Saturday, 2 June 2012

சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிமுறைகள்


நம் நாட்டில் தற்போது 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் `ஜலதோஷ' பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் வெவ்வேறு வகையான வைரஸ்கள்தான். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது.
 
இதற்கு அடுத்தபடியாக நமது தவறான உணவுப் பழக்கம், உணவு மூலமாகவும் வைரஸ் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்கி வருகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று.
 
அதன் பிறகும் ஜலதோஷம் குணமாக வில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது மூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-
 
ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத்தான் சைனஸ் திகழ்கிறது. ஜலதோஷத்தால் உருவாகும் சளி சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது.
 
அறிகுறிகள்:
 
சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலைபாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற  மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.
 
சைனஸ் அறைகள்:
 
மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன. நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன.
 
முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே தடுக்கும்
 
வழிமுறைகள்:
 
 சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
 
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
 
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.
 
குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம்.

No comments:

Post a Comment