Friday 23 March 2012

பிரபலமானார்களைப் பற்றிய அறிக்கைகள்

ஒன்பதாம் அத்தியாயம்: பிரபலமானார்களைப் பற்றிய அறிக்கைகள்

நான் வளர்ந்தபின் கூடுதலாகப் பத்திரிக்கை நிருபராக இருந்த காரணத்தினால் எனக்கு மக்களைப்பற்றி அறியும் ஆர்வம் மிகவும் அதிகமாயிருந்தது. நான் தொடர்புப்பரிமாற்றம் செய்த நண்பர்களில் ஆர்தர் போர்டைப்போல கடமையுணர்ச்சியுடன் வேறு எவரும் எனது கேள்விகளுக்குரிய பதில்களை (முக்கியமானவர்கள், பழைய சிநேகிதர்கள், மற்றும் ஆவியாராய்ச்சித் துறையில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் போன்றவர்களைப் பற்றிய எனது கேள்விகளுக்குரிய பதில்களைக்) கண்டறிந்து சொல்லவில்லை. அவர் எனது தந்தையாரினதும், மற்றைய எனது உறவினர்களினதும் செயற்பாடுகளைப் பற்றி எனக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதேநேரத்தில் பொதுப்படையாகவும் அரசியல், திரையரங்கு, ஆவியாராய்ச்சி போன்ற துறைகளில் மிகப்பிரபலமானவர்களைப் பற்றியும் அவர் பல விபரங்களைத் தந்துதவினார். இவற்றுள் பெரும்பாலானவை இப்புத்தகத்துக்காகவென்று நான் கேட்ட கேள்விகளுக்காக அவரளித்த பதில்களேயாகுமன்றி அவர் தன்னையொரு கிசு கிசுப் பத்திரிகையாளராகக் கற்பனை பண்ணியதாலல்ல. நான் எப்போதாவது மரியாதைக்குரியவர்களின் பட்டியலைத் தட்டச்சு இயந்திரத்தில் டைப் செய்கையில் அதற்கு, "நாம் தகவல்களைத் தேடிச்சேகரித்தபின் உனக்கு அறியத்தருவோம்" என்பதே அவரின் பதிலாக இருக்குமாகையால் இப்பெயர்களெல்லாம் பெரும்பாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் வெளிவந்தது. நான் தான் அவற்றை வகைப்படுத்தி ஒழுங்கமைத்தேன்.
மேமாதத்தின் தொடக்கத்தில் அவர், "மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King, Jr) இப்போ இங்கே இல்லை. சிறிதுகாலத்துக்கு அவர் இங்கே வரமாட்டார். ஏனெனில் யுத்தத்திலே இறப்பைத்தழுவிப் புதிதாகக் கடந்து வந்த ஆத்மாக்களுடன் அவர் வேலை செய்கிறார். ஆனால் அவரைச் சிற்சில நேரங்களில் நாம் பார்க்க இயலுமாகவுள்ளது. அதாவது அவர் வியட்நாம் ஆகிய இடங்களிலேயுள்ள போர்முனைகளிலேயே கூடுதல் நேரத்தைச் செலவழிக்கிறார். அவருக்குப் பழியுணர்ச்சியொன்றும் கிடையாது. தனது பூவுலகவாழ்வின் சுடரை அணைத்த மனிதனைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாமல் அவர் தனது மக்களின் நலன்களைப் பற்றியும் யுத்தத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றியும் கவனிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
"வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) பெரும்பாலான நேரங்களில் பிராங்க்ளின் றூஸவெல்ட் (Franklin Roosevelt) உடன் சம்பாஷணையில் ஈடுபடுகிறார். இந்தப்பக்கத்திலே அவர்களிடையே கூடுதல் நெருக்கம் காணப்படுகிறது. உண்மையிலேயே பல விஷயங்களில் இருவருக்கும் தத்தம் நாட்டைச் சேர்ந்தவர்களிலும் பார்க்கக் கூடுதல் ஒற்றுமை காணப்படுகிறது. றூஸவெல்ட் பிரித்தானிய அரசியல் நிலைமைகளில் கூடுதலாக ஈர்க்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் கலவரங்களில் வினி (Winnie) ஆழ்ந்திருக்கிறார். இருவருமே சமூகசேவைகளில் சுறுசுறுப்பான ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் வளர்ப்புப் பிராணிகள் தொடர்பாக இருவரும் தாங்கள் தீட்டியிருக்கும் திட்டங்களுக்கு நிதியுதவிகள் செய்யும்படி, அறப்பணிகள் செய்பவர்களையும், அப்படிப்பட்ட நிறுவனங்களையும் தூண்டுகிறார்கள். யாருடைய திட்டத்துக்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கிறது என்பதில் கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரு சிறு போட்டியே காணப்படுகிறது. திருமதி