற சொல்லுக்கு நேரடி பொருள் என்னவெனில் “ஒன்றிணைதல்” என்பதாகும். மனிதன் இறைவனை உணர்ந்து, இறைவனுடன் ஒன்றிணைதல் என்று கொள்ளலாம். தர்மத்தை கடைப்பிடித்து, பற்றின்றி தனக்குரிய கடமைகளை சரிவர செய்து வந்து, செயல்களின் பலனை ஈசுவரனுக்கு அர்பணித்து விடுதலே கர்ம யோகம் ஆகும். “மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைகழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி ” என்று திருவாசகம் சொல்வது போல், உடலும் உள்ளமும் உருகி இறைவனை மனமார நேசித்து வணங்குவது பக்தி யோகமாகிறது. பக்தி யோகத்தில் திளைக்கும் பக்தர்கள் மற்ற கடமைகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை இதற்கு உதாரணமாக சொல்லலாம் - அவருக்கு தனக்கென்று எதுவும் ஈட்டுவது இல்லை - எல்லாமே ராம பக்தி தான் என்று இருந்தவர். ஞான யோகம் என்பது உபநிடதங்களில் ஆராய்ச்சி செய்து, புத்தியின் உதவியால் இறைவனைக் கண்டடைவது. ஆதி சங்கரர் இப்படிப்பட்ட ஒரு ஞான யோகி. இந்த யோகங்கள் எதுவுமே கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் வாழ்வில் கடைபிடிப்பதற்கு மிகுந்த பக்குவமும் திறமையும் தேவை.
ஆன்மீகத்தில் யோகம் என்ற சொல்லை, மனிதன் தன் முயற்சிகளின் உச்சமாக அடையும் இன்ப துன்பங்கள் அற்ற விடுதலையே யோகம் என்றும், இன்னொரு விதத்தில் அந்த விடுதலை அடைவதற்கு உரிய வழியே யோகம் என்றும் இருவிதமான பொருளிலும் பயன்படுத்துவர். ஞானியர் வகுத்த பல்வேறு ஆன்மீக மார்க்கங்களில் யோகம் என்பது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி முறையாகவும், மனதை அடக்கி செய்யக் கூடிய பயிற்சி முறையாகவும் முக்கியமாக இரு பகுதிகளை கொண்டு விளங்குகிறது. தற்காலத்தில் பரவலாக யோகா என்பது உடல் வளக் கலையாகவும், மனவளக் கலையாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இவை யோகத்தினால் அடையும் முதல் படி மட்டுமே - யோகம் இதைவிட பெரியதொரு நன்மைக்காக ஏற்பட்டதாகும்.
சிலருக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கும் - நல்ல மனைவி, மக்கள், நிறைய சொத்து, சாதனைகள் என்று இந்த வாழ்க்கை இன்பமாகத்தான் இருக்கிறது - இதில் மரணமில்லாமல் நானும் எனது சொத்து சொந்தபந்தங்களும் இருக்க வேண்டும் - அப்படியே மரணமடைந்தாலும் இதைப்போல இன்னும் நான்கைந்து பிறவிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால் மனித வாழ்க்கை, இன்பங்களுக்கு சரி விகிதமாக துன்பத்தையும் தருவதாக இருக்கிறது. மூப்பு, பிணி, சாவு ஆகியவை ஒவ்வொருவரையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்ப துன்பங்கள் நிலையில்லை - நிலையான பேரின்பம் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த இன்ப துன்பங்களில் இருந்து விடுபடுவது தான். உலக இன்ப நுகர்ச்சியால் மயங்கி மாறாத இன்ப துன்ப சுழற்சியில் சிக்கும் மனிதன், தன் நுகர்ச்சிக்கு காரணமான உடலின் கண், காது முதலான அங்கங்களையும், புலன்களையும் அடக்கி, மனதையும் அடக்கி இறைவனை காண்பதே, இறைவனுடன் இணைவதே யோகத்தின் நோக்கம். அதே சமயத்தில் யோகத்தினால் மனித உடலின்/மனதின் செயல் வன்மையை - சாத்தியங்களை பல மடங்கு அதிகப்படுத்தி அதை இந்த உலக இன்பத்தை பன்மடங்கு அதிகமாக அனுபவிப்பதற்கும் உபயோகிக்க முடியும் - ஆனால் அது ஒரு பக்க விளைவு தானே தவிர அதுவே இறுதி நோக்கம் அல்ல.
