Monday 30 January 2012

மீன் பிடித்த முல்லா

முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்.

" தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை" என்றார் மன்னர்.

இந்தச் செய்தியை முல்லா அறிந்தார்.

ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார்.

" முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?" என்று வினவினார்.


" மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் " என்றார் முல்லா.

இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது.

அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார்.

சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார்.

" என்ன முல்லா மீன் வலையைக் காணோம் " என்று மன்னர் கேட்டார்.

" மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு" என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. 

No comments:

Post a Comment