றூஸவெல்டை இங்கே அதிகம் காணக்கிடைப்பதில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவிலும் வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அங்கேயுள்ள கறுப்பு இனமக்களின் நோக்கங்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு சர்வதேச அரங்கில் நீதி கிடைக்கச்செய்ய முயற்சிக்கிறார். அவரது விருப்பங்களெல்லாம் பரந்து விரிந்து இருப்பதால், சிலநேரங்களிலேயே இங்கே காணப்படுகிறார். ப்ராங்ளினையோ வேறு உறவினரையோ நண்பரையோ பார்வையிட்டுவிட்டு உடனே சென்றுவிடுவார். எல்லா இடத்திற்கும் சுற்றிச் சென்று உலகில் ஒழுங்குமுறையை நிலைநாட்டி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடுகிறார். அவர் ஒரு உன்னதமான ஆத்மா. ஆனால் சில விஷயங்களில் சற்றே சக்தியை விரயமாக்குகிறார். சிலபேர் சில பிரச்சனைகளை மனிதரிலும் பார்க்க இறைவனிடம் விடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருக்கக்கூடியதான சாந்தமும், அமைதியும் இவரிடம் குறைவாகக் காணப்படுகிறது.
மிக அண்மையில் வந்தவரான விட்னி யங் (Whitney Young) ஐப்பற்றி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். "அவர் இப்போதே பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கிறார். அவர் இறப்புக்கும் விழிப்புக்குமிடையே ஒரு கணமேனும் விரயம் செய்யவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. அவர் நீதியும் நேர்மையும் வெற்றிபெறவேண்டுமென்று மனப்பூர்வமாக விரும்பினார். இங்கு வந்ததன் பிற்பாடு அவர் எந்தப் பிரச்சனைக்கும் தனியே இரு பக்கங்கள் மட்டுமில்லை பல்வேறு பக்ககங்களிருக்கின்றன என்பதனைக் காண்கிறார். அவர், மத்தியஸ்தம் வகிப்பவர்கள் மற்றும் இடையில் நின்று பேரம் பேசுபவர்கள் ஆகியோருக்கு இவற்றையுணர்த்தி அவர்களின் கண்களைத் திறக்க வேண்டுமென நினைக்கிறார். அதாவது, ஆம் அல்லது இல்லை அல்லது அநேகமாக என்றில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக எப்படி அதனைச் செய்து முடிப்பது என்று ஆராயவேண்டும்".
இன்னொருநாள் - வானுலகின் பதிவேடுகளைப் (akashic records) பார்த்திருக்கக் கூடும் - பின்வருமாறு எழுதினார்: இப்போ நாம் ஜோர்ஜ் வாஷிங்டன் கார்வரைப் (George Washington Carver) பற்றிப் பார்ப்போம். நிறம் கொண்ட மனிதன் - தற்கால மொழியில் சொன்னால் கறுப்பின மனிதன் - நிலக்கடலையால் பலவிதமான ஆதாயங்களைச் செய்தார். அவர் பலகாலம் இங்கே (நாமிருக்கும் இடத்தில்) இருந்தார். திரையின் இருபுறங்களிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, தெற்கத்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஏனைய உற்பத்திப்பொருட்களின் (அதாவது ரேயான், டாக்ரோன், ஜவுளிகள் போன்றவை) தரங்களைப் பூரணமாக்குவதற்காக வேலை செய்தார். ஆனால் மிகச்சமீபத்தில் மீண்டும் அமெரிக்காவில் ஹார்லெம் (Harlem) என்ற இடத்தில் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த சிறுவனாகப் பிறந்திருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்குமுகமாக நாம் இப்போ அவர் யாரென்று சொல்லமாட்டோம். ஆனால் அவரோ ஒரு சுவாரஸ்யமானவராக இருப்பார். அவர் கார்வராக (Carver) வருவதற்குமுன் ஒரு வெள்ளையின மனிதராகப் பிறந்திருந்தார். அப்பொழுது அவர் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி இருந்தமையினால், தனது கரங்களினால் பாதிப்படைந்த இனத்துக்குப் பரிகாரம் செய்யுமுகமாக தானாகவே முன்வந்து கார்வராக வந்திருந்தார். வெள்ளையின மனிதனாக ஏற்கனவே மிகவும் முன்னேறியிருந்தமையினால், அந்த ஆளுமையையும், விஞ்ஞான அறிவையும் அவர் கார்வராக வருகையில் கூடக்கொண்டுவந்து கறுப்பினமக்களுக்கு உதவினார்.
