எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்
மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். வேர்ட் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷிட், பிரசன்டேஷன் டூல் என இன்னும் பல பயனுள்ள தொகுப்புகளைத் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் இது.
முன்பு கம்ப்யூட்டரை நிறுவனங்களிடம் வாங்கினாலும், கிரே மார்க்கட்டில் அசெம்பிள் செய்து வாங்கினாலும், தனிநபர் பயன்பாட்டுக்கென வாங்குபவர்கள், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பை இலவசமாகப் பதிந்து தர கேட்பார்கள். இதனால் இந்த ஆபீஸ் தொகுப்பு, தனி நபர்களின் கம்ப்யூட்டர்களில் காப்பி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தொகுப்பாகவே இருந்து வந்தது, வருகின்றது. ஆனால், இப்போது இன்டர்நெட் இணைப்பு என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அமைந்துவிட்ட நாளில், மைக்ரோசாப்ட் எந்தக் கம்ப்யூட்டர்களில், ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாத ஆபீஸ் தொகுப்பு களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கிறது. அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் உதவிக் குறிப்புகளைத் தர மறுக்கிறது. இன்னும் சில நாட்களில் இவற்றை இயங்கவிடாமல் செய்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆபீஸ் தொகுப்பினைக் கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்த பலரும் முன்வருவதில்லை. ஏனென்றால், ஒரு சில நாடுகளில் அதன் விலை மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இதனால் தான் திருட்டு நகல் சாப்ட்வேர் பரவி வருகின்றது. ஆனால் இது போன்ற திருட்டு நகல் ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் இணையத்தில் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக இலவசமாகக் கிடைக்கும் தொகுப்புகளை டவுண்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அந்த தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.
1. ஓப்பன் ஆபீஸ் (Open Office. org): எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பாகும். இதற்கென இத்தொகுப்பினை வழங்குபவர்களுக்கு பல விருதுகள் தரப்பட்டுள்ளன. உங்கள் டாகுமென்ட், ஸ்ப்ரட்ஷீட், பிரசன்டேஷன் பைல்களை, இந்தத் தொகுப்பிலும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத் தலாம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் முகவரி: http://why.openoffice.org/ . இது ஒரு ஓப்பன் சோர்ஸ் கோடிங் முறையில் உருவானது என்பதால், நீங்கள் ஒரு புரோகிராமராக இருந்தால், இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, உங்களுக்குத் தேவையானபடி இதனை வளைத்து அமைத்துக் கொள்ளலாம்.
2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony): பலவகையான பயனுள்ள வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இதில் லோட்டஸ் சிம்பனி டாகுமெண்ட்ஸ், லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ், லோட்டஸ் சிம்பனி பிரசன்டேஷன்ஸ் என ஆபீஸ் தொகுப்பின் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனைப் பெற http://symphony.lotus.com/software/lotus /symphony/home.nsf/home ன்றமுகவரிக்குச் செல்லவும்.
3. கூகுள் டாக்ஸ் அன்ட் ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (Google Docs and Spreadsheets):: இணையத்தில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக கூகுள் தரும் தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ள வசதிகள் இதனை நிரூபிக்கின்றன. நீங்கள் ஆன் லைனில் இதனைப் பயன்படுத்தலாம் என்றாலும், ஆப் லைனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பயன்படுத்தி பின்னர் முந்தைய டாகுமெண்ட்டுடன் இணைத்துக் கொள்ளும் வசதியையும் இது தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://docs.google.com/
4.ஸோஹோ சூட்(Soho Suite): இதுவும் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம். இதில்Zoho Writer, Zoho Sheet and Zoho Show எனப் பலவகையான டாகுமெண்ட்களை உருவாக்கும் வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த தொகுப்பும் ஆப் லைனில் டாகுமெண்ட்களை எடிட் செய்து, பின் அப்டேட் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்றுப் பயன்படுத்த http://www.zoho. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
5. கே ஆபீஸ் (K Office) : நீங்கள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த ஆபீஸ் சூட் உங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும். இதில் அனைத்து அப்ளிகேஷன் வசதிகளும் உள்ளன. இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.koffice.org/ மேலே காட்டப்பட்டுள்ள ஆபீஸ் தொகுப்புகள் தவிர, சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்களுக்கு (வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் போன்றவை) மட்டும் பதிலியாகப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
6.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): மைக்ரோசாப்ட் எக்ஸெல் அப்ளிகேஷனுக்கு இணையானது இந்த புரோகிராம். இதில் கூடுதலாக டேட்டா பைலட்
(Data pilot) என்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. நிறுவனங்களின் டேட்டா பேஸ் தொகுப்பிலிருந்து டேட்டாவைப் பெற்று, பலவகைகளில் அவற்றைக் கையாளும் திறன் பெற்றது. இதன் மூலம் பல தெளிவுள்ள முடிவுகளை எடுக்க இது உதவிடும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.openoffice.org/product/calc.html
7. அபிகஸ் (Abykus): அபிகஸ் 2.0 என்ற இந்த புரோகிராம் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஆகும். இது வர்த்தகம் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களைக் கையாளப் பல வழிகளைத் தருகிறது. இதில் புள்ளிவிபரங்களைக் கையாண்டு தீர்வுகளைப் பெற ஸ்டேட்டிஸ்டிகல் விஸார்ட் தரப்படுகிறது. 190க்கும் மேலான கணக்கு பார்முலாக்கள், மேட்ரிக்ஸ் பயன்பாடுகள், நாள், நேரம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சமன்பாடுகள், முப்பரிமாண கிராபிக்ஸ் வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த ஒர்க்ஷீட்டையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.abykus.com/என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
8. கிளீன் ஷீட்ஸ் (CleanSheets): : அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங் களிலும் பயன்படுத்தக் கூடிய முதல் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இது ஜாவா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைப் பயன்படுத்த ஜாவா உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். இதனைப் பெற http://csheets.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
9. ஸ்ப்ரெட் 32 (Spread32): இது ஒரு சிறிய ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் 256 நெட்டு வரிசையும், 65536 படுக்கை வரிசையும் கொண்ட மேட்ரிக்ஸ் தரப்படுகிறது. 255 ஒர்க்ஷீட் கொண்டுள்ளது. 300க்கு மேற்பட்ட பார்முலா செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.xtort.net /officeandproductivity/floppyoffice//
10.எடிட் கிரிட் (EditGrid): இது ஒரு ஆன்லைன் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். எக்ஸெல் புரோகிராம் தரும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும். டேட்டா வினை இதனுடன் தொடர்புபடுத்தி, பின் எக்ஸெல் தரும் வசதிகளுக்கும் மேலான வசதிகளைப் பயன்படுத்தி, நாம் முடிவிற்கான ஸ்ப்ரெட்ஷீட்களை இதன் மூலம் தயாரிக்கலாம். இதனைப் பெற http://www.editgrid.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இணைய தளங்கள் பலவற்றில் இது போல ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம்கள் வெவ்வேறு வசதிகளுடன் உள்ளன. அவற்றில் Google Spread sheets, Zoho Sheets, Num Sum, Simple Spreadsheet, wikiCalc, ZCubes Calci ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
No comments:
Post a Comment