சனாதன தருமம் என்னும் இந்து மதத்தினுள் இந்த உலகில் இன்பமாக வாழ்ந்து அனுபவிப்பதற்கும் வழிகள் உண்டு. இந்த இன்ப-துன்பங்கள் நிறைந்த வாழ்வை கடந்து இன்ப துன்பங்கள் அண்டாத பேரானந்த நிலைக்கு செல்வதற்கும் வழிகள் உண்டு. வாழ்வின் இறுதி தத்துவமாக இந்து மதத்தின் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம் போன்ற பல்வேறு விதமான மார்க்கங்களில் வேதத்தின் வழியாக சொல்லப்படும் பொதுவான கருத்து, மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல - உடல் இயங்க காரணமாக உள்ளே ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது. அது உடலை விட்டு நீங்கினால் உடல் இயக்கமின்றி பிணமாகி விடுகிறது. ஆன்மாவே ஒவ்வொரு உடலினுள்ளும் புகுந்து அந்தந்த உயிரினமாக வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. உடல் கொண்டு வாழும் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆன்மா, தன் செயல்கள் மூலம் கர்ம வினையை சேகரித்து கொள்கிறது. அந்த கர்ம வினை, நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் அதற்குரிய பலனை அந்த பிறவியிலேயோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ அனுபவிக்கிறது என்பதாகும்.
உண்மையில் ஒவ்வொரு ஆன்மாவும் இறைத்தன்மையின் வெளிப்பாடு தான். ஆன்மா இறைவனை சார்ந்தே, இறைவனுடன் இணைந்தே இருக்கிறது (விசிஷ்டாத்வைதம், துவைதம்) அல்லது அது இறைவடிவமாகவே இருக்கிறது (அத்வைதம்) என்று வேதாந்த தத்துவங்கள் கூறுகின்றன. எப்படி குளத்தில் நீந்தும் மீன், தான் இருக்கும் நீருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணராமல், தன் உலகமே நீரால் ஆனது என்று நினைத்துக் கொள்ளுமோ அப்படித்தான் ஆன்மாவும் அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறு பட்டதாக எண்ணி மாயையில் சிக்கி வெவ்வேறு உயிரினங்களில் ஒன்றாக பிறவி எடுக்கிறது. இவ்வாறு ஆன்மா தன்னை உணராமல் இருப்பதே அறியாமை என்றும், தன்னை உணர்தலே ஞானம் என்றும் இந்து மத தத்துவங்கள் கூறுகின்றன. .
ஆன்மா இந்த அறியாமையை விட்டு தன் பிறவிகளுக்கு வெளியே இறைவனின் இருப்பை எப்போது கண்டுகொள்ளுகிறதோ அப்போதே பிறவிகளிலிருந்து விடுபட்டு விடுகிறது. தன்னை உணர்ந்த நிலையையே, அத்வைதம், யோகம், சமாதி, துரீயம், மரணமற்ற தன்மை, பரமபதம், மோக்ஷம், முக்தி என்று பல்வேறு பதங்களால் குறிக்கிறார்கள். இவை எல்லாமே மனமும் உடலும் செயலற்றுப் போய் அதன் பின் ஏற்பட்ட ஞானத்தினால் கிடைக்கும், இன்ப துன்பங்கள் அற்ற நிலையையே குறிக்கிறது. அந்த நிலையை அடைய சனாதன தருமம் பல்வேறு விதமான ஆன்மீக மார்க்கங்களையும், அந்த மார்க்கங்களில் செல்லக் கூடிய வாகனமாக பல்வேறு யோக முறைகளையும் பரிந்துரைக்கிறது. இவ்வாறு யோகம் என்பது இந்து மதத்தின் பல்வேறு ஆன்மசாதனை மார்க்கங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்கள், ஹட யோக ப்ரதீபிகை போன்ற யோக சாத்திர நூல்களில் யோக முறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப் பட்டு உள்ளன. அவையாவன, மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம். இவற்றில் ஒவ்வொரு வகையிலும் ஒரே மாதிரியான எட்டு பகுதிகள் உண்டு. அவையாவன, யமம், நியமம், ஆசனம், ப்ரதியாஹாரம், பிராணாயாமம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இந்த எட்டு பகுதிகள் தான் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த எட்டு பகுதிகளை வகுத்து கொடுத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். இந்த எட்டு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டிய அளவு, செய்து அடையும் நிலை, ஒவ்வொரு ஆன்மீக மார்க்கத்திலும் வேறுபடும். ஒவ்வொரு சீடருக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப மாறுபடும்.