"இம்முறை, கார்வராக வந்து நிறைய விடயங்களைச் சாதித்தமையினால், கிட்டத்தட்ட எந்த இனத்திலும், எவ்வகை உடலையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர் பெறுகிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே ஹார்லம் (Harlem) எனும் இடத்தைச் சேர்ந்த கறுப்பினத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அங்கிருந்துதான் கடைசியில் கறுப்பு இனத்துக்கு விமோசனம் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். உலகநேரப்படி அவருக்கு இப்போ கிட்டத்தட்டப் பதின்மூன்று வயதிருக்கும். இப்பவே அவர் பெரிய பெரிய சாதனைகள் சாதிப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது குடும்பம் அமெரிக்க அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இவ்வளவு தான் இப்போ என்னால் சொல்லமுடியும்.
கடந்த காலத்திலிருந்த பிரபலமான அரசியல் தலைவர்களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினர்: இப்போ ஆபிரகாம் லிங்கனைப் (Abraham Lincoln) பற்றிப் பார்ப்போம். அவர் ஒரு பிரகாசமான ஆத்மா. எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மென்மையான ஆத்மா. இங்கே நீண்ட காலம் தங்கியிருந்தபின் அவர் மீண்டும் உடலெடுத்துள்ளார். இப்போ நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) இல் வாழ்கிறார். அங்கே அவர் தெற்கத்திய இனப்பிரச்சனையின் எல்லா விதமான முகங்களையும் எல்லா விதமான வெளிப்பாடுகளுடன் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போ வயது வந்தவராகி விட்டார். அவர் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க பல்கலைக்கழகங்களுடனும், அறக்கட்டளை நிறுவனங்களுடனும் சேர்ந்து வேலை செய்கிறார்.
ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington)? அவர் சிறிதுகாலம் கண்ணில் படமாட்டார். ஏனெனில் சமீபத்தில் வியட்நாமில் ஒரு போராளியாக வாழ்ந்து முடித்தபின் இப்போ ஓய்வெடுக்கிறார். அவரது இறப்பானது அவ்வளவு அதிர்ச்சி நிறைந்ததாகையால், சிறிது காலத்துக்கு அவர் நித்திரை கொள்வார். ஒரேயொரு விஷயத்தைத் தவிர அவரது கடைசிப் பிறப்பின் அடையாளத்தை நாம் இதற்கு மேல் சொல்வதற்கு விரும்பவில்லை. அதாவது அவர் ஒரு படைப்பிரிவைத் தைரியத்துடன், எதிரிகளின் படைவரிசைகளின் பின்னே வழிநடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்டுவிட்டார்.
"சார்லஸ் த கால் (Charles de Gaulle) ஐரோப்பாவினதும் மத்தியகிழக்கு நாடுகளினதும் வளர்ச்சிகளை ஆவலுடன் கவனிக்கிறார். அங்கே பழக்கப்பட்டது போல இங்கே வந்ததும் வராததுமாக அவர் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். ல பெல் பிரான்ஸ் (La Belle France) என அவர் அழைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு ஏதாவது துயர் வருமெனில் எப்பொழுதும் தீக்குதிரை போல நிற்பார். அவர் போர்த்தந்திரங்களிலும் பார்க்க சமாதான முறைகளைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார். மத்தியகிழக்கின் நுணுக்கமான நிலைமைகளுக்கு ஒரு தீர்வைக்காணும் அதிகாரமுள்ள எந்தவொரு சமாதானத் தூதுக்குழுவுடனும் வேலை செய்ய ஆவலாயிருக்கிறார்".
