Saturday 5 May 2012


நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்
அக்டோபர் 30,2009,
15:30  IST
* நம்முடைய இந்த பிறவியில் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் பலன்கள் முந்தைய பிறவியில் நாம் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றையும் பொறுத்தது. இதனைப் பிராரப்தம் என்று சொல்வார்கள்.
* இந்தப் பிறவியின் அமைப்பு முன் ஜென்மத்தை பொறுத்தது என்றால், அதன் பலாபலன்களை நமது முயற்சியால் சாதகமானதாக, பக்குவமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு புருஷார்த்தம் என்று பெயர். 
* ஆற்றில் நீர் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வேகமாக ஓடுவது போன்றது பிராரப்தமாகும். வாழ்க்கைப்பயணமும் இதைப் போன்றே நமக்கு அமைந்து விடுகிறது.
* இருந்தாலும்கூட, நீச்சல் தெரிந்தவன் நீரின் ஓட்டத்திற்கு எதிர்திசையில் பயணம் செய்ய முயற்சிப்பதைப் போல, பயிற்சியாலும், முயற்சியாலும் நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. அதனால், வாழ்க்கையின் போக்கினை மாற்றவேண்டுமானால் நீங்களும் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள்.
* வாழ்க்கையை நெறி தவறாமல் வாழ்ந்து, நமது முயற்சியைக் கடமை உணர்வுடன் மேற்கொண்டு செயலாற்றி, முடிவை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன் நிச்சயம் முன்வினைப் பயனாகிய பிராரப்த வினை ஏற்படுத்தும் தடைகளை வெல்ல முடியும். 
சின்மயானந்தர்

நம்மால் ஏதும் நடக்கவில்லை
செப்டம்பர் 08,2009,
15:30  IST
* நான் செய்கிறேன்; நான் சாதனை புரிந்தேன்; என்னாலேயே செய்ய முடிந்தது என்பன போன்றவை எல்லாம் ஆணவத்தின் அடையாளங்கள். நாம் செய்பவை அனைத்தும் இறைவனால் நிகழ்ந்தவை என்று எண்ணும்போது நம்முடைய ஆணவம் மறைகிறது.


* சாதிக்கும் போது நாமே சொந்தமாக சாதித்து விட்டதாக எண்ணிக் குதித்து மகிழ்கிறோம். பெருமையால் தலைகனத்து விடுகிறது. ஆனால், தவறுகள் நேர்ந்து நாம் துன்பப்படும் போது, "ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ?' என்று குமுறுகிறோம். "கடவுளே! உனக்கு கண் இல்லையா?' என்று கதறுகிறோம்.


* இறைவன் நமக்கு சக்தியையும், சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறான். அதைக் கொண்டு நல்ல செயல்களை செய்யும் வாய்ப்புக்களை மட்டுமே நாம் தேடிப்போக வேண்டும்.

இன்றே நல்ல நாள் தான்!
ஆகஸ்ட் 04,2009,
13:13  IST
* நல்ல விஷயங்களை கொஞ்சம் படித்தாலும் ஆழ்ந்து படிக்க வேண்டும். அதை மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் பலனை நாம் பெற முடியும்.

* வாழ்வில் செல்வம் சேர்க்கக் கூடாது என்றோ, செல்வத்தை விட்டு விலகவேண்டும் என்றோ ஆன்மிகம் வலியுறுத்தவில்லை. செல்வத்தின் மீது தணியாத ஆசைகொண்டு அலையக்கூடாது என்றே அது சொல்கிறது.

* எப்படி ஆரம்பிப்பது என்றும் கேட்காதீர்கள். எப்போது ஆரம்பிப்பது என்றும் கேட்காதீர்கள். இன்றே நல்லதைத் தொடங்குங்கள். நல்லசெயலைச் செய்வதற்கு இன்றைய தினத்தை விடச் சிறந்த நாள் வேறில்லை. கீதையையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் இன்றே தொடங்குங்கள்.

* சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக சேமியுங்கள். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து புண்ணியத்தை தேடுங்கள். 

* பலரும் ஓய்வு பெற்றபிறகு நல்லவற்றைச் செய்யலாம் என்று காத்திருக்கின்றனர். ஆன்மிகம் இப்போதே உங்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறது. அதை எளிய முறையில் படிப்படியாக பின்பற்றி முன்னேறுங்கள்.

- சின்மயானந்தர்


No comments:

Post a Comment