யோகம் என்றால் பலருக்கும் உடனே ஞாபகம் வருவது யோகாசனங்கள் தான். யோகாசன பயிற்சிகளை பார்த்தே பலர் தயங்கி விலகிவிடுவர். உண்மையில் யோகம் என்பது யோகாசனம் மட்டும் அல்ல. அது எட்டு பகுதிகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக காலோ, கையோ இல்லாத ஒருவர் யோக முறைகளை செய்ய முயற்சிப்பது கடினம். கடுமையான நோய் கொண்டவர் சில பகுதிகளை செய்ய இயலாது. வயது முதிர்ந்தவரால் சில யோக முறைகளை செய்ய இயலாது. பிற ஊனங்கள் கொண்டவர்கள் அந்த ஊனத்தினால் யோக முறைகளை மேற்கொள்ள இயலாது. அப்படியானால் அவர்களெல்லாம் ஆன்ம விடுதலை அடையவே முடியாதா? அஷ்டாங்க யோகத்தில் சில பகுதிகளை பயில இயலாமல் போனால் இந்த பிறப்பு வீணா? என்றால் இல்லை! அஷ்டாங்க யோகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிலையை அடைந்தால் போதும். அதற்குத்தான் அவரவர்க்கு அஷ்டாங்க யோகத்தில் தகுந்த ஒரு நிலையை தெரிந்தெடுத்து கொடுத்து பயிற்றுவித்து ஆன்மீக வளர்ச்சி அடையச் செய்ய ஒரு குரு அவசியம் என்று வலியுறுத்தப் படுகிறது. ஒரு சிலருக்கு மிகக் கடுமையான உடல் பயிற்சி செய்தால்தான் புலன்களை அடக்க இயலும் - சிலருக்கு சுபாவமாகவே மிக எளிதாக அதிக உடற்பயிற்சிகள் இன்றி புலன்களை அடக்க வரும் - ஆகவே அந்தந்த மனிதருக்கு ஏற்ப அவரவருக்கான குரு ஒருவர் இருந்து வழிகாட்டுவது அவசியமாகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான கருத்தும் இருக்கிறது. அது சனாதன தருமம் நமக்கு காட்டும் பிறவிகளை கடந்த பார்வைதான். யோக வாசிஷ்டம் என்னும் நூல் இவ்வாறு சொல்கிறது, நல்ல கருமங்கள் - செயல்கள் செய்து வந்தால் அது ஒரு குணமாக ஆன்மாவில் படிந்து விடுகிறது. பாவ காரியங்கள் செய்து வந்தால் அதுவும் ஆன்மாவில் படிந்து விடுகிறது. அடுத்த அடுத்த பிறவிகளில் கர்மாவின் பலனால் இன்பமும் துன்பமும் ஏற்படுகிறது என்பது கருத்து. பிறவிகளைத் தாண்டி நம்முடன் கூட வருவது நமது குணங்களும் , புண்ணிய பாவங்களும் தான். கர்ம வாசனை என்று இதனை சொல்வர். ஒருவர் தொடர்ந்து காமத்தில் ஈடுபட்டே வந்திருந்தால் அடுத்த அடுத்த பிறவிகளில் அவரை காமத்தை நோக்கியே இட்டு செல்கிறது. யோகத்தில் ஈடுபட்டு வருபவருக்கு இயல்பாகவே அதை நோக்கி இட்டு செல்லும். உதாரணமாக, சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே சில திறமைகள் மிக அதிகமாக இருக்கும் - இதை ‘விட்ட குறை’ என்று பெரியோர் சொல்வர். அது இந்த பிறவிகள் கடந்த செயல்களின் வாசனை தான்.
இவ்வாறு ஒருவர் யோக பயிற்சிகள் செய்து சில காரணங்களால் இந்த பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் வெற்றி பெற முடியும். இது மரபணுவிலேயே பதியப்பட்டு விடுவது போல, ஆன்மாவின் மீது பதியப்பட்டு விடுகிறது என்பது சனாதன தருமத்தை சேர்ந்த சான்றோர்களின் வாக்கு. யோகத்தில் விடா முயற்சியுடன் ஈடுபடுவதற்கு இது ஒரு ஊக்கமாக ஆகிறது. இந்த யோக முறைகளையும், அதன் அஷ்டாங்க பிரிவுகளையும் அடுத்த பகுதியில் விளக்கமாக காண்போம்.