இயல்பாகவே எனது சிந்தனைகள் சோவியத்யூனியனை நோக்கிப் போயின. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினர்: "ஸ்டாலின் மீண்டும் உடலெடுத்துவிட்டார். ஆனால் அவர் ரஷ்யாவில் பிறக்கவில்லை. வேறொரு பிரச்சனையுள்ள இடத்துக்குப் போயிருக்கிறார். அங்கே அவர் ஒரு சர்வவல்லமை பொருந்திய அரசாங்கத்தை நிறுவ நினைக்கிறார். ஏனெனில் இந்தப்பக்கத்தில் அவர் பெரிதாக ஒன்றும் கற்கவில்லை. உறவுகளையோ தொடர்புகளையோ தனக்கனுகூலமாக மாற்றி அதனால் நன்மையடையும் தந்திரத்தைப் பரப்ப இன்னும் எண்ணுகிறார். உண்மையில் அவர் திரும்ப வருவதற்குத் தயாரில்லை. கடைசி நிமிடத்தில் இன்னொரு ஆத்மா விலத்தியதால் அவர் வரவேண்டி வந்துவிட்டது. அதன் காரணமாக ஸ்டாலின் ரொடீஷியாவில் (Rhodesia) புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலை எடுத்துள்ளார். நீ அறிய விரும்பியதால் இதனைச் சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு.
கார்ல் மாக்ஸ் (Karl Marx) இன்னும் இங்கேதான் இருக்கிறார். ஸ்டாலினுக்கு அவரால் எந்தவிதமான பலனுமில்லை. இருவருமே ஒரே விதமாக ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டனர். நானறிந்தவரையில் இங்கே இருவரும் ஒருவிதமான கருத்துப் பரிமாற்றமும் செய்து கொள்ளவில்லை. தனது உன்னதமான கனவாகிய மனிதசமுதாயத்தின் சமத்துவக் கொள்கையை ஸ்டாலின் தலைகீழாகக் கவிழ்த்து விட்டாரென மாக்ஸ் எண்ணுகிறார். இப்போ அவர் முற்றுமுழுதான மாக்ஸிச இயக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு அறிவாளிகளுக்கு உதவமுனைகிறார். மனிதமனங்களிலே முன்னேற்றமான பாதிப்புகளை ஏற்படுத்தியவரென்றுதான் தான் நினைவுகொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அது பிழையான திட்டமாகும். பௌதீக உலகில் எமது உயர்மதிப்பெண்களை நினைவுகூர விழையக்கூடாது. மக்களுக்கு என்ன செய்தோமென்பதே கருத்தில் கொள்ளப்படும். மனித இனத்தின் முன்னேற்றப்பாதைக்கு மாக்ஸ் உண்மையில் உதவினாரா அல்லது உபத்திரவமாக இருந்தாரா என்பதை நான் சொல்லவியலாது".
தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson)? "ஆம் அவர் வேர்ஜீனியாவில் (Virginia) வசிக்கிறார். இன்னும் இளம்பருவத்திலேயே இருக்கிறார். அவர் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. ஜெபர்சனைப்போல இப்படி வளர்ச்சியின் உச்சக்கட்டத்தையடைந்த ஆத்மாக்களுக்கு நேர்வதைப்போல அவருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது".                                                       
தொடரும்.........................          

Monday, December 26, 2011

தான் புனிதத்தொண்டர் அந்தஸ்துக்குப் பொருத்தமானவரெனத் தன்னைப்பற்றிக் கருதிய ஒருவரைப்பற்றி மார்ச் முப்பதாம்திகதி எழுதுகையில் ஆர்தர் போர்ட் தனது கதைசொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டுநாள் நடந்த அந்த உரையாடல் மிகச்சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் இங்கே வந்ததும் கடவுளின் அரியாசனத்துக்கு செயின்ட் காப்ரியால் (Saint Gabriel) தன்னை அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:
"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லையென அனைவருக்கும் சொன்னார். களவெடுத்தலோ, கொள்ளையடித்தலோ, அடுத்தவரை ஏமாற்றுதலோ, அல்லது கற்பழித்தலோ போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லையாதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லையெனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும், சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை பார்த்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்குமுன் இந்தப்பிறவிதான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். அவருக்குக் கடைசியில் ஒரு குணப்படுத்தமுடியாத ஆனால் குறுகிய வருத்தம் வந்ததால், தனது உறவுகளுக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்துவிட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பணஉதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்தபின் சிலருக்கு ஆத்மஉலகில் திடீரென்று விழிக்கையில் ஏற்படும் மிகநீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்புநிறைந்த பூமியைக்கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலையலையான வெள்ளையாடையில் நிற்பதைக்கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப்பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லையென நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்றார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களையழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்கள்.