யோகத்துக்கு முதல் தேவையாக, அடிப்படையாக வேத, சாத்திரங்களில் பற்றும், தெய்வ நம்பிக்கையும் அவசியம். ஏனெனில், வேத சாத்திரங்கள் தர்மத்தை உபதேசிக்கின்றன. தர்மத்தை எடுத்துச் சொல்லி மனிதனுக்கு வழிகாட்டுகின்றன. தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இல்லாத மனிதன் மிருகத்தைப் போல புலன்களின் ஊடாக இன்பத்தை தேடி அலைகிறான். தன்னுடைய சுகத்துக்காக எந்த தவறையும் செய்ய துணிந்து விடுகிறான். கோபதாபங்களாலும், தொடர்ந்த வேட்கையாலும் மனித உடல் வலுவிழக்கிறது. ஆசை, உலகப் பற்று, கோபம் ஆகியவற்றால் மனதும் வலுவிழக்கிறது. ஆக அதர்மத்தின் வழி நடக்கும் மனிதன் மனதாலும் உடலாலும் வலுவிழந்து விடுகிறான். அதனால்தான் உடலுக்கும், மனதுக்கும் அமைதி அளித்து மனிதனை தெய்வத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் வகையில் தர்ம சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும், வேத சாத்திர புராணங்களில் பற்றும் வலியுறுத்தப் படுகிறது.
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் - அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை - மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் - வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.
யமம் என்பது அஹிம்சை; வாய்மை; பொறாமையின்மை; மனதாலும், சொல்லாலும், செயலாலும் காமத்தை தவிர்த்தல்; இன்ப துன்பத்தில் சமபாவனை; தவம்; கருணை; உணவில் கட்டுப்பாடு; எளிமை; தூய்மை ஆகிய பத்து விதங்களாக கடைபிடிக்கப் படவேண்டியதாகும். அதேபோல் நியமம் என்பது விரதம் இருத்தல் போன்ற செயல்களால் இயற்றும் தவம்; கிடைத்ததை கொண்டு மகிழ்தல்; ஆன்மீகத்தில் ஈடுபாடு; தானம்; கடவுளை மனதார வணங்குதல்; சித்தாந்தங்களை கற்று கேட்டு தெளிவை அடைதல்; தீய வழிகளில் ஈடுபாட்டை நீக்குதல்; மனதை நல்ல வகையில் சிந்திக்க பயிற்றுதல்; குருவிடம் உபதேசம் பெற்று மந்திரங்களை உருவேற்றுதல்; தான் கொண்ட மார்க்கத்தில் சொன்னபடி யாக ஹோமங்கள் செய்தல் ஆகிய பத்து விதமான செயல்களாகும். ஒரு யோகிக்கு யமம், நியமம் ஆகியவை இரண்டு கண்களைப் போன்றவை. அவைதான் அடிப்படை. மனதும் உடலும் சுத்தமாக இருந்தால்தான் யோகத்தில் முன்னேற முடியும்.
அடுத்து மூன்றாவதாக ஆசனம் என்பது எண்ணத்தை சுத்தப்படுத்தி சரியான பாதையில் செலுத்துவதற்காக மேற்கொள்ளுவதாகும். ஆசனம் என்பது உடலை வளைத்து ஒவ்வொரு நிலையில் நிறுத்துதல் ஆகும். யோகாசனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா? உலகில் எத்தனை வகையான ஜீவராசிகள் இருக்கிறதோ அத்தனை இருக்கிறதாம். சுமார் 84, 00, 000 இருக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதில் சுமார் 1600 ஆசனங்கள் சிறந்தவை என்றும், அதிலும் பத்மாசனம் முதலான 32 ஆசனங்கள் மிகவும் உயர்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. ஆசனப் பயிற்சியை குருவிடமிருந்தே கற்க வேண்டும். சரியானபடி பயில வில்லை என்றால் தீய விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான்காவதாக பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி என்பது அனைவரும் அறிந்ததே. மூச்சை உள்ளே இழுத்து (பூரகம்), உள்ளே மூச்சை நிறுத்தி (கும்பகம்), மூக்கை மூடி மற்றொரு மூக்கின் வழியாக வெளியேற்றுதல் (ரேசகம்) ஆகிய பயிற்சிகள் அடங்கியதே பிராணாயாமம். இதில் மூச்சை உள்ளே இழுத்தல், நிறுத்துதல், வெளியேற்றுதல் ஆகியவற்றுக்குரிய கால அவகாசத்தை மெதுவாக அதிகப்படுத்தி பயிற்சி செய்வர். பிராணாயாமத்தால் உடலில் நாடிகள் சுத்தம் அடைகின்றன. இதயம் வலுவடைகிறது. கப, வாத, பித்தங்களில் ஏற்படும் மாறுபாட்டை பிராணாயாமம் சரி செய்கிறது - அதனால் நோய்கள் நீங்குகின்றன. மனதும் அமைதி அடைகிறது.
பிராணாயாமம் செய்பவர் சரியான இடத்தை தேர்வு செய்தல் அவசியம். அந்த இடம் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கக் கூடாது - சென்று சேர்வதற்குள் அவசரம், அமைதியின்மை, மனஅழுத்தம் ஆகியவை ஏற்படாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடமாகவோ, அதே நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகவோ இருக்கக் கூடாது - சிந்தனை சிதறக்கூடும். பிராணாயாமம் பயிலும் யோகி மூன்று மணிநேரத்துக்கு மேல் உண்ணாமல் இருத்தல் ஆகாது - சாத்வீகமான இயற்கை உணவுகளையே உண்ண வேண்டும் - அதுவும் குறைவாக அரை வயிறு உண்ணவேண்டும் ஆகிய பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாவதாக ப்ரத்யாஹாரம் என்பது சுருக்கமாக இப்படி சொல்லலாம்: கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பொறி ஐந்தினையும், பார்த்தல், கேட்டால், நுகர்தல், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய புலன் ஐந்தினையும் கட்டுப்படுத்துதல் ஆகும். ஆசனங்களும் பிரணாயாமமும் கைவரப் பெற்றால், பொறிகளை அடக்குவது எளிதாகும். ஓயாமல் மனதுக்கு செய்திகளை கொண்டு சென்று அலை அலையாக எண்ணங்களை ஓடச் செய்யும் பொறிகளை அவற்றின் புலன்களிலிருந்து எழுத்து பிடித்தால்தான் அடுத்த நிலையில் மனதை அடக்க முடியும்.
உதாரணமாக ஒருவர் மிகவும் ரசித்தது பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை கடந்து வண்டி ஒன்று செல்கிறது. இப்போது இன்னொருவர் வந்து இங்கே வண்டி ஒன்று சென்றதை பார்த்தீர்களா? என்று கேட்கும்போது இல்லையே, பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் - கவனிக்கவில்லை என்று அவர் சொல்லக் கூடும். கண் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனதுக்கு செய்தி எதுவும் கிட்டவில்லை. அது போல, எல்லா புலன்களையுமே மனது செய்தி அனுப்புவதிலிருந்து தடுத்து விடவேண்டும். இது சாதாரணமாக செய்ய முடியாது என்பதால் ஒரு தெய்வ உருவத்தை மனதில் நினைத்து அதையே தியானித்து மற்ற புலன்களை மறக்க வைக்க வேண்டும்.
இப்போது நாம் பார்த்த இந்த அஷ்டாங்க யோகத்தின் ஐந்து அங்கங்களும் வெளிப்படையாக செய்யக்கூடியவை - உடலை பதப்படுத்தக் கூடியவை. இந்த ஐந்து முறைகளால் உடலின் சக்தியை அதிகப்படுத்தி, நீண்ட ஆயுள் பெற்று உலக இன்பத்தை மிகச்சிறந்த முறையில் துய்த்து இன்புறலாம் என்பது உண்மைதான். ஆனால் யோகத்தின் உச்ச கட்ட பலனான மோக்ஷத்தை, காலத்தை வென்று பிறப்பு இறப்புகள் அற்ற, நீடித்த ஆனந்த நிலையை அடைவதற்கு இவை மட்டும் போதாது. அதற்கு தர்மத்தின் வழி நடத்தல், வேத, சாத்திர, புராணங்களில் உறுதியான நம்பிக்கையும் ஈடுபாடு ஆகியவை அடிப்படையாக தேவை. அதன் பிறகு இந்த ஐந்து முறைகளை கடைபிடித்தால் மனதும் உடலும் ஒரு தயார் நிலைக்கு வரும். இதற்கு மேல், மனதை அடக்கி ஞானத்தை பெறும் பெரிய சாதனை இருக்கிறது. இதில் நம்பிக்கை கொண்டு முயற்சிப்பவரை சாதகர் என்றும், அவர் அடையும் நிலை சாதனை என்றும் முடிவில் அவர் யோகி என்றும் பெயர் பெறுகிறார்.
அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமான ப்ரதியாஹாரத்தில் புலன்களை அடக்கியபின், தாரணை தொடங்குகிறது. ஓயாத அலையாக எழும் எண்ணங்களை ஒரு புள்ளியில் தரிக்க செய்வதே ஆறாவது பகுதியான தாரணை. அதற்கு ஏதுவாக தெய்வத்தின் படமோ, உருத்திராட்சம் போன்ற சின்னங்களையோ மனதில் நிறுத்தி அதையே சிந்திப்பதே தாரணை ஆகும். மனதை ஒருமுகப் படுத்துவதே தாரணையின் நோக்கம். தாரணையில் மனதை செலுத்துவதற்கு ஆசனங்களும் இதற்கு முன் சொல்லப்பட்ட மற்ற ஐந்து யோக முறைகளும் அவசியம்.
ஏழாவது அங்கமான தியானத்தை ஒரு தனி செயலாக சொல்வதை விட, அதை ஒரு நிலை என்று சொல்லலாம். தாரணையில் மனம் ஒருமுகப்பட்டாலும் அது ஒரு தனி செயலாக உட்கார்ந்து செய்ய வேண்டியது. தியானம் என்பது என்ன செயல் செய்து கொண்டு இருந்தாலும், உதாரணமாக நடக்கும் போதும், பிரயாணம் செய்யும்போதும், இறைவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தாலும், இதர வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் தியானிக்க முடியும். தாரணையின் முடிவில் மனம் தன் எண்ணங்களை துறந்து மோன நிலைக்கு செல்வதே தியானம்.
இதன் அடுத்த நிலைதான் சமாதி என்கிற மனத்திற்குரிய விடுதலை. சமாதி நிலையில் மனது சுத்தமாக எண்ணங்களை துறந்து விடுகிறது. உடல் உணர்ச்சிகளை துறந்து விடுகிறது. ஆன்மா அமைதியை எட்டுகிறது. இந்த நிலையைஅடைய முடிந்த யோகியால், செய்ய முடியாத சாதனைகள் இல்லை, அவரால் இந்த உலகிலேயே நல்ல தார்மீக முறையில் மிக அதிகமான இன்பத்தை அடைய முடியும். இவ்வுலக வாழ்வை துறந்து பிறப்பு - இறப்பு அற்ற பேரின்ப விடுதலைக்கும் முயற்சிக்க முடியும்.
எட்டு அங்கங்களைக் கொண்டு ஆன்ம விடுதலைக்கு வழி செய்யக் கூடிய நான்கு யோக முறைகளைப் (மந்திர யோகம், ஹட யோகம், லய யோகம், ராஜ யோகம்) பற்றி சுருக்கமாக இப்போது பார்ப்போம். முன் பகுதியில் சொன்னது போல், யோகத்தின் குறிக்கோள், ஆன்மா இந்த பிறவி துன்பங்களிலிருந்து விடுபட்டு, தன்னைப் பற்றிய ஞானத்தை அடைந்து ஆனந்த நிலையை அடைதல் ஆகும். இந்த முயற்சி, புலன்களை அடக்குவதில் தொடங்கி, ஞானத்தில் முடிவடைகிறது. யோக சாத்திரத்தில் ஞானத்தை பல விதமாக பிரித்து மிக விரிவாக விளக்கப் பட்டிருக்கிறது.
இனி யோக முறைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். முதலாவதான மந்திர யோகம் என்பது ஒரு அற்புதமான வழிமுறை. இந்த உலகில் பொருள்கள் எல்லாமே பருவுருவாக ஒவ்வொரு பெயர் கொண்டு இருக்கிறது - அதாவது யோகிகள் மொழியில் நாமமும், ரூபமும் கொண்டு இருக்கின்றன. இவற்றை பார்ப்பதால், பயன்படுத்துவதால் திரும்ப திரும்ப ஓயாமல் எண்ண ஓட்டங்கள் ஏற்படுகின்றன. புதிய யோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆக இவற்றை ஒதுக்காமல், தரையில் விழுந்த ஒருவன் அந்த தரையையே ஊனிக்கொண்டு எழுந்திருப்பது போல், மன சலனங்களை ஏற்படுத்தும் இந்த நாமங்களையும், ரூபங்களையுமே பயன்படுத்தி, மந்திர வடிவாக கண்டு வழிபாட்டு யோகத்தில் ஈடுபடுவதே மந்திர யோகமாகும்.