"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டார்கள். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லையென வியந்தார். எவ்வளவுக்கெவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ, அவ்வளுவுக்கவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதியவைப்பதுதான் தான் செய்யவேண்டிய ஒன்று என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பதுபோல் மகிழ்ச்சியாரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் செயின்ட் கேப்ரியால் (Saint Gabriel) எங்கேயெனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லையென்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்கள் எனக்கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போலிருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேனென்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு நேரமில்லை என்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுப் போவதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக்கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாழியின் குடிலைக்கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக்கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதியபருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
"ஆத்மஉலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக்கொள்வதால், புதிதாக வந்தவர் அச்செருப்புத்தைப்பவரைப் பார்த்து, அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லையென்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை, அவை தேய்ந்து பழுதாகாமலிருக்க என்ன செய்யவேண்டுமென்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். புதிதாக வந்தவர் செயின்ட் பீட்டர் அல்லது செயின்ட் கேப்ரியால் இடம் போவதற்குரிய வழி எப்படி என்று கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத்தான் அவர் கருதுகிறார் என இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத்தேடுவதற்குமுன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள் அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித்தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும்முற்றும் பார்த்தார். ஆனால் அந்த வயதானவரைத் தவிர வேறெவரும் தென்படவில்லை. சிறுவர்கள் போய்விட்டிருந்தார்கள்.
"அவர் வயதானவரை விழித்து 'வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத்தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்டநேரம் எடுத்ததனால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்குச் சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது, அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.
"அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உள்ளே பார்' என்றார். அவர் செருப்புத்தைப்பவரின் குடிலைச் சுற்றிப்பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். "எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப்படைத்தவனுடன் இணைவதற்குமுன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, 'நானொரு பிழையும் செய்யவில்லையே. எனது வாழ்வு ஒரு மாசுமறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்.' என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லமுன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், 'நண்பனே, உனது கர்வத்தைப்பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றார். புதியவர் குழம்பினார். 'ஆனால் நிச்சயமாக, நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்றவாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்' என்றார்.
"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்' என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், 'பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான், இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது அப்பிறவியில் நான் ஒரு மதபோதகராயிருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவிவந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழுநிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன்தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும், புனிதநாட்களிலும் நான் மாமிசம் அருந்தியதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து, மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்தபோது, தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனிதமும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்குநேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலகநேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின்தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன். 
"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்கள் என்று  எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருக்கும். நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயென்றாலும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழைத்தோம்?' என்றார் அவர். "
"அச்செருப்புத்தைக்கும் முதியவர், தனது கருவிகளைக் கீழேவைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். 'மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?' என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், 'நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப்பற்றி சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினாவிடைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்குபோட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக்கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப்பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உன் கைகளிலே எடுத்துக்கொண்டு 'வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்' என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடனிருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் நினைத்ததனால், நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்' என்றார்.
"செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய, இப்போ அவர் கலிபோர்ணியாவிலிருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதைக் கண்டார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப்படுத்திருக்க, அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித்தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டுவிட்டு 'நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்' எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, 'ஆம், ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்' என்றாள். அம்மனிதர், 'அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?' என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள், பெருமூச்சுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். மேலும் தொடர்ந்து, 'அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் முழுக்கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறதென்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். 'அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நினைக்கிறாயா?' என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே நேரத்தில் அவர் இவ்வளவும் கடவுளைத் திருத்தத் தொடங்கியிருக்க மாட்டாரென நினைக்கிறேன். ஒரு புனிதத்தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத்தானே சுயநியமனம் செய்துகொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.
அத்துடன் அவ்வெழுத்து முடிவடைந்தமையினால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடருவார்" என எழுதினார். உடனே போர்ட் (Ford) தொடங்கினார். "காலைவந்தனம் ரூத், தான் கண்ணைப்போல பாதுகாத்துவந்த தனது மனையாள் ஏன் தன்னைப்பற்றி இவ்வாறு கதைக்கிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டுணரட்டுமென அச்செருப்புத்தைக்கும் முதியவர் இவரிடமே விட்டுவிட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடிவாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி ஆட்சேபித்துக் கொண்டிருக்கையில், தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனையுணர்ந்தார். அவர்கள் தாங்களாகவே விளங்கிக்கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்லபெயர் வரவேண்டுமென்பதற்காகவும், வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும், பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.
"இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து, தான் கடவுளுக்கும், ஏனையோருக்கும் சேவை செய்ததையும் பார்க்கக் கூடிய அளவு தன்னையொரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டுமென்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதனையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும், புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டுவரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும், உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வதுதான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளையடவதற்குரிய வழியென அவர் உணரத்தொடங்கினார். திருத்தொண்டர்போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுலகில் செறிவூட்டியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப்பணிகளானவை வெறுமனே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.
"அச்செருப்புத்தைக்கும் முதியவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச்  சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்மமுன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது மிகச்சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது மிகமகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்தபோதிலும் பார்க்க இப்போதான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என அவர்களுக்குத் தெரியும். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முழுமுயற்சியெடுப்பது என முடிவு செய்தார்கள். எனவே இருவரும், அம்மதபோதகர் தான் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தங்கியிருந்த அச்செருப்புத்தைக்கும் குடிலை விட்டு விட்டு ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அவர்களிருவரும் இப்போ இங்கே கற்கிறார்கள். எங்களது இரட்சிப்பின் இரகசியமானது பூவுலகில் நாமிருக்கையில் எங்களது முகங்களிலிருந்த மூக்குகளைப்போல மிகவும் வெளிப்படையானது என இப்போ கிரகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.
நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கான முதன்மைக்காரணம் இங்கிருக்கையில் நாம் அறிந்துகொண்ட பிரபஞ்சத்தின் அந்தப் பிரதான விதியைப் பூவுலகில் செயல்படுத்துகிறோமா என்பதனை அறிவதேயாகும். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும், எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப்போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கிடையிலும், நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாதநிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காதவகையிலும், எரிச்சலூட்டாத வகையிலும், அவர்களுக்கும் எமக்கும் ஒத்துவரக்கூடியதான ஒரு வாழ்க்கைமுறையைக் கைக்கொண்டோ வாழப்பழகவேண்டும். எமது சிருஷ்டிகர்த்தாவின் இராச்சியத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீகமுன்னேற்றம் அடைகிறோம்.
"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்றபிற்பாடு, தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்குகந்த ஒரு ஆத்மாவைக் கண்டுபிடித்ததையெண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்தவழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். சாசுவதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"
ஒரு சில நாட்களின் பின் போர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இருதயத்தையும், மனத்தையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். பிரதிநிதித்துவ அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்புவழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவரநினைத்தார். அவர் இந்தப்பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற்கதவைத் தேடித் தன்னைச்சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால்நீட்டிப்படுத்துக்கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென நினைத்துக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, 'சேர், இங்கே பாருங்கள் நான் மேரி ப்ளங் (Mary Blunk) என்னைக் கடவுளிடம் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்றாள்.
"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்றுநேரத்துக்கு ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால், தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால், அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச்சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற்கதவருகில் வந்தார். ஆனால் அப்படலை அவர் எதிர்பார்த்தது போல ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற்காவலனோ ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து தோட்டவழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளைகொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் இறைவனின் இருக்கையை எவ்வளவு விரைவில் அடையமுடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பினார். போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக்கொண்டோ இருந்தார்கள். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டே விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு மேலே கஷ்டப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்த சிலரைத் தாண்டிச்செல்லும் நோக்கத்துடன் அவர் விரைந்தார். இறங்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்களெனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறார்களெனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.
"அவருக்கு முன்னே போய்க்கொண்டிருந்தவர்களை விலத்திக்கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக நினைத்தாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரிசெய்து கொண்டாள். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதிசெய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக்கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார்.  அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக்கொண்டு, அவனிடம் இனிமையாக, "தயைகூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத்தாழ்த்தி வணங்கல்வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்: "ஆனால் அம்மணி, நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருக்கிறார்கள்' என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி, நெருங்கிக்கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்கவைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டுவரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக்கொண்டு பின்வருமாறு பதிலிறுத்தான்: 'ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் எப்படி நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்?' என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.
இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதன் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமான மாதிரி இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக்கோப்பையை ஏந்திக்கொண்டு தான் அவனைக் கடந்து போகையில் நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டுகொண்டாள். 'நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என அதிகாரத்தொனியில் கேட்டாள். அதற்கு அவன், தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும், தான் இப்போ தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலிறுத்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறுபடிகளிருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆத்மீகமுன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும்முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக்கொண்டு, அவரிடம் தன்னை நேரடியாக இறைவனின்பால் இட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். அதற்கு அம்மனிதர், 'அம்மணி!, நாமெல்லோரும் கடவுளே' எனப் பதிலிறுத்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக்காட்டுகையில் அப்பிச்சைக்காரக்கிழவனையும் சேர்த்துத்தான் காட்டுகிறான் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்தமாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. 'பகிடிவிடுவதை நிறுத்திவிட்டு என்னைப்படைத்தவனிடம் என்னையழைத்துச் செல்லுங்கள்' என்றாள் அவள்.
அவ்வழகிய வாலிபன், 'ஆனால் அம்மணி, அவர் உங்களை மட்டுமல்ல எம்மேல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப்பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையையடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும்வரையும், இடைப்பட்ட இக்காலகட்டத்தில், அங்கே நின்றுகொண்டிருக்கும், நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுனராக இருப்பார்' என்று பதிலிறுத்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள்! அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டுனராக ஏற்கவியலாதென்றும், வேறெவரையும்கூட அந்தவிதத்தில் ஏற்கவியலாதென்றும், தனக்குக் கடவுளுடன் மட்டும்தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்துவிட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் கடவுளெங்கே என்று கேட்டனர். அவர்களெல்லோரும் கடவுள் எங்கே இருக்கிறாரென அறியவிரும்பினர். வேறுபலரும் மேலே வந்து சேர்ந்துவிட்டிருந்ததால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.
"கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிகவினிமையான குரலில், 'கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்புவடிவிலானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்புசெலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும்  கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலைசெய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றமடைந்துள்ளீர்களா என்று கவனித்துப்பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, 'எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?' என வற்புறுத்தினாள். 'நீங்கள் அதில் இருந்துகொண்டிருக்கிறீர்கள் அம்மணி' என அவ்விளைஞன் பதிலிறுத்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்தவிதமான ஆசனமுமில்லையென்பதனைக் கண்டுகொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்லவருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளோ இல்லையோ என்பதை வேறெவரும் சொல்லமாட்டார்கள். அவளே அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்றவாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றிய அதிக அக்கறையில், தனது தகுதிக்குக் கீழ்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்துகொள்ள மறந்துவிட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளையாடையில் கறைபடிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழேயிருந்தவர்களினால் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்குள்ளேயே இருந்தன. இறைவனால்கூடத் தீர்ப்பு வழங்குகையில், இப்படி நேரே நின்று பார்த்ததுபோல அவள் தன்னைத்தானே அலசி ஆராய்ந்தவாறு  கதைத்திருக்க இயலாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனக்கருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசியாராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த, செய்யாத பிழைகளைக் கண்டுபிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும்தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.
மறுநாட்காலை, போர்ட், புதிதாக வருகை தந்திருந்த, பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை நினைத்து வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச்சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின்போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும், குழந்தைகளையும் பிரிந்ததை எண்ணி மனங்கலங்குவதால், ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார்செய்ய ,மறுக்கின்றாள். ஆர்ட் நேரே சொல்லட்டும்:
அவள் தனது கணவரையும், பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவைப்படுகிறதென அவள் நினைத்தாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொருவிதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேதவாக்காக இருந்தது. இந்தப்பக்கத்தில் இருக்கும், இப்படிப்பட்டவர்களுடன் பணிபுரிந்து பழக்கப்பட்டவர்கள், அதற்குரிய சாதனங்களுள்ள ஆத்மாக்கள் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு, பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை யாற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும், இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத்தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமுமிருக்கலாகாது என்று கற்பித்தனர். அவளது சொந்த முன்னேற்றம் மெதுவாகத்தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாய்ப்போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி, அவள் நம்பிக்கையும், பொலிவுமிழந்து பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.
"கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழமான நித்திரையில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ அன்றி வருடக்கணக்கிலோ நீளலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப்பழகிக்கொண்டார்கள். தான் நினைத்ததுபோல ஒன்றும் தான் அத்தியாவசியமாக அவர்களுக்கு இல்லையென்பதையும் கண்டுகொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதேபோன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில்வர வழிகாட்டக்கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீகவிழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்கபூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவுபூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்தபின் அவற்றுக்கு ஈடு செய்யவிரும்பினாள். மீண்டுமொருமுறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால், தான் தாயன்பு என்ற பெயரில் பிள்ளைகளில் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்கமுழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல், அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென அவள் உறுதிமொழிபூண்டாள். சுயநலத்துடன்கூடிய அன்புக்கும், சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.
"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பௌதீக உலகில் காணுகையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப்பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப்போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட வேண்டிவருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால், (அவர்கள் இதைப்பற்றி நினைப்பதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை நினைத்து வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி, ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொருநாள் பூவுலகிற் பிறப்பாள். 
ஆர்தர் போர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ, அவர் மதபோதகர்களைப் (அவர் அவர்களைப்பற்றிச் சொல்கையில் எப்போதும் preachers என்று தான் சொல்வார்) பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். Elsie Sechrist அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப்பார்க்கச் சொல்லிக் கூறிச் சிலநாட்களின்பின் அவர் ஒரு கிறிஸ்தவமார்க்க போதகரைப்பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின்போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும், இறப்பின்பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.
"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்களெல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழும்புவார்கள் என்பவைபோன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஒத்துப்போய்க்கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவர். தந்தையையடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியானமுறையில் வாழ்ந்தால் கடவுளின் அரியாசனத்துக்கருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப்படுவேனென நினைத்தார்.
"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து, அவர் இறுதியில் பூவுடலை நீத்தபின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்டபின், ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும்கொண்ட  அழகிய ஒரு இடத்திற்குமுன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பதுபோல உணர்ந்தார். ஏனென்றால் அவர் போதனை செய்த இடமும் இதைப்போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்கமேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கியபின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக்கவனிக்கையில் சிலமுகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப்பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப்போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் 'நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும், அது இந்த முன்பின்தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளத்து எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், 'தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மேல்லோருக்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்' என்றார்.
"சபையோர்களனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர்விளைவு அவரை ஆச்சரியப்படவைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்களனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டுகளித்ததாகவும், அவரின் நிலையைச் சரிசெய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும், கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச்சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும், பிறந்த திகதியும், இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. 'இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத்தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும், உங்களுக்குப் போதனை செய்யவேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கயுள்ளோம். அதேநேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்' என்றனர் அவர்கள்.
ஆர்தர் போர்ட்டிடம் Elsie Sechrist இன் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால், திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், 'ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப்பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்துவிட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதாரவிரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்வைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடியகாலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் ஒருசிலமாத  இடைவேளையில்  உடலைநீக்கி இங்கே வந்தபோது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்துகொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய சந்தோஷத்துக்காகவும், ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால், அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில்கூடக் கருதவியலாத அளவு மிகச்சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் ஸ்தாபனமில்லாவிடினும், ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதொரு உன்னதநிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச்சமீபத்திய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென்று இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நடந்துவிட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப்பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்துவிட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்தபின்தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால்தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதில்லை. அவர்களிருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லையாயினும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் அப்படியானது.
"அவர்களிருவரும் இப்போ ஒன்றாகவிருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலேயன்றி எந்தவொரு சக்தியும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரியவிரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும்.  ஆனால் அதேநேரத்தில் கைவிரல்களோ, கால்விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ, சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே, சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை, சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம்முடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சிலபாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன".
ஆவிநிலையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை, ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம் - மேலும் விளக்கமாகச் சொன்னால், நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத்தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னதுபோல பால்பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணையமுடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.
நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "பாலியல் குழப்பத்துடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்கள் இங்கே தான் ஆணாகப் பிறப்பதா, பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்களாகும். அதனால் இந்தவிதமாகவோ அந்தவிதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது மாறுபட்ட எண்ணவடிவங்களாகும். இப்படிப்பட்ட ஏறக்குறைய பிரத்தியேகமான சூழ்நிலைகளில் சிலநேரங்களில் இப்படிப்பட்ட உடல்களை, தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் எடுக்கின்றன" என்றார்.

No comments:

Post a Comment