ஒரு தெய்வ மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தோத்திரங்கள் சொல்லி, பூஜை ஆராதனைகள் செய்து, அந்த மூர்த்தியின் மீது மேல் நாளடைவில் அன்பை வளர்த்துக் கொண்டு, மனதை அந்த மந்திர தோத்திரங்களில் லயிக்கச் செய்வதே இந்த மந்திர யோகத்தின் வழிமுறை. மற்ற யோக முறைகளைவிட இது கொஞ்சம் இலகுவானது. ஆனால் மந்திர சித்தி (Siddhi) பெற பல வருடங்கள் ஆகும். இந்த யோகத்தில் எளிய யோகாசனங்களுடன், உடலை விட மனதை அதிகம் கரைப்பதே இந்த முறையில் நோக்கமாக இருக்கிறது. அதிலும் இந்த யோகத்தில் ஈடுபடுவது அந்த யோகி மட்டும் அல்ல - அவர் மந்திரம் சொல்லி ஆராதனை செய்யும் அந்த தெய்வமும் அவருக்கு உதவுகிறது. ஒரு பாதி யோகியின் முயற்சி என்றால், வெளிப்புறத்தில் இயற்கையிலிருந்து உபாசனையால் எழுப்பப் பட்ட தெய்வ சக்தியும் உதவுகிறது. இவ்வாறு மந்திரங்களை விடாமல் ஜபம் செய்து, தியானித்து வரும் யோகி தெய்வ அருளால் சமாதி நிலை அடைகிறார்.
அடுத்த ஹட யோகம் என்பது உடலை கொண்டு விதவிதமான வகையில் யோகப் பயிற்சிகள் செய்வதில் தொடங்குகிறது. இதில்தான் குண்டலினி என்கிற அபூர்வ சக்தியை மனித உடலில் எழுப்புவது பெரும் முயற்சியாக மேற்கொள்ளப் படுகிறது. குண்டலினி என்னும் சக்தி சிறு பாம்பு வடிவில் முதுகுத்தண்டின் முடிவில் உறங்குகிறது. இந்த சக்தியை உறக்கத்தில் இருந்து எழுப்புவதற்கு யோகிகள் பல்வேறு ஹட யோக ஆசன முறைகளை உபயோகப்படுத்துவர். ஹட யோகத்தின் மற்றொரு கருத்து, இந்த மனித உடல் ஆன்மாவின் சூக்கும சரீரத்திலிருந்தே உருவாகிறது. தூலமான இந்த உடலில் நிகழும் மாற்றங்கள் சூக்கும உடலையும் பாதிக்கும். அதனால் வெவ்வேறு ஆசன முறைகளால் உடலில் இயங்கும் வாயுக்களையும், நாடிகளையும் கட்டுப் படுத்தி, குண்டலினி சக்தியை எழுப்பலாம். அதன் மூலம் ஆன்மா விடுதலை அடையலாம் என்பதாகும். ஹட யோகத்திற்கு ஆரோக்கியமான உடலே அடிப்படை தகுதி. அதற்காக முதலில் உடலில் இயங்கும் வாயுக்கள், சுவாசம், நாடித்துடிப்புகள் ஆகியவற்றை சீர் படுத்த பயிற்சி மேற்கொள்ளுவர். அடிப்படையில் ஹ என்றால் சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிப்பதாக பொருள். அதாவது ஒன்று வெப்பத்தையும் இன்னொன்று குளிர்ச்சியையும், இரு எதிர் நிலைகளை குறிக்கிறது. இவற்றை ஒன்றுடன் ஒன்றை இணைத்து சமனப் படுத்தி விடுவது ஹட யோகம்.
ஹட யோகத்தின் அடுத்த நிலையே லய யோகம் ஆகும். லய யோகத்தில் உடலில் பல்வேறு உருவகங்கங்கள் எழுப்பப் படுகின்றன. அதாவது, முதல் உருவகம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன - அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபுரம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகும். இதில் மூலாதாரம் என்கிற சக்கரம் முதுகுத்தண்டின் முடிவிலும், சகஸ்ராரம் என்னும் சக்கரம் உச்சந்தலையிலும் இருக்கிறது. குண்டலினியை சக்தியாக உருவகித்து அவள் மூலாதாரத்தில் உறங்குவதாக பாவனை செய்யப் படுகிறது. சகஸ்ராரத்தில் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பாவனை செய்யப் படுகிறது. குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி ஆறு சக்கரங்களை துளைத்து மேலெழுப்பி சிவத்துடன் இணைப்பதே லயயோகமாக விளங்குகிறது. இதற்கு மந்திர யோகத்தின் சில பகுதிகளும், ஹட யோக ஆசனங்களும் உபயோகப் படுத்தப் படுகின்றன. ஆனால் மந்திர யோகத்திலோ, ஹட யோகத்திலோ இருப்பது போல், உடலை முக்கியமாக கொள்ளுவதோடு அல்லாமல் மனதாலும் லய யோகத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. லய யோகத்தில் யோகிகள் ஆக்ஞா சக்கரத்தில் குண்டலினியை ஒளி வடிவமாக தரிசிப்பர். ஒளியை பிந்து என்று குறிப்பிடுவார்கள். அதே நேரத்தில் ஓங்காரமாக நாத வடிவிலும் குண்டலினி தேவியை தரிசிக்க கூடும்.
மந்திர யோகத்தில் முக்கிய பாகம் மந்திரங்களை உச்சரித்தல் - ஜபம் செய்தல் ஆகும். ஹட யோகத்தில் ப்ராணாயாமமே முக்கிய பாகமாக இருக்கிறது. லய யோகத்தில் தாரணை - புலன்களை உள்ளிழுத்து மனதை ஒருநிலைப் படுத்தலே முக்கியப் பாகமாக இருக்கிறது.
அடுத்த யோக முறை ராஜ யோகம். இந்த யோக முறையில் உடலை விட மனதிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. துறவும், ஆசை, காமம், போன்றவற்றிலிருந்து விலகிய வைராக்கியமும் ராஜ யோகிக்கு அவசியம். ராஜ யோகி, உடலை விட, புத்தியால் மனதை அடக்க முயற்சிக்கிறார். தர்க்க வாதங்களை நிகழ்த்தி மனதை ஒரு நிலைப்படுத்துகிறார். உபநிடதங்கள் போன்றவற்றை கற்று, தெளிந்து, ஞானத்தை அடைகிறார். ராஜ யோகத்திலும் மற்ற எட்டு அங்கங்கள் உண்டு. ஆன்மாவை பற்றி நிகழ்த்தும் ஆராய்ச்சிக்கு விசாரம் என்று பெயர். ராஜ யோகி இந்த விசாரத்திலிருந்து, நிர்விசார - கேள்விகள் இல்லாத நிலைக்கு, அமைதியான சமாதி நிலையை அடையும் போது, அவரது ஆன்மா பேரின்ப விடுதலை அடைந்து விடுகிறது. ராஜ யோகத்திற்கு மற்ற யோகப் பயிற்சிகளும் அவசியம்.
யோகம் என்பது ஏதோ மூச்சு பயிற்சியோ, அல்லது உடற்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த வழிமுறை. யோகம் சனாதன தருமத்தின் ஆணிவேர். இந்த கட்டுரை யோகத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லி அவற்றை சுருக்கமாக விளக்க மேற்கொள்ளப்பட முயற்சி மட்டுமே. யோக சாத்திரத்தின் ஒவ்வொரு யோக முறையும் கடலளவு பெரியது. சனாதன தருமத்தில் பங்கு வகிக்கும் எந்த மார்க்கத்திலும், அது முருக வழிபாடாகட்டும், அனுமனின் வழிபாடாகட்டும், சக்தி வழிபாடாகட்டும், வைணவ வழிபாடாகட்டும், எந்த வழிபாட்டிற்கும் அடிப்படையானது யோகம். இதுவே அந்தந்த இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுத்தந்து முக்தி அடைய உதவக் கூடியது. இந்த கட்டுரையை படிப்பவர்கள் மேற்கொண்டு யோகத்தில் ஆர்வம் பெற்று யோக சாதனைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்.

No comments:
Post